top of page
Search

12 மணி வேலை மசோதா நிறுத்திவைப்பு! முதல்வருக்கு அனைத்து கட்சியினர் பாராட்டு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Apr 25, 2023
  • 2 min read
ree


முதல்வருடன் கூட்டணி கட்சியினர் சந்திப்பு - 12 மணி நேர வேலை மசோதா நிறுத்திவைத்தந்தாக நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்கள்....


தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், 12 மணிநேர வேலை தொடர்பான தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா மீதான மேல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக எப்போதும் தொழிலாளர் சமுதாய தோழனாக, தொண்டனாக, காவல்அரணாக விளங்கும் என்பதற்கு, செயல்படுத்திய திட்டங்களே சான்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கடந்த ஏப்.12-ம் தேதி தாக்கல் செய்தார். பேரவைக் கூட்ட நிறைவு நாளான கடந்த 21-ம் தேதி, பல்வேறு கட்சி உறுப்பினர்களின் அதிர்ப்புத்தியையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

ree

இந்த சட்டத் திருத்தத்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, தமிழக அரசு அறிவித்தபடி, சென்னை தலைமைச் செயலகத்தில் முக்கிய தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த சூழலில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்), அந்திரிதாஸ் (மதிமுக), கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), ரவிகுமார் (விசிக) கே.எம்.காதர் மொய்தீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), ஜவாஹிருல்லா (மமக), தி.வேல்முருகன் (தவாக) ஆகியோர் நேற்று இரவு நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர்.

தலைவர்கள் வேண்டுகோள்: அதில், ‘தமிழகத்தில் 100-வது ஆண்டு மே தினத்தை கொண்டாடும் சூழ்நிலையில், இந்த சட்டத்திருத்தம் வந்திருப்பது, மே தின பின்னணியையே நிராகரிப்பதாக அமைந்துள்ளது. மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன. எனவே, இந்த சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சினையில் மக்கள் நலன், தொழிலாளர் நலனை கருத்தில் கொண்டு அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டுகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் பெரும் முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்கவும், குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கிலும், சட்டப்பேரவையில் தொழிற்சாலைகள் திருத்தச் சட்டமசோதா கடந்த ஏப்.21-ம் தேதிஅரசால் நிறைவேற்றப்பட்டது.

தொழிலாளர் நலனை பாதுகாக்கும் பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், தலைமைச் செயலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் 24-ம் தேதி (நேற்று) ஆலோசனை நடத்தினர்.

ree

சட்டத்தில் உள்ள விதிகள் குறித்தும், மசோதாவின் முக்கியமான பிரிவுகளில், குறிப்பாக தொழிலாளர் நலன் சார்ந்து, அவர்கள் பணிபுரிவதற்கான உகந்த பணிச்சூழல், தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்டவை குறித்தும் இக்கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.

தமிழகத்தில் உள்ள மிகச்சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீலனைக்கு பிறகே பணி நேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்றும், எந்த சூழலிலும், தொழிலாளர் நலனில் சமரசம் செய்யப்படாது என்றும் அமைச்சர்கள் எடுத்துக் கூறினர்.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கு நல்லசம்பளத்துடன் கூடிய பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, தொழிலாளர் நலன் காக்கப்பட வேண்டும் என்பதிலும் அதே அளவு அக்கறை கொண்டுள்ளது என்றும் எடுத்துக் கூறினர்.

இக்கூட்டத்தில் பேசிய தொழிற்சங்க பிரதிநிதிகள், இந்த மசோதாவை நடைமுறைப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், சிரமங்கள் குறித்து விவரமாக எடுத்துரைத்து, தங்கள்கருத்துகளை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

ஒரு நாட்டின் தொழில் வளம், பொருளாதார முன்னேற்றம், தொழில் அமைதி ஆகிய மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் அதே நேரம், தொழிலாளர் நலம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை பேணுவதும் அரசின் நோக்கமாகும்.

நாட்டில் தொழிற்சாலைகள் பெருக, அங்கு தொழில் அமைதி மிகவும் அவசியம். தொழிலாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில்அமைதி நிலவும் என்பதை உணர்ந்து, திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தொழிலாளர் நலன் பேணும் அரசாகவே செயல்பட்டு வந்துள்ளது. திமுக எப்போதும் தொழிலாளர் சமுதாய தோழனாக, தொண்டனாக, காவல் அரணாக விளங்கும் என்பதற்கு, செயல்படுத்திய திட்டங்களே சான்று.

ree

கடந்த 2 ஆண்டுகளில், தமிழகத்தில் நிலவும் தொழிற்சூழல் காரணமாகவே, தொடர்ச்சியாக பல்வேறு பன்னாட்டு மற்றும் இந்திய பெருந்தொழில் நிறுவனங்கள் முதலீடுகள் செய்து, அதன்மூலம் நமது இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

மாற்றுக் கருத்துக்கு மதிப்பு: இந்த அரசு ஒரு சட்ட மசோதாவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகிறதோ, அதுகுறித்து மக்களிடம் மாற்றுக் கருத்துகள் வந்தால், அதை ஆராய்ந்து, அதற்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்வதிலும் அதே அளவு உறுதி காணப்பட வேண்டும். அந்தவகையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மீதுபல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், தொழிற்சாலைகள் சட்டத் திருத்தமசோதா மீதான மேல் நடவடிக்கைநிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்புக்கு தொமுச, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளன.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page