+2 முடிவு நாளை.... !வெற்றி என்பதுமதிப்பெண்களில் அல்ல...! அதை எதிர்கொள்வதில்தான் இருக்கிறது.....!!
- உறியடி செய்திகள்

- May 7, 2023
- 3 min read

8.17 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை வெளியிடப்படுகிறது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு 3,324 மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்.3-ம்தேதி வரை நடந்தது. தேர்வு எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்.
அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். பல்வேறு காரணங்களால் சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை. சென்னையில் மட்டும் 180 மையங்களில் 42 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
விடைத்தாள்கள் திருத்தும் பணி 79 மையங்களில் ஏப்.10-ல் தொடங்கி 21-ம் தேதி வரை நடந்தது. இப்பணியில் சுமார் 50,000 முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன.
இதற்கிடையே, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மே 5-ம் தேதி வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டிருந்தது. பின்னர், நீட் தேர்வை கருத்தில் கொண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு மே 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிட உள்ளார்.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இணையதளங்களில் தேர்வு முடிவு: www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தாங்கள்படித்த பள்ளிகள் மூலமாகவும் முடிவுகளைஅறியலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் (NIC) மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும் என தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை மே 8 வெளியாகவுள்ள நிலையில்.
பெற்றோர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் சில நினைவூட்டல்கள் :
சமூகவளைதளத்தில் வெளிவந்த கருத்து.
மாணவர்கள் ஆர்வத்துடனும் அச்சத்துடனும் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ப்ளஸ் டூ தேர்வு முடிவு என்பது மாணவர்களின் வாழ்வில் முக்கியத்துவமானது. எனவே இயல்பாகவே இந்த நேரத்தில் மாணவர்களும், பெற்றோரும் பதற்றத்தில் இருப்பார்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்றால், விரும்பிய கல்லூரியில் விரும்பிய துறையில் படிக்கலாம். மகிழ்ச்சிதான்.
ஒருவேளை எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காவிட்டால்? அதையும் இயல்பாக எதிர்கொள்ளத்தான் வேண்டும். தேர்வு முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல!
. அதிக மதிப்பெண்கள் மட்டுமே வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. தேர்வு முடிவுகளை எளிதாகவும், சாதாரணமாகவும் எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தேவை.
“பொதுவாகப் பெற்றோர் தங்களது பிள்ளைகளின்மீது வைக்கும் அதீத எதிர்பார்ப்புகளே மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படக் காரணம். எல்லாக் குழந்தைகளும் முன்னணி மாணவர்கள் (Toppers) அல்ல என்னும் யதார்த்தத்தைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் பிள்ளைகளின் முந்தைய மதிப்பெண்கள் சராசரியாக எவ்வளவு, அவர்களது தனிப்பட்ட ஆர்வம், பலம், பலவீனம் பற்றியெல்லாம் பெற்றோருக்குத் தெளிவு இருக்கவேண்டும்.
உறவினர் பிள்ளைகளுடனோ, நண்பர்களின் குழந்தைகளுடனோ, அவர்களது வகுப்பு நண்பர்களுடனோ ஒப்பீடு செய்யக்கூடாது. `என் பிள்ளை இவ்வளவு மார்க் எடுத்திருக்கான்னு எப்பிடி வெளியே சொல்றது’ என்பதுபோன்ற வசனங்களைப் பெற்றோர் தவிர்க்கவேண்டும். தங்களது கௌரவம், பெருமை எல்லாம் பிள்ளையின் மதிப்பெண்ணில் இல்லை என்ற தெளிவு பெற்றோருக்கு இருக்கவேண்டியது அவசியம்.
`நல்லாதான் படிச்சான். நல்ல மார்க் வரும்னு சொன்னான். இவ்ளோ கம்மியா வரும்னு நினைக்கல’ என்று வருந்துவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. திரும்பத் திரும்ப புலம்புவதால் நடந்ததை மாற்றவும் முடியாது. இப்படிப் பேசுவதால் உங்களது பிள்ளையின் மனதில் `பெற்றோருக்கு நம்மால்தான் அவமானம்’ என்ற எண்ணத்தை உருவாக்கும். அது ஆபத்தான முடிவுகளை நோக்கி அவர்களை நகர்த்தக்கூடும். எனவே, அப்படிப் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
ஒருவேளை தேர்வில் தோல்வியடைந்தால் அடுத்த தேர்வில் எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம். இழக்கப்போவது ஒன்றுமில்லை. மாணவர்களைத் தோல்வியிருந்து வெளியே கொண்டுவந்து, நேர்மறையான எண்ணங்களை நோக்கி நகர்த்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. பெற்றோரும், மாணவரும் `அடுத்து என்ன செய்வது?’ எனத் தீர்வுகளை நோக்கிச் சிந்திப்பதும், செயல்படுவதும் நல்ல பலன்களைத் தரும்.
ஆசிரியர்களுக்கு மட்டுமே மாணவர்களின் நிறை மற்றும் குறைகள் சரியாகத் தெரிந்திருக்கும். எனவே பெற்றோர், ஆசிரியர்களிடம் கலந்து ஆலோசிக்கலாம். நினைத்த 'கல்லூரியில் நினைத்த படிப்பை படிக்க முடியாவிட்டால் என்ன செய்யலாம், மாணவரின் மதிப்பெண்ணுக்கு ஏற்ப வேறு எந்தெந்த துறைகளில் படிக்க வைக்கலாம் எனத் திட்டமிடலாம்.
சென்ற தலைமுறைக்கும் இப்போதைய தலைமுறைக்கும் வாழ்க்கை பற்றிய பார்வை வேறுமாதிரி இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். `"நன்றாகப் படித்து, விருப்பமான வேலைக்குப் போகவேண்டும்... கைநிறைய சம்பாதிக்கவேண்டும்’ என்று சென்ற தலைமுறையினர் சிந்தித்தார்கள். ஆனால், இன்றைய தலைமுறையோ `வாழ்க்கையை நிறைவாக மனதுக்குப் பிடித்தமாதிரி வாழ்ந்துவிட வேண்டும்’ என்றே ஆசைப்படுகின்றனர். `வெற்றி என்பது பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதுதான் வெற்றி...' என்ற தெளிவு கொண்டிருக்கின்றனர் புதிய தலைமுறையினர்.
மாணவர்கள் மனதில் நேர்மறையான எண்ணங்களைவிட எதிர்மறையான எண்ணங்கள் எளிதாகப் புகுந்துவிடும். நினைத்த மதிப்பெண்கள் வராதபோது அதிக வருத்தமும் எதிர்காலத்தைப் பற்றிய பயமும் வருவது இயல்பானதுதான். அந்த வருத்தத்தில் உறைந்துபோகாமல் நம்மால் என்ன செய்ய முடியும் என்று அடுத்த கட்டம் நோக்கி நகர்வதே புத்திசாலித்தனம்..
மாணவர்கள் தங்களது வருத்தங்கள், எண்ணங்களைப் பெற்றோர் அல்லது உற்ற நண்பர்கள் அல்லது புரிதலுள்ள உடன்பிறந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும். அது உங்களுடைய வருத்தத்திலிருந்து வெளிவர உதவியாக இருக்கும்.
அதேபோல, மாணவர்கள் மாற்றத்துக்குத் தயாராகும் பரந்த மனத்துடன் இருப்பதும் அவசியம்.
ஒருவேளை குறைந்த மதிப்பெண்களாலோ, தேர்வில் தோல்வியடைந்திருந்தாலோ அதைக் கண்டு கலக்கமடையாதீர்கள*இதனால் உங்களுக்கு மனஅழுத்தம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் அப்போது மனநல ஆலோசகரின் உதவியை நாடுங்கள்
.வெற்றி என்பது மதிப்பெண்களில் அல்ல... அதை எதிர்கொள்வதில்தான் இருக்கிறது”




Comments