top of page
Search

38 ஆண்டுகள் அரசு ஆட்சி பணி! ஜூன் 30 ல் பணி ஓய்வு! சி.எஸ்.இறையன்புவின்மலரும் நினைவுகள்!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 25, 2023
  • 5 min read
ree

மூத்தப் பத்திரிக்கையாளர் மணவை ராஜா .


38 ஆண்டுகள் தாண்டிய அரசு ஆட்சி பணி!

ஜூன் 30 ல் பணியில் ஓய்வு! சி.எஸ்.இறையன்புவின்மலரும் நினைவுகள்!!


38 ஆண்டுகள்+ 3 மாத ஆட்சி பணி முடிந்து

தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஜூன் 30-ந் தேதி ஓய்வு பெறுகிறார் முனைவர் வெ.இறையன்பு!


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் முனைவர் வெ.இறையன்பு, ஒரு நாளை கூட ஏன், ஒருமணிநேரத்தை கூட வீணடிக்காமல், சேவையாற்றுவதையே தலையாய கடமையாக அரசுப் பணியில் நீடித்து வருகிறார் என்பதுதான் இளம்தலைமுறைக்கான பாடமாகும்.

தலைமைச் செயலகத்திற்கு முதல் அதிகாரியாக வருவதுடன் அலுவலகத்தில் இருந்து வெளியேறும் கடைசி அதிகாரியாகவும் இருந்து வந்திருக்கிறார், வருகிறார் முனைவர் வெ.இறையன்பு., .!



வார நாட்களில் மட்டுமின்றி வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், சொந்த நலனைப் பற்றி துளியும் அக்கறை கொள்ளாமல், அரசுப் பணியாற்றுவதிலும் மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதிலும் தணியாத ஆர்வம் காட்டுபவர் வெ.இறையன்பு

அறிமுகமே தேவையில்லாத அளவிற்கு தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் தரணியெங்கும் பிரபலமாகியிருப்பவர்.!


நாளிதழ் ஒன்றுக்கு அவர் கொடுத்த பேட்டியின்போது.....!

ree

நான் படித்தது கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பள்ளி இறுதி தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரி முடிவு செய்து, விண்ணப்பம் போட்டதுமே, அதே பரபரப்புடன் கல்லூரி பற்றி விசாரிக்க அந்த வளாகத்திற்கு சென்று விட்டேன். எண்ணூறு ஏக்கரை தொடும் பரப்பளவு கொண்ட விசால வளாகம். சுவரோவியம் போன்ற பிரதான கட்டடமும் அதன் மூலம் பாற்கடலாய் விரிந்த பசும்புல் வெளிகளும் உயிருள்ள மரங்களும் பல வடிவங்களில் செதுக்கப்பட்ட செடி சிற்பங்களும் வண்ணங்கள் காட்டி வளமாய் சிரித்த வகைவகையான மலர்களும் பார்த்ததும் பரவசமாகிவிட்டேன். அந்த பிரமாண்டத்தின் முன் நான் சிறு பனித்துளியாக ஆகி போனேன். இங்கேயே தங்கிவிடலாமா என்று ஒரு ஏக்கம்!.


முக்கிய கட்டடத்திற்கும் முன் நுழைவு வாயிலுக்கும் இடையே இருக்கும் தூரம் அதிகரிக்கும் போதே கட்டுமானத்தின் பிரமாண்டம் வெளிப்பாடும், அதனால் தான் பெரிய கோயில் முதல் பார்வையிலேயே மனதில் மச்சமாய் படிகிறது. அப்படித்தான் எங்கள் கல்லூரி வளாகமும் முகப்பு இடைவெளியால் அதிகம் தகதகத்தது.

சின்ன வயதிலேயே செடிகள் மீதும் மரங்கள் மீதும் பூக்கள் மீதும் பூச்சிகள் மீதும் எனக்கு நேசம் அதிகம். மரங்கள் மண்ணின் வரங்கள். அரற்றும் காற்றின் கரங்கள் என கிறுக்கி திரிவேன். எழுதியவுடன் படித்து காட்டி பாராட்டு பெற எங்கள் வீட்டில் உள்ளவர்களை நச்சரிப்பேன். இதனால் காகிதத்துடன் என்னை பார்த்தாலே வீட்டில் உஷாராகி பி.டி. உஷாவாகி விடுவார்கள்.க்ஷ

அப்படிப்பட்ட எனக்கு, விவசாய படிப்பு என்றால் கேட்கவா வேண்டும். கல்லூரி திறக்கும் நாளுக்காக கனவுகளோடு காத்திருக்க தொடங்கினேன்.

வேளாண் பல்கலைக்கழகம் கல்வி முறை வேறுபட்டதாய் இருந்தது. காலை ஏழு மணிக்கே செயல்முறை வகுப்புகள் ஒரு நொடி தாமதமானாலும் வருகை மறுக்கப்படும். இரண்டு வகுப்புகள் தவறினால் தேர்வு எழுத அனுமதிக்கமாட்டார்கள். மறுபடி இளைய மாணவர்களுடன் படிக்க வேண்டும். எனவே ஒவ்வொரு வினாடியும் விழிப்புணர்வுடன் விளங்க வேண்டும். எங்களுக்கென்று நிலம் ஒதுக்கப்பட்டு அதில் நாற்று நடுவதிலிருந்து அறுவடை செய்வது வரை அத்தனை பணிகளையும் நாங்களே செய்யவேண்டும். மகசூலில் வருகிற உபரி வருமானம் எங்களுக்கே.

நாங்கள் ஆறு மணிக்கே எழுந்து விடுவோம். ஆறரைக்கு இரண்டு ஊத்தப்பங்கள். பிறகு காக்கி சீருடையுடனும் மண்வெட்டியுடனும் மிதிவண்டியில் அன்றைய பயணம் தொடங்கும்.!

ree

களையெடுப்பதிலிருந்து வரப்புக்கு வகுடெடுப்பது வரை செய்து பூமித்தாயை அழகுப்படுத்துவோம். மாலையில் செடி வகைகளை சேகரித்து பள்ளி மாணவர்கள் மயிலிறகுகளை புத்தகங்களுக்கு நடுவே சேமிப்பது போல், காகிதங்களுக்கிடையே வைத்து காய வைப்போம். பயிர்களை தாக்கும் பூச்சிகளை அறிய சயனைடு குப்பியில் அவற்றை வலைபோட்டு பிடித்து திணித்து பின்னர் தெர்மாகோலில் பதப்படுத்துவோம். இரவு நேரங்களில் பல காத தூரம் மிதிவண்டியில் பயணித்து விளக்கு பொறிகளில் இருக்கும் அரியவகை பூச்சிகளை யாருக்கும் தெரியாமல் அபகரிப்போம். இரவு நேரம் ஒரு மாணவன் எழுதிய செயல்முறை நோட்டு சுற்றுக்கு சென்று அத்தனை பேரையும் நகலெடுக்க வைக்கும் அசலாக மாறும். எனவே தவறுகளும் சீருடையை போல பொதுவுடைமையாக்கப்படும்.

பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பூசாரிபாளையம் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள். இதானல், அவ்வப்போது பால்பண்ணையில் இருக்கும் மாடுகளிடம் பால் கறக்கவும் மாணவர்கள் செல்ல வேண்டியதிருக்கும் வழக்கமாக பலபடி கறக்கும் மாடுகள். எங்கள் நடுங்கும் கைகள் பட குறைந்த அளவே கொடுக்கும்.

வேளாண் பல்கலைகழகத்தில் ஆண்டுக்கு மூன்று தேர்வுகள், தொண்ணூறு மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே முதல் நிலை. 89.5 என்ற கூட இரண்டாம் நிலை. அறுபதுக்கும் கீழ் தேர்ச்சியின்மை. எனவே, தேர்வுக்கு முதல் நாள் நாள்ளிரவு வரை படிப்போம்......!

ree

கல்லூரியில் சேரும்போதே பதக்கங்கள் எதுவும் வாங்க முயற்சி செய்ய போவதில்லை. என்ற தீர்க்கமான முடிவை எடுத்ததால் பதட்டமில்லாமல் சுதந்தரமாய் இருந்தேன். வருத்தாத கல்வியாய் படிப்பு தொடர்ந்தது. ஆனால் அதிக தேர்வுகள் நினைவாற்றலை வளர்க்கவும், துல்லியமாய் விடை தரவும் கற்றுத் தந்தன.

கல்லூரி இப்படியென்றால், விடுதி வாழ்க்கை இன்னும் பல விசித்திரங்களைக் கொண்டது. அனைவரையும் நேசித்து, தண்ணீரைக் கண்டு மட்டும் பயந்த நண்பர்களும் இருந்தார்கள். அப்போதே தன்னை விஞ்ஞானியாய் வரித்துக் கொண்டு, காற்றில் கணக்குப் போட்ட அறிவுஜீவிகளும் இருந்தனர். “உன் வானம்பாடி இதுவல்ல; குன்றையே இமயமென எண்ணி குன்றிவிடாதே என அறிவுறுத்திய முதிர்ந்த நண்பர்களும் இருந்தார்கள்.!


பள்ளி, கல்லூரி இரண்டு வகுப்புகளிலுமே கடைசி வரிசை களிப்பூட்டுவது. யாரும் நம்மை அதற்கு மேல் பின்னுக்குத் தள்ளவே முடியாது. பாடம் அயர்ச்சியை அதிகரிக்கும் பொழுது, நெப்போலியன் சில நிமிடங்கள் குதிரையின் மீது அமர்ந்து தூங்குவது போலத் தூங்கிக் கொள்ளலாம். பள்ளிப் பருவத்திலிருந்தே கடைசி வரிசையை நேசித்தவன் நான். முரட்டு நண்பர்களே முக்கியம். அவர்கள்தாம் சிக்கலில் சிக்கிக் கொண்டால் சீர்திருத்தம் பேசாமல் முட்டியை நமக்காக உயர்த்துவார்கள். நம்மோடு அவர்களுக்குப் போட்டியும் இல்லை.!

ree

கல்லூரியிலும் கடைசி வரிசை... பேராசிரியர்கள் சொன்ன செய்தியையே திரும்பச் சொல்லும்போது, என் கடைசிப் பக்கத்தில் கவிதைகள் பூக்கும். “எங்கள் கண்ணீரைப் பன்னீராக்க முடிந்திருந்தால்/பணக்காரராயிருப்போம்’; “ஆடையில்லாத சில உடல்களுக்கு ஆடை கிடைப்பது/பாடையிலே படுக்கும்போது மட்டும் தான்’; “மலர்களுக்கும் மசக்கை வர/மகரந்தம் உமிழும் மாலைப் பொழுது... என்றெல்லாம் தோன்றுகிற வரிகளை எழுதுவேன்.

கல்லூரி வளாகத்தில் தாவரவியல் பூங்கா ஒன்று உண்டு. பலவகைத் தோட்டங்களின் கூட்டமைப்பு. அடிக்கடி படப்பிடிப்பு நடக்குமளவு எழில் வாய்ந்தது. இயற்கையின் சிரிப்பு எல்லா இடங்களிலும் எதிரொலிக்கும். பூங்காற்று வீசும் அந்தப் பூங்காவிலும் என் கவிதை முயற்சிகள் தொடரும்.

என் கவிதைகளால் வெளிக் கல்லூரிகளில் - வாசிப்பை நேசித்த பல நண்பர்கள் நெருக்கமானார்கள். மரபின் மைந்தன் முத்தையா, தயாநிதி, கவிதாசன் என்று எங்கள் வாசக வட்டம் வளமானது. அவர்கள் அனைவருடைய விழிகளுமே இலட்சியக் கனவுகளை அப்போதே அப்பிக் கொண்டிருந்தன.!


எழிலண்ணல் என்பவர் பூங்காக் கவியரங்கம் நடத்துவார். அதில் எங்கள் புரட்சிகரமான வரிகள் ஒலிக்கும். எப்படியும் பொதுவுடைமை பூத்துவிடும் என்று திடமாக நம்பினோம். புரட்சிகர இயக்கங்கள் நடத்தும் “பச்சோந்தி’ வீதி நாடகத்தைப் பார்த்துப் பதற்றப்படுவோம். (இப்போதோ பஞ்சோந்திகளுடன் வாழ்வது பழகிப்போய் விட்டது.)

கல்லூரி விளையாட்டுத் திடலும் கவித்துவம் கொண்டது. நானும் விளையாடுவதுண்டு. ஆனால், என் நண்பர்களிடம் “எப்படியிருந்தது என விளையாட்டு?’ என்றால், “நாங்கள் மைதானத்தின் வெளியேயிருந்து வேடிக்கை பார்த்தோம், நீ உள்ளேயிருந்து பார்த்தாய்’ என்று பகடி செய்வார்கள்.!

ree

எங்கள் கல்லூரியில் அழகான கலையரங்கம் ஒன்றுண்டு. வாரந்தோறும் சனிக்கிழமை மாலை தவறாமல் திரைப்படங்கள் இடம்பெறும். ஆண்டுதோறும் முத்தமிழ் விழா நடக்கும். இயல், இசை, நாடகம் என்று மூன்று நாட்கள். வாசலில் பூக்களால் கோலம். உள்ளே நறுமணம் வீசும் நயமான நிகழ்வுகள். தீபம் நா. பார்த்தசாரதி, குமரி அனந்தன், புரவியரசு, சிற்பி, மேத்தா, குருவிக்கரம்பை, தமிழறிஞர் ராதாகிருஷ்ணன், சுஜாதா, பாக்யராஜ் போன்ற பல ஆளுமைகள் எங்களுக்கு அறிமுகமானது அங்குதான்.

ஒருநாள் வருவதாக ஒப்புக்கொண்ட கவிஞர் ஒருவர் கடைசி நேரத்தில் கல்தா கொடுக்க “சிவப்பு’ என்ற வண்ணம் பற்றிப் பாட முதலாண்டு படிக்கும் எனக்கு வாய்ப்பு வந்தது. என் மழலை மொழியை ரசித்த கவிஞர் புவியரசு, “உங்கள் கல்லூரி மாணவர் கவிதை எங்களுடையதைக் காட்டிலும் சிறந்ததாக இருந்தது’ என அறிவித்தார். இன்று நினைக்கும்போதும், அவருடைய பெருந்தன்மை புவியைக் காட்டிலும் பெரியது என புரிகிறது.

எங்கள் கல்லூரியின் நூல்நிலையம் உலகத்தரம் வாய்ந்தது. உலக முக்கியத்துவம் வாய்ந்த சஞ்சிகைகள் அங்கு ஏராளம்.இது கட்டமைப்பும் கம்பீரம் வாய்ந்தது. நட்சத்திர விடுதியைப் போல நளினமாக இருந்ததாலேயே, நாங்கள் அங்கு உள்ளே நுழைந்ததும் தூங்கிவிடுவதுண்டு. படிப்பை முடிக்கும் வரை அதைப் பயன்படுத்தத் தவறிய நான், குடியுரிமைப் பரீட்சை எழுதும் பொருட்டு சிறப்பு அனுமதி பெற்று வாசம் செய்தேன்.

விடுதி உணவகம் வித்தியாசமானது. !


அனுமதிக்கப்பட்ட முதல்நாள் காலை கோதுமை உப்புமா பரிமாறப்பட்டது. மூத்த மாணவர்கள் வைத்த நாமகரணம் “கோழித் தீவனம்’. உணவே இப்படி தீவன ருசியில்தான் இருக்குமோ என்ற கவலை எங்களை கவ்விக் கொண்டது. முதல் நாளன்று மாவரைக்க வசதியில்லாததால், ஒவ்வொரு விடுமுறைக்குப் பிறகும் காலையில் அதுவே பரிமாறப்படும் என்பது பிறகுதான் புரிந்தது. அதன்பிறகு வாரம் இருமுறை நெய்ச்சோறு. தொட்டுக்கொள்ள உருளை சிப்ஸ். “அதிகம் உண்ண வேண்டும்’ என்பதற்காகவே அன்று ஜிம் சென்று உருளைகளை உருட்டி உடற்பயிற்சி செய்கிற நண்பர்கள் உண்டு. சனியன்று “வெரைட்டி ரைஸ்’; ஞாயிறு “பழ இரவு’... மூன்று மாதத்திற்கொருமுறை விருந்து. எங்கள் நெய்ச்சோற்றை உண்ணவே பக்கத்துக் கல்லூரி மாணவர்கள் படையெடுப்பதுண்டு.

ஒருநாள் மதியம் வெண்டைக்காய்ப் பொரியல். என் தட்டில் நிறைய அள்ளிப் போட்டுக் கொண்டேன். என் பக்கத்திலிருந்த தேவநாதனும் ரமணனும், நான் என் தட்டில் அதிகம் போட்டதைப் பார்த்து அதிசயப்பட்டனர். நான் “வெண்டைக் காய் சாப்பிட்டால் மூளை வளரும்’ என்றேன். உடனே அவர்களும் அள்ளிப் போட்டுக் கொண்டனர். அதற்கு நான் “ஏற்கெனவே கொஞ்சம் மூளை இருந்தால் மட்டுமே வளரும்’ எனச் சொல்ல, அவர்கள் தட்டை அலாக்காகத் தூக்கிக் கொண்டு அடுத்த மேசைக்குச் சென்றது இன்னமும் நினைவிருக்கிறது.!

ree

எனக்கு அக்காலங்களில் உறக்கம் மிகவும் குறைவு. மூன்று மணி நேரம் கூட ஆழ்ந்த தூக்கம் வராது. படிப்பு அப்போதுதான் இதயத்தில் தீப்பிடிக்கத் தொடங்கியது. எதையாவது படித்துக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பேன்.

“பெரியப்பா’ என்று ஒரு பேராசிரியருக்கு பட்டப்பெயர். அவர் கடைசி வகுப்பெடுக்கும் போது, “எனக்கு நீங்கள் பெரியப்பா எனப் பேரிட்டது தெரியும்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அப்பப்பா! அவர் அதற்குப் பிறகு உண்மையான பெரியப்பாவாகவே மதிக்கப்பட்டார்.

பல பசுமையான நினைவுகளுடன் சில சோகங்களும் நினைவுக்கு வருகிறது. என்னோடு படித்தவர்களில் சிலர் இழப்பு இப்போதும் இதயத்தைப் பிழிகிறது. அழகாலும் இனிமையாலும் பல மாணவர்களின் கண்களில் கனவுகளைத் தூவிய பெண் சாந்தகுமாரி. இறுதியாண்டு மாணவர்களை விட அதிகமாக அவர் மீது புற்றுநோய் பற்று வைத்ததால் அந்த அழகிய மலர் பூரணமாய் நறுமணம் வீசுவதற்கு முன்பே விதியின் கால்களில் நசுங்கிப் போனது. விரும்பத்தகாதவை விளைவதைத்தான் விதியென்று சொல்லி விசனப்படுகிறோம்.

எல்லாவற்றையும்விட பெரிய சோகம்.... இன்று எங்கள் கல்லூரியில் பூக்களிருந்த இடத்தில் புதுப்புது கட்டடங்கள்!

நான் வேளாண்மைக்குப் பிறகு பல படிப்புகளை படித்திருந்தாலும், இன்னமும் என் படிப்பு “வேளாண்மை’ என்று முழங்குவதிலேயே மகிழ்ச்சி கொள்கிறேன். அதுவே நான் பல துறைகளிலும் கிளைகளைப் பரப்ப ஆதாரமாயிருக்கும் ஆணிவேர்.

பணி முடிந்த பிறகு சிற்றூர் ஒன்றில் விவசாயியாக மலர்களோடும் மரங்களோடும் மாடுகளோடும் மனம் விட்டுப் பேசும் நாளுக்காகவே காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் இறையன்பு!


வாழ்த்துக்கள் C.S.சார் உங்களின் நல்ல சிந்தனைகளும் செயல்களும் வெற்றிப் பெற! மன அமைதியைத்தர...!



 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page