top of page
Search

பா.ஜ. எம்பி.மீது நடவடிக்கை எப்போது!மல்யுத்தவீராங்கனைகள் பாலியல் புகார் - போராட்டம்!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Apr 25, 2023
  • 2 min read


ree

ஆசிரியர் மணவை எம் எஸ்.ராஜா...


மல்யுத்தவீரர்களின் பாலியல் புகார், பா.ஜ.க. எம்.பி.மீது நடவடிக்கை எப்போது?



இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் மீண்டும் நடத்திய போராட்டம்!


பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்திய இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.



இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டிய இந்திய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுட்டனர்.

3 நாள் நீடித்த போராட்டத்தை பேச்சுவார்த்தையில் முடிவுக்கு கொண்டு வந்த மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட மேற்பார்வை கமிட்டியை அமைத்தார். விசாரணை முடியும் வரை தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷனை ஒதுங்கி இருக்கவும் உத்தரவிட்டார்.

தனது மீதான புகார்களை திட்டவட்டமாக மறுத்த பிரிஜ் பூஷன் தலைவர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்று கூறினார். அதே சமயம் அடுத்த மாதம் நடைபெறும் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடமாட்டேன் என்றும் அறிவித்தார்.

ree

இதற்கிடையே, பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளிடம் விசாரணை நடத்திய 6 பேர் கமிட்டி விசாரணை அறிக்கையை சமீபத்தில் மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கை விவரத்தை விளையாட்டு அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை.

மீண்டும் போராட்டம்

இந்த நிலையில் நாட்டின் முன்னணி மல்யுத்த பிரபலங்களான ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். விசாரணை கமிட்டியின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும், பிரிஜ் பூஷன் மீது அளிக்கப்பட்ட புகார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

சாக்ஷி மாலிக் நிருபர்களிடம் கூறுகையில், 'பிரிஜ் பூஷன் மீது டெல்லியில் உள்ள சி.பி. போலீஸ் நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு புகார் அளித்தோம். ஆனால் இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. புகார் அளித்த 7 மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவர் சிறுமி. இது போக்சோ வழக்கு. ஆனால் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என்றார்.

நீதி கிடைக்கும் வரை...

வினேஷ் போகத் கூறுகையில், 'ஏற்கனவே போராட்டம் நடத்தி 3 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் நீதி கிடைக்கவில்லை. அதனால் தான் மீண்டும் அதே இடத்திற்கு வந்திருக்கிறோம். நீதி கிடைக்கும் வரை இதே இடத்தில் தான் சாப்பிடுவோம். தூங்குவோம், விசாரணை அறிக்கையை வெளியிட இன்னும் எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை கேட்டு கேட்டு சோர்ந்து போய் விட்டோம்' என்றார். பேசும்போது, ஒரு கட்டத்தில் சாக்ஷியும், வினேஷ் போகத்தும் வேதனையில் கண்ணீர் விட்டு அழுதனர்.

பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று பஜ்ரங் பூனியா ஆவேசமாக கூறினார்.

மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் மீண்டும் இந்திய விளையாட்டு அரங்கில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page