முதல்வர் சித்ராாயா! கர்நாடகா அரசியலில் கடந்த வந்த பாதை!!
- உறியடி செய்திகள்

- May 18, 2023
- 2 min read

கர்நாடகா முதலமைச்சர் அரியணையில் சித்தராமையா..! அரசியலில் கடந்து வந்த பாதை..!
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியும் முதலமைச்சர் நாற்காலியில் யாரை அமர வைப்பது என்ற குழப்பம் நீடித்து வந்தது. அடுத்த முதலமைச்சர் யார் சித்தராமையாவா அல்லது டி.கே.சிவக்குமரா என மில்லியன் டாலர் கேள்வி எழுந்தது. காங்கிரஸ் தலைமையும் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா நியமணம் செய்யப்பட்டுள்ளார்.
துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா வரும் மே 20-ம் தேதி பதவியேற்கிறார் எனக் கூறப்படுகிறது.
அரசியலில் சித்தராமையா கடந்து வந்த பாதை..!
மைசூர் அருகே சித்திரமன ஹூண்டி எனும் குக்கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு மகனாக பிறந்தவர் சித்தராமையா. 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி பிறந்த சித்தராமையா, சொந்த ஊரில் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து தொடக்க கல்வியை படித்தவர். மதிய உணவுக்காகவே உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்த சித்தராமையா, படிப்படியாக கஷ்டப்பட்டு படித்து மைசூரில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், சட்டக் கல்லூரியில் படித்த காலக் கட்டத்தில் சோசலிச கருத்துகளில் ஈர்க்கப்பட்ட சித்தராமையா, மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறார்.
சமூக நீதியே நமது சமூகத்திற்கு அவசியம் என சோசலிச கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட அவர், ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடன் 1977ல் லோக் தள கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். 1983ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் மைசூர் சாமூண்டிஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அப்போது கர்நாடக முதல்வராக ராமகிருஷ்ண ஹெக்டேவின் சமதர்ம கொள்கையில் ஈர்க்கப்பட்டு அவரின் ஜனதா கட்சியில் இணைந்தார் சித்தராமையா. அவருக்கு போக்குவரத்து அமைச்சர், கால்நடை நலத் துறை அமைச்சர் என பல பொறுப்புகளை வழங்கி கவுரவப்படுத்தினார் ராமகிருஷ்ணன் ஹெக்டே.

1985ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவருக்கு நிதி அமைச்சர் பதவி தரப்பட்டது. கட்சியிலும், ஆட்சியிலும் சிறப்பாக செயல்பட்டதால், 1992ஆம் ஆண்டு கர்நாடக மாநில ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சித்தராமையா, 1994ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதால்,தேவகவுடாவின் அமைச்சரவையில் துணை முதல்வர் பதவிக்கும் முன்னேறினார்.
1999ல் ஜனதா தளம் இரண்டாக உடைந்த போது தேவகவுடாவுடன் இணைந்து வெளியேறி, மதசார்பற்ற ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கினர் தேவகவுடா அக்கட்சியின் தலைவராகவும், சித்தராமையா மாநில தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
2004ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்த மதசார்பற்ற ஜனதா தள ஆட்சியில் மீண்டும் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். 2006ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார் குமாரசாமி. இதனால், அதிருப்தி அடைந்த சித்தராமையா மதசார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து விலகி, மக்களுக்கான சமூக நீதி இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி, மாநிலம் முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்களை சந்தித்து போராட்டங்களை முன்னெடுத்தார்.
இதையடுத்து, சோனியா காந்தியின் அழைப்பை ஏற்று, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சித்தராமையா, 2009ஆம் ஆண்டு பாஜக ஆட்சியை பிடித்தபோது, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார். 2013ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றதும், கர்நாடகத்தின் 22வது முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா. 2018 வரை 5 ஆண்டு ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த சித்தராமையா, 2018ல் நடைபெற்ற தேர்தலில் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றாலும், காங்கிரஸ் பெரிய அளவுக்கு இடங்களை கைப்பற்றாததால், மீண்டும் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பை இழந்தார் சித்தராமையா. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. காங்கிரஸ் தலைமை மீண்டும் சித்தராமையாவுக்கும் முதலமைச்சர் அரியணையை வழங்கியுள்ளது.




Comments