top of page
Search

தி.மு.கழகத்தை விமர்சனம்! டி.கே.ரெங்கராஜன் போன்றோருக்கு தகுதியில்லை! முரசொலி கடும் சாடல்!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 4, 2023
  • 2 min read
ree

திமுக அரசை குறை சொல்லும் யோக்கியதை உங்களுக்கு இல்லை … கம்யூனிஸ்ட் மூத்த தலைவரை கடுமையாக விமர்சித்த முரசொலி…


தி.மு.க. அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால்….’ என்று சொல்லும் தகுதியோ யோக்கியதையோ டி.கே.ஆர். போன்றோருக்கு இல்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளது முரசொலி .



இன்றைய முரசொலி நாளேட்டில் மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன் எழுதியிருப்பதாவது:


தொழிலாளர் சட்டத்தில் ஒரு திருத்தம் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டது. அதில் தொழிற்சங்கத்தினர். அரசியல் இயக்கங்கள் சில விமர்சனங்களை வைத்தார்கள். சந்தேகங்களைக் கிளப்பினார்கள். உடனடியாக இரண்டே நாளில் அந்த திருத்தச் சட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திரும்பப் பெற்றுவிட்டார்கள்.

மக்களாட்சியின் மாண்பையும். ஜனநாயகத்தின் குரலையும் அந்தளவுக்கு கண்ணைப் போலக் காத்து நின்றார் திராவிட மாடல்’ முதலமைச்சர் அவர்கள்.

மக்களாட்சியின் அறத்தை, அரசியல் அறத்தை இதைவிட மதிக்கும் தன்மை வேறு எதுவும் இருக்க முடியாது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பேருள்ளம் நடுநிலையாளர்களால் போற்றப்பட்டு வருகிறது. ஆனால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத வகையில் சி.பி.எம். கட்சியில் சிலபேர் இருக்கிறார்கள் என்பதை அக்கட்சியின் நாளேடான ‘தீக்கதிர்’ 3.5.2023 தேதியிட்ட இதழைப் பார்க்கும் போது அறிய வருகிறது.

அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.ரங்கராஜன், கோயம்பேட்டில் நடந்த மே தின விழாவில் பேசும்போது. தமிழ்நாடு அரசு குறித்த தவறான கற்பிதங்களை உருவாக்கி உள்ளார்.

“தமிழகத்தை தி.மு.க. அரசு ஆட்சி செய்கிறதா? அல்லது அதிகாரிகளும் முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா? அதிகாரிகள் அரசை தவறாக வழிநடத்துகிறார்கள். தி.மு.க. அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால். இந்தச் சட்டத்தைக் கொண்டு வரக் காரணமான அதிகாரிகளையும் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

தி.மு.க. அரசை அதிகாரிகள் தவறாக வழிநடத்துகிறார்கள் என்ற தவறான தகவலை டி.கே.ஆருக்கு சொன்னது யார்? எதை வைத்து அவர் சொல்கிறார்? எந்த முதலாளி இந்த ஆட்சியை நடத்துகிறார்? டி.கே.ஆர். இதனைச் சொல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாக நாலாந்தரப் பேச்சாளர் போல கூட்டணியில் இருந்து கொண்டே பொதுவெளியில் கூக்குரலிடுவதுதான் கூட்டணி தர்மமா? அப்படி ஒரு அவதூறு குற்றச்சாட்டை கூட்டணிக் கட்சியான சி.பி.எம்., தனது அதிகாரப்பூர்வ நாளிதழில் தலைப்பு போட்டு வெளியிடலாமா? இரண்டே நாளில் முதலமைச்சர் அவர்கள் சட்டத்தை திரும்பப் பெற்றாரே? டி.கே.ஆர். சொல்லும் ‘முதலாளி’ அப்போது எங்கே போனார்? என்ன குற்றச்சாட்டு இது? எத்தகைய வன்மம் டி.கே.ஆர். மனதில் இருந்தால் இப்படிப் பேசுவார்? எத்தகைய கோபம் இருந்தால் அதனைத் தலைப்பாக்கி வெளியிடுவார்கள்? தமிழ்நாடு சி.பி.எம். கட்சியை தவறாக யாரோ வழிநடத்தி வருகிறார்கள் என்பதுதான் நம்முடைய சந்தேகம்.

சில நாட்களுக்கு முன்னால், அக்கட்சியைச் சேர்ந்த வே.மீனாட்சி சுந்தரம் எழுதிய நூல் ஒன்றை. அக்கட்சியின் சார்பில் இயங்கி வரும் “பாரதி புத்தகாலயம்’ வெளியிட்டுள்ளது. ‘சர்வாதிகார இந்துத்துவா மாடலுக்கு திராவிட மாடல் மாற்றாகுமா?’ என்பது தலைப்பு. பிரதமர் மோடி அவர்களையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் கார்ட்டூன் போட்டுள்ளார்கள்.

‘திராவிட மாடல்’ மாற்றாகாது என்று சொல்லும் இந்த நூல், 95 ஆண்டு காலம் தமிழ்ச் சமுதாயத்துக்காக உழைத்த தலைவர் கலைஞரைக் கொச்சைப்படுத்துகிறது. ‘திராவிடம்’ என்பது இனவாதமாம். நிறைகுறைகளைச் சொல்கிறோம் என்ற போர்வையில் திராவிட இயக்கத்தை குறிப்பாக தலைவர் கலைஞரை கொச்சைப்படுத்தும் நூலை வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்கள்.

இத்தகையவர்களால்தான் சி.பி.எம். வழி நடத்தப்படுகிறதோ? அதன் குரல்தான் டி.கே.ஆர். போன்றோரது குரலோ? இதுதான் சி.பி.எம்.குரலா? என்பதே நமது கேள்வி! ‘தி.மு.க. அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால்….’ என்று சொல்லும் தகுதியோ யோக்கியதையோ டி.கே.ஆர். போன்றோருக்கு இல்லை என்று விமர்சித்துள்ளது முரசொலி .

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page