ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
- உறியடி செய்திகள்

- Feb 24, 2023
- 1 min read

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.....
ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கை கலப்பாக மாறியது.
இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினர் பே திமுகவினர் மற்றும் 3 போலீசார் உள்ளிட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக காவல்துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் அவசர வழக்காக தாக்கல் செய்தார்கள்.
இதேபோல சுயேச்சை வேட்பாளர்கள் கண்ணன், ரவி ஆகியோர் சார்பிலும் தனித்தனியாக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
கண்ணன், ரவி தாக்கல் செய்த வழக்கில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாகவும், அதை தடுக்கும்படி நடவடிக்கை எடுக்கவும் முறையிடப்பட்டிருந்தது. மேலும் தேர்தலை நிறுத்தவும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், பணப்பட்டுவாடாவை கண்காணித்து வருவதாகவும், சிறப்பு பறக்கும்படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சுயேட்சை வேட்பாளர் கண்ணன் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் சேவியர் என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கில், தங்கள் கட்சியினர் தாக்கப்படுவதாகவும், கூடுதல் சிஆர்பிஎப் வீரர்களை பாதுகாப்பில் அமர்த்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வாங்கிவிட்டு நாம் தமிழர் கட்சியினர் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தை மீறி மாற்று வழியில் பேரணி சென்றதாகவும், மேலும் கொடியுடன் கூடிய பிளாஸ்டிக் பைப்புகளில் இரும்பு பைப்களை சொருகி சென்று வன்முறையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பிலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.




Comments