மணப்பாறைக்கும் புவிசார் குறியீடு!
- உறியடி செய்திகள்

- Apr 2, 2023
- 2 min read

றெக்க கட்டி பறக்குதய்யா மணப்பாறை முறுக்கு!
தமிழ்நாட்டிற்கு புதிதாக மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைதிருப்பது மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதன்மூலம் 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.
இந்த பாரம்பரிய பெருமைக்கான காரணத்தை சற்றே ஆராய்வோம்.
உலகளவில் பழம்பெருமை வாழ்ந்த தமிழ் சமூகத்தில் உணவுப் பொருள்களில் தொடங்கி, கலைப் பொருட்கள் வரை ஆயிரக்கணக்கான பாரம்பரிய பொருட்கள் இன்றளவும் வழக்கத்தில் உள்ளன.
சிறப்பு வாய்ந்த இந்தப் பொருள்களுக்கு தொடர்ந்து புவிசார் குறியீடு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, நகர்ப்பம் நகமம் காட்டன் சேலை, மயிலாடி கற்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால்புரம் பிரம்பு வேலைப்பாடுகள், மார்த்தாண்டம் தேன், மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி ஆகிய 11 பொருட்களுக்கு புதிதாக புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இவற்றில் நினைத்தாலே மனம் நா இனிக்கும் மணப்பாறை முறுக்கிற்கு தமிழ்நாட்டில் உள்ள நொறுக்குத் தீனி வகைகளில் முதலிடம்.
அந்த அளவில் பன்னெடுங்காலமாக சுவையில் நிலைத்திருக்கிறது. மணப்பாறை முறுக்கு. மணப்பாறையில் புகழ்பெற்று விளங்கிய வளமான மாடுகளின் பெருமையை பின்னுக்குத் தள்ளி முந்தியது மணப்பாறை முறுக்கு.
இதற்கு என்ன காரணம்? காவிரி கரையில் அமைந்துள்ள திருச்சி முற்கால சோழ சோழர்களின் தலைநகரமாகும்.
தமிழ்நாட்டின் மையப்பகுதியாக, ஏன் இந்தியாவிற்கே மையப் பகுதியாகவும் விளங்குகின்றது.
திருச்சி மாவட்டத்தில் அமைந்தது தான் மணப்பாறை. இங்கு முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியே இன்றளவும் மணப்பாறை முறுக்குகள் செய்யப்படுகின்றன.
சரியான விதத்தில் பச்சரிசி, உளுந்து மாவை அளவான தண்ணீரில் சேர்த்து அதனுடன் ஓமம், சீரகத்தை போட்டு பக்குவமாய் பிசைந்து, விறகு அடுப்பில் காய வைத்த எண்ணெயில் பக்குவமாய் நிறம் மாறாமல் மணப்பாறை முறுக்குகள் சுட்டு எடுக்கப்படுகின்றன.
இதில் பக்குவம் தான் சுவையைக் கூட்டுகிறது. பாரம்பரிய முறைப்படியான தயாரிப்பு என்றாலும் ஒரு தொழிற்சாலைக்கு நிகரான அளவில் மணப்பாறை முறுக்குகள் உற்பத்தி செய்யப்படுவதால், அதை நம்பி ஏராளமானோர் தங்கள் வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.
ரயில், பேருந்து நிலையங்கள் நகரங்களைக் கடக்கும் நெடுஞ்சாலைகள் என விற்பனையை தொடங்கி வெளிமாநில மக்களின் அபிமானத்திற்கு உரிய சிறப்பை பெற்றதுதான் மணப்பாறை முறுக்கு.
நெய், வெண்ணெய், இப்பொழுது புதிதாக பூண்டு, புதினா, இஞ்சி என பொருட்கள் சேர்ந்து ஆர்டருக்கு ஏற்றவாறு முறுக்குகள் வெரைட்டிகளாக தயாரிக்கப்படுகின்றன.
இந்த நவீன காலத்தில் கவர்ச்சிகரமான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிப்ஸ் வகை தினப்பாண்டங்கள் எவ்வளவோ வந்தாலும், ஊர்களுக்கு செல்லும் வழியில் விற்கப்படும் மணப்பாறை முறுக்கை சுவைப்பதில் தான் ஆனந்தம்.
அந்த வகையில் மணப்பாறை முறுக்குகளுக்கு 'புவிசார் குறியீடு' பெற்று கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியே.
பாரம்பரியமிக்க, தகுதியான தயாரிப்பு பொருட்களுக்கு ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவு சார் சொத்துரிமை துறை இந்த புவிசார் குறியீடு அங்கீகாரத்தை வழங்குகிறது.
இந்த அங்கீகாரத்தின் மூலம் நமது தயாரிப்புகள் அல்லது நமது உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதிக்கான தகுதியை பெருகின்றன. அதுமட்டுமின்றி இந்திய பாரம்பரியத்தின், கலாச்சாரத்தின் கௌரவத்தை உலகில் அனைவரும்.அறிந்து கொள்ள முடியும்.




Comments