சர்வதேச ஆண்கள் தினம்! ஒரு பார்வை!!
- உறியடி செய்திகள்

- Nov 19, 2022
- 1 min read

*இன்று சர்வதேச ஆண்கள் தினம்*
இன்று (நவம்பர் 19) சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ந்தேதி சர்வதேச ஆண்கள் தினமாகக். கொண்டாடப்பட்டு வருகிறது. தங்களின் குடும்பங்கள் மற்றும் சமூகத்திற்கு ஆண்கள் செய்யும் பங்களிப்புகளை போற்றும் வகையிலும் ஆண்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையிலும் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
முதன்முதலில் 1999-ம் ஆண்டு டாக்டர் ஜெரோம் தீலக்சிங் சர்வதேச ஆண்கள் தினத்தை தோற்றுவித்தார். டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள மேற்கிந்திய தீவுகள் பல்கலைகழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றிய ஜெரோம் தன்னுடைய தந்தையின் பிறந்த தினத்தை நினைவு கூறும்வகையில் நவம்பர் 19-ஐ ஆண்கள் தினமாகக் கொண்டாட தேர்ந்தெடுத்தார்.
ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்கள் தினத்தை கொண்டாடுமாறு மக்களை ஊக்குவித்தார். தொடக்க காலக்கட்டத்தில் கரீபிய தீவுகளில் ஆதரவைப் பெற்ற ஆண்கள் தினம் அதன்பின்பு, தொடர்ச்சியாக பிறநாடுகளின் ஆதரவுகளையும் பெற்று தற்போது சர்வதேச அளவில்
கொண்டாடப்பட்டு வருகிறது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷியா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் 45 வயதிற்குட்பட்ட ஆண்களின் மரணத்திற்கு தற்கொலையே முக்கிய காரணம் என உலக சுகாதார அமைப்பின் தரவுகள் கூறுகின்றன. பாலியல் அடையாளம், சமூக மற்றும் கலாச்சார சீரமைப்புகள் ஆகியவை ஆண்களுக்கு மனநலம் மற்றும் உளவியல் ரீதியாக ஏற்படுத்தும் தாக்கங்களே இந்த தற்கொலைக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஆண்கள் வலிமையானவர்கள், பாதிப்பில்லாதவர்கள் என அவர்களின் வெளித்தோற்றம் கொண்டு சமூகத்தால் அளவிடப்படுகின்றனர். இதனால் உணர்வுப்பூர்வமான அவர்களின் தேவைகள் மதிக்கப்படாமல் மறைக்கப்படுகின்றன.
சர்வதேச ஆண்கள் தினம் 6 நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
நேர்மறையான ஆண் முன்மாதிரிகளை உருவாக்குவது.
சமூகம், குடும்பம், திருமணம், குழந்தை பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழலில் ஆண்களின் பங்களிப்புகளைக் கொண்டாடுவது.
ஆண்களின் உணர்ச்சி, உடல், சமூகம் மற்றமு ஆன்மீக பாதுகாப்பை கவனித்துக்கொள்வது.
ஆண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எடுத்துக்காட்டுவது.
பாலின உறவுகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி பாலின சமத்துவத்தை மேம்ம்படுத்துவதில் கவனம் செலுத்துவது.
ஒவ்வொரு இனமும் தங்கள் முழுத் திறனுடன் செழித்து வளரக்கூடிய சிறந்த மற்றும் பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவது.
ஆண்கள் தினம் பெண்கள் தினத்துக்கு போட்டியாக கொண்டாடப்படுவதற்காக உருவாக்கப்பட்டதில்லை.*
மாறாக ஆண்களின் மதிப்புகள், குணாதிசயங்களை உணர்த்தும் விதமாகவும் ஆண்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்காகவும் ஆண்களை மனம்திறந்து பேச ஊக்குவிப்பதற்காகவும் ஆண்கள் தினம் உருவாக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
தோழர், நவமணி , பதிவிலிருந்து...




Comments