திருவாரூரில் கலைஞர் கோட்டம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்! ட்ரோன்கள் பறக்க தடை!
- உறியடி செய்திகள்

- Jun 18, 2023
- 1 min read

மூத்தப் பத்திரிக்கையாளர் ராஜா.
'கலைஞர் கோட்டம்' திறப்பு;
திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருவாரூரில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை..

திருவாரூரில் 'கலைஞர் கோட்டம்' திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக, தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று திருவாரூர் செல்கிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்வர், திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் வழியாக இன்று இரவு திருவாரூர் சென்றடைகிறார்.

நாளை திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார்.
'கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி' திருவாரூர் அடுத்த காட்டூரில், சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் 7,000 சதுர அடியில், ரூ.12 கோடி மதிப்பீட்டில் 'கலைஞர் கோட்டம்' கட்டப்பட்டுள்ளது.
இக்கோட்டத்தில் 2 திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கலைஞர் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தேர் போன்ற பிரம்மாண்டமான வடிவமைப்பில் 'கலைஞர் கோட்டம்' கட்டப்பட்டுள்ளது.
இந்த கலைஞர் கோட்டத்தை வரும் 20-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார்.
முத்துவேலர் நூலகத்தை, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி திறந்து வைக்கிறார்.

திருவாரூர் 'கலைஞர் கோட்டம்' திறப்பு விழா!
கலைஞரின் கழக உடன்பிறப்புகளுக்கு..
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு கடிதம்!

ஒவ்வொரு உடன்பிறப்பின் உணர்வாகவும், உயிராகவும் உள்ள நம் தலைவர் கலைஞரின் பெயரில் உயர்ந்து நிற்கும் கோட்டத்தின் திறப்பு விழாவில்...
உங்கள் திருமுகம் காணக் காத்திருக்கிறேன்.
பகை வெல்லும் பட்டாளமாய்..
அறம் காக்கும் அணிவகுப்பாய்..
உடன்பிறப்புகளே திரண்டுவீர்!
இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு, திருவாரூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
இதே போல் திருச்சி மாவட்டத்திற்கும் ஆட்சியர் பிரதீப்குமாரும் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




Comments