கர்நாடகா தேர்தல் முடிவு! மதஅரசியலை,கையிலெடுத்தஅமைச்சர்நாகேஷ் படுதோல்வி! இனி எடுபடுமா மத அரசியல்!!
- உறியடி செய்திகள்

- May 14, 2023
- 2 min read

ஹிஜாப் தடையின் "மாஸ்டர் மைண்ட்".. படுதோல்வி அடைந்த கர்நாடக கல்வி அமைச்சர்! தேர்தலில் மக்கள் பதிலடியா?
கர்நாடகாவில் ஹிஜாப் தடையின் முக்கிய சூத்திரதாரியாக பார்க்கப்பட்ட
அம் மாநில கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் காங்கிரஸ் கர்நாடகாவின் திப்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட 18 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து உள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்பட்டது ஹிஜாப் தடையும் அதனால் வெடித்த மத வன்முறைகளும்தான். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள ஒரு அரசு பியு கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியக்கூடாது எனவும், மாணவர்கள் சீருடையை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. அரசின் இந்த உத்தரவை அடிப்படையாக கொண்டு ஹிஜாப் அணிந்த மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்தது.
அதேபோல் குந்தபுராவில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினர் காவித் துண்டு அணிந்து வகுப்புக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகள் வெளியேற்றப்பட்டனர்.
நாளாக நாளாக ஹிஜாப் பிரச்சனையும் அதனால் வெடித்த போராட்டமும் மற்ற கல்லூரிகளுக்கும் பரவி கர்நாடகாவே வன்முறைக் களமாக மாறியது. பல இடங்களில் மதவாத மோதல்கள் வெடித்தன. இந்த நிலையில் உடுப்பி மாணவிகள் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால், கர்நாடக உயர்நீதிமன்றம் அரசின் உத்தரவை உறுதி செய்து மானவிகளின் வழக்கையும் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் இரு நீதிபதி வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியதால், தடை தொடர்ந்து வருகிறது. கர்நாடகாவில் இந்த ஹிஜாப் தடைக்கு காரணமாக அமைந்த சூத்திரதாரி அம்மாநில கல்வி அமைச்சர் பிசி நாகேஷ்தான் என்று கூறப்பட்டது.

அத்துடன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹிஜாப் அணிந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் அறிவித்தார். ஈகோவை விட்டுவிட்டு தேர்வை எழுதுங்கள் என்று அவர் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சரின் இந்த பேச்சு சட்டவிதிகளுக்கு முரணானது என்று அப்போதே அம்மாநில வழக்கறிஞர்கள் சங்கம் நோட்டிசையும் அனுப்பியது.
அதேபோல், கர்நாடக பாடநூல்களில் இருந்த திப்பு சுல்தான், தந்தை பெரியாரின் பாடங்கள் நீக்கப்பட்டு, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் சாவர்க்கரின், ஹேட்கேவரின் பாடங்கள் சேர்க்கப்பட்டதும் பிசி நாகேஷின் உத்தரவின்பேரில்தான் என்ற சர்ச்சை எழுந்தது. இதனை கண்டித்த காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்கு மட்டுமே முக்கியம் என்று நாகேஷ் விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் பிசி நாகேஷ் திப்தூர் தொகுதியில் போட்டியிட்டார் நாகேஷ். தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு இருக்கும் நிலையில் திப்தூர் தொகுதியில் பிசி நாகேஷ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஷதாக்ஷாரியை விட சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் படுதோல்வி அடைந்து உள்ளார்.
கர்நாடகா தேர்தல் முடிவுகள் இனிமத அரசியல் எடுபடுமா? என்று பா.ஜ. அரசில் வட்டாரத்தை சிந்திக்க வைத்துள்ளதாக பார்க்கவேண்டியுள்ளது.




Comments