கர்நாடகா ஜனார்த்தன ரெட்டி! பா.ஜ.வுக்கு தொடங்கியதா ? தலை வலி!!
- உறியடி செய்திகள்

- Mar 30, 2023
- 2 min read

பாஜகவுக்கு தலைவலி! கர்நாடகா தேர்தலில் ஜனார்த்தன ரெட்டி கட்சியின் சின்னம் இதுதான்!! சுவாரசிய பின்னணி தகவல்கள்!!
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. பாஜகவுக்கு பெரும் தலைவலி ஏற்படுத்தும் வகையில் அதன் முன்னாள் அமைச்சரான ஜனார்த்தன ரெட்டி, கர்நாடகா கல்யாண பிரகதி பக்சா எனும் கட்சியை தொடங்கி உள்ளார்.
இந்நிலையில் தான் ஜனார்த்தன ரெட்டி கட்சியின் சின்னமாக கால்பந்தை தேர்வு செய்துள்ளார். இதன் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவலை ஜனார்த்தன ரெட்டி தெரிவித்துள்ளார்.

பாஜக வட இந்தியாவில் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்தாலும் கூட, தென்னிந்தியாவில் தனித்து ஆட்சியை பிடிக்க முடியாமல் திணறியது.
இந்நிலையில் தான் கர்நாடகாவில் மட்டும் கடந்த 2008 ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தது. தென்னிந்தியாவில் முதல் முதலாக பாஜக அதிகாரத்தை கைப்பற்றி கால்பதித்த மாநிலமாக கர்நாடகா உள்ளது.
அதாவது கடந்த 2004 சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைந்தது. காங்கிரஸின் தரம்சிங் முதல்வரானார். இந்த ஆட்சியை கவிழ்ந்த நிலையில் ஜனாதளம்(எஸ்), பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. இதற்கு முக்கிய நபராக இருந்தவர் தான் ஜனார்த்தன ரெட்டி.
அதாவது காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கவிழ்ப்பு மற்றும் ஜனாதளம்(எஸ்)-பாஜக கூட்டணி அமைய ஜனார்த்தன ரெட்டி தான் முக்கிய நபராக இருந்தார்.

இதையடுத்து ஜனதாதளம்(எஸ்) குமாரசாமி, பாஜகவின் எடியூரப்பா ஆகியோர் தலா 20 மாதங்கள் முதல்வராக செயல்பட முடிவு செய்யப்பட்டது. ஆனால் முதல் 20 மாதங்கள் முதல்வராக இருந்த குமாரசாமி, எடியூரப்பா முதல்வரான போது ஆதரவு கொடுக்க மறுத்தார். இதனால் இந்த ஆட்சியும் கவிழ்ந்தது. 2008 சட்டசபை தேர்தலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தது.

எடியூரப்பா மீதான அனுதாபம் பாஜகவுக்கு கைக்கொடுத்தது. மேலும் முதல்வர் எடியூரப்பா அமைச்சரவையில் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. பணபலம், அதிகார பலம் பெற்று அவர் வலம் வர தொடங்கினார்.*
*இந்நிலையில் தான் கனிம சுரங்க தொழில் செய்து வரும் நிலையில், சட்டவிரோதமாக இரும்பு தாதுக்களை வெட்டி எடுத்து பல கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டட புகாரில் ஜனார்த்தன ரெட்டியை சிபிஐ கைது செய்தது. 2015ல் சிறையில் இருந்து ஜாமினில் ஜனார்த்தன ரெட்டி வெளியே வந்தாலும் கூட அவரை பாஜக கண்டுக் கொள்ளவில்லை.
புது கட்சி துவங்கிய ஜனார்த்தன ரெட்டி.
இந்நிலையில் தான் பாஜகவில் அரசியல் எதிர்காலம் இல்லை என்பதை அறிந்த ஜனார்த்தன ரெட்டி புதிதாக கட்சி துவக்கி உள்ளார். 'கல்யான ராஜ்ய பிரகதி பக்சா' எனும் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். அதன்படி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஜனார்த்தன ரெட்டி தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளார். சுமார் 50 தொகுதிகளை குறிவைத்து அவரது கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் ஜனார்த்தன ரெட்டியின் கட்சிக்கு எந்த சின்னம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் தான் ஜனார்த்தன ரெட்டியின் கட்சிக்கு கால்பந்து சின்னமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பின்னணி பற்றி ஜனார்த்தன ரெட்டி விளக்கி உள்ளார். இதுபற்றி ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், ''முந்தைய காலத்தில் எனது நண்பர்கள், எதிரிகள் என அனைவரும் என்னை கால்பந்து போல் உதைத்து பயன்படுத்தி கொண்டனர். இதனால் கால்பந்தை வைத்து அவர்களின் அரசியலில் விளையாட உள்ளேன்'' என்றார்.
*தேர்தல் அறிக்கை வெளியீடு.*
பல்லாரி, கொப்பல், பீதர், யாதகிரி, ராய்ச்சூர், கலபுரகி, விஜயநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கவனம் செலுத்த உள்ளார். மேலும் தேர்தல் வாக்குறுதிகளாக ஜனார்த்தன ரெட்டி கட்சி சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அதன்படி ஒவ்வொரு வீட்டுக்கு 250 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ், எஸ்சி, எஸ்டி பிரிவு மக்களுக்கு இலவச வீட்டுமனகள், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வசதி, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.1000 சம்பளம் உயர்வு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் கர்நாடகா கல்யாண் பிரகதி பக்சா சார்பில் 12 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை ஜனார்த்தன ரெட்டி வெளியிட்டுள்ளார். இதுதவிர கொப்பல் மாவட்டம் கங்காவதி தொகுதியில் ஜனார்த்தன ரெட்டியும், அவரது மனைவி லட்சுமி அருணா பல்லாரி தொகுதியிலும் களமிறங்க உள்ளனர். பல்லாரி தொகுதியில் தற்போது பாஜக சார்பில் ஜனார்த்தன ரெட்டியின் உடன்பிறந்த சகோதரர் சோமசேகர ரெட்டி எம்எல்ஏவாக உள்ளார். மீண்டும் அவர் அங்கு போட்டியிடும் நிலையில், ஜனார்த்தன ரெட்டி தனது மனைவி லட்சுமி அருணாவை அங்கு வேட்பாளராக நிறுத்த வாய்ப்புள்ளது. இதுபற்றி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ஜனார்த்தன ரெட்டியின் இந்த செயல்பாடு பாஜகவுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கும் நிலையில், மீண்டும் ஆட்சியை தக்க வைக்க அக்கட்சி வியூகங்கள் வகுத்து வருகிறது.
இதற்கிடையே தான் பாஜக மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்துள்ளது. இது பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படும் நிலையில் தான் ஜனார்த்தன ரெட்டியின் செயல்பாடும் பாஜகவுக்கு பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது.
அதாவது ஜனார்த்தன ரெட்டிக்கு ஹைதரபாத்-கர்நாடகா பிராந்தியத்தில் செல்வாக்கு உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் அவர் பிரிக்கும் ஓட்டுக்கள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
விஜய் ஆனந்த். பதிவிலிருந்து




Comments