top of page
Search

மணிப்பூர் கலவரம்!மக்கள்மடிந்தாலும் பராவல்யிலை! பா.ஜ ஆட்சியில் இருக்க வேண்டுமா? நீதியரசர்ஹரிபரந்தாமன்

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 11, 2023
  • 3 min read
ree

மணவை எம்.எஸ்.ராஜா.....


மணிப்பூரில், வன்முறை கலவரத்தால் மக்கள் மடிந்தாலும் பரவாயில்லை பா.ஜ. ஆட்சியிலிருக்கவேண்டுமா?

நீதியரசர் (ஓய்வு). ஹரிபரந்தாமன்?


அதிரடி தீர்ப்பும், அல்லோகலப்பட்ட மணிப்பூரும்!

ஹரிபரந்தாமன் நீதியரசரின் கட்டுரையிலிருந்து.....


உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கே வராத விவகாரத்தில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பால் மணிப்பூர் பற்றி எரிகிறது!

ree

மேட்டுக்குடி மக்களை பழங்குடியினராக அறிவிப்பது பாஜகவின் விருப்பம். சென்னையில் இருந்து மணிப்பூர் சென்ற நீதிபதியால் வழங்கப்பட்டது தீர்ப்பு! இதையடுத்துத் தான் மணிப்பூர் பற்றி எரிகிறது. முழு விவரமாவது;

ree

தற்போது மணிப்பூரின் கலவரம் மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் ஏராளமான கிறிஸ்துவ தேவாலயங்கள், மருத்துவமனைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பழங்குடியினரின் வீடுகள், வாகனங்கள், கடைகள் தீக்கிரை யாக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கணக்கான மக்கள் அகதிகளாகி அரசு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மலைப் பிரதேசமான மணிப்பூரைப் பொறுத்தவரை அது பழங்குடி மக்களின் பூர்வீகம். மலைப்பிரதேசமெங்கும் பழங்குடி மக்கள் தான் வசிக்கின்றனர். சமவெளி நிலப்பகுதியான தலைநகர் இம்பாலில் பழங்குடி மக்கள் அல்லாத மேட்டுக் குடியினர் வசிக்கின்றனர். இவர்கள் பூர்வீக குடிகள் அல்ல. ஆனால், இவர்களே தற்போது பெரும்பான்மையினராக இருக்கிறார்கள் .

ree

சுமார் 60% பேர் பழங்குடி மக்கள் அல்லாதவர்கள். இவர்கள் மாநில தலைநகர் இம்பால் சமவெளியில் இருக்கிறார்கள்.

பழங்குடி மக்கள் அல்லாத இந்த மேட்டுகுடியான “மெய்டி “என்ற பெரும்பான்மை மக்கள் சமூகத்தை தான் பழங்குடிகள் என அங்கீகரிப்பதற்கான பல பிரயத்தனங்களை பாஜக செய்ய முயற்சித்தது. தற்போது, அது தான் நீதிமன்ற தீர்ப்பாக வந்துள்ளது. இதுவே, தற்போதைய கலவரங்களுக்கும் உயிர் பலிகளுக்கும் காரணமாயிற்று.

காலங்காலமாக பாஜக செய்யும் ‘பாலிடிக்ஸ்’ தான் இது! எப்படியாவது தேர்தலில் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எனவே, மணிப்பூர் தலைநகர் இம்பால் சமவெளியில் வசிக்கும் பெரும்பான்மையாக உள்ள பழங்குடி இல்லாத மக்களை, பழங்குடிகள் என்று அங்கீகரிப்பதன் மூலம் பழங்குடிகள் மட்டுமே அனுபவிக்கும் பிரத்தியேக சலுகைகளை மேட்டுக் குடியினருக்கும் பங்கிட்டுத் தருவது, பழங்குடிகளை ஒடுக்குவது… இதுவே, பிஜேபியின் அரசியல் திட்டம்.

ree

இதில் வருத்தமான செய்தி என்னவென்றால், இந்த வன்முறை நிகழ்வதற்கு உடனடி மற்றும் அடிப்படை காரணமாக அமைந்தது மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தான். சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மாற்றலாகி சென்று இப்பொழுது மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் (பொறுப்பு) தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி முரளிதரன் தான் அந்த உத்தரவை அளித்தவர்.

நீதிபதி முரளிதரன், மணிப்பூர் உயர் நீதிமன்ற வட்டார தகவல்.....


மெய்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த மணிப்பூர் உயர் நீதிமன்றம், மெய்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் பழங்குடி மக்கள் என்று மத்திய அரசுக்கு மணிப்பூர் மாநில அரசு நான்கு வாரங்களுக்குள் பரிந்துரைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த மணிப்பூர் உயர்நீதிமன்ற உத்தரவை பழங்குடித் தலைவர் தின்காங்க்லுங்க் காங்க்மேய் கடுமையாக விமர்சனம் செய்தார் .பழங்குடி மக்கள் அல்லாதவர்களை பழங்குடி மக்களாக அங்கீகரிப்பதற்கு இந்த உத்தரவு அமைகிறது என்றார்.

ree

இதே மாதிரியான விமர்சனத்தை பழங்குடி மாணவர் அமைப்பும் வைத்தது . இந்த உத்தரவினை எதிர்த்து பழங்குடி மக்கள் பெருந்திரளான ஊர்வலத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இதனால், மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன், தன் தீர்ப்பை விமர்சித்த தின்காங்க்லுங்க் காங்க்மேய், பழங்குடி மாணவர் அமைப்பின் தலைவர் ஆகியோர் நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக கொந்தளித்து, அவர்களை நீதிமன்றத்தில் தன் முன்னால் ஆஜர் படுத்த வேண்டும் என்று மாநில டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

இந்த சூழலில், பழங்குடி மக்களும், பழங்குடி மாணவர்களும் தலைநகர் இம்பாலில் நடத்திய ஊர்வலத்தில் தாக்குதல் ஏர்படுத்தப்பட்டு பலர் உயிரிழந்தனர் . பின்னர் வன்முறை பல இடங்களுக்கும் பரவியது. பல மாநிலங்களில் இருந்து வந்து இம்பாலில் பயிலும் மாணவர்கள் அவரவர் மாநிலங்களுக்கு விமானங்களில் திரும்பிய செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. இம்பாலில் தொடர்ந்து குண்டுகள் வெடித்ததையும், துப்பாக்கி சூட்டையும் , அனைத்துமே எரிக்கப்பட்டதையும் , மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் இருந்து (NIT) பார்த்ததாக மாணவர்கள் கூறியதாக அந்த செய்தி கூறுகிறது.......

ree

மேற்சொன்ன உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்த போது மணிப்பூர் மாநில அரசின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் எந்த ஆட்சேபனையையும், எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பதும், மணிப்பூர் மாநிலத்தை ஆட்சி செய்வது பாஜக அரசு என்பதும் கவனத்திற்குரியதாகும்.

அதுமட்டுமின்றி, அந்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மணிப்பூர் மாநில அரசு அல்லது ஒன்றிய அரசோ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை என்பதும் கவனத்திற்குரியதாகும்.

இந்நிலையில் மேற்சொன்ன தின்காங்க்லுங்க் காங்க்மேய் இரண்டு மேல் முறையீடுகளை உச்ச நீதிமன்றத்தில் செய்தார். ஒன்று,மேற்சொன்ன உயர்நீதிமன்றத்தின் உத்தரவு. மற்றொன்று, இவர் பேரில் எடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கில் , இவரை ஆஜர் படுத்துமாறு மாநில காவல்துறை தலைவருக்கு உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு. அந்த மேல்முறையீடுகளில், அரசமைப்புச் சட்டம் உருவாக்கியுள்ள மலைப்பகுதிகளின் கமிட்டியை (Hill Areas Committee), சர்ச்சைக்கு இடமான உத்தரவை அளிப்பதற்கு முன், உயர் நீதிமன்றம் கேட்கவில்லை என்ற வாதத்தையும் முன் வைத்தார். மேலும் ஆளும் கட்சியின் ஆதரவுடன் பழங்குடியினா் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ree

தேவாலயங்கள் உள்பட பழங்குடியினரின் அனைத்து வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்’ என்றும் கோரியுள்ளார்.

இந்த மேல்முறையீட்டு வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் அவர்கள் , ”எந்த மாநில அரசுக்கும் அல்லது எந்த நீதிமன்றத்திற்கும் எவர் எவரை பழங்குடி மக்கள் என்று சேர்ப்பது சம்பந்தமான உத்தரவை அளிப்பதற்கு அதிகாரம் இல்லை” என்று உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு ஏற்கனவே தீர்ப்பு சொல்லியுள்ளது என்பதை சுட்டிக் காண்பித்து, ”உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு தவறானது” என்று கூறியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இன்னொரு செய்தியும் வந்துள்ளது. அதாவது மேல்முறையீடு செய்த பாஜக சட்டமன்ற உறுப்பினரும் மலைப்பகுதிகளின் கமிட்டி தலைவருமான தின்காங்க்லுங்க் காங்க்மேய் வழக்குகளை திரும்பப் பெறுகிறார்.

ree

எனவே அந்த மேல்முறையீட்டு வழக்குகளை அனைத்திந்திய பழங்குடி மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ” பட்டின்தாங் (Paotinthang Lupheng)” நடத்துவதற்கான முயற்சியை அந்த வழக்கை நடத்தி வந்த வழக்குரைஞர் செய்துள்ளார் என்று செய்தி தெரிவிக்கிறது.

உச்ச நீதிமன்றம், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாது. மேல்முறையீடு செய்வதையும் திரும்பப் பெற வைக்கும் என்பதே இதில் தெரியும் தகவல்.

மேற்சொன்ன உயர்நீதிமன்ற உத்தரவை கடுமையாக விமர்சனம் செய்திருக்க வேண்டும் பாஜக. குறிப்பாக பாஜகவின் மத்திய தலைமை- அதாவது அமித்ஷா மற்றும் நட்டா போன்றவர்கள்- உயர் நீதிமன்ற உத்தரவை கடுமையாக விமர்சனம் செய்திருக்க வேண்டும்.

அதற்கு மாறாக அமித்ஷா, ”மேற்சொன்ன உயர்நீதிமன்ற உத்தரவை பற்றி அனைத்து தரப்பாருடனும் கலந்து பேசலாம்” என்று சொல்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட், ”ஒரு உயர் நீதிமன்றத்திற்கு இது போன்ற உத்தரவு அளிப்பதற்கு அதிகாரம் இல்லை” என்று சொல்லிவிட்ட பிறகு விவாதிக்க என்ன உள்ளது?

ree

தீர்ப்பே காலாவதியாகிவிட்டதாகத் தான் அர்த்தம்.

இருப்பினும், மணிப்பூரின் தேர்தல் அரசியல் ஆதாயத்திற்கு பழங்குடி இல்லாத மக்களை பழங்குடிகள் ஆக்கும் வேலைகளை செய்வது தானே பாஜகவின் சாகசம். ‘மக்கள் மடிந்தால் பரவாயில்லை; வன்முறை நடந்தாலும் பரவாயில்லை; எப்படி இருந்தாலும், பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும். அதற்காக பழங்குடி மக்கள் இல்லாதவர்களை பழங்குடிகள் என்று சொல்வதற்கு பாஜக தயங்காது’ என்பதே மேற் சொன்ன தகவல்கள் தெளிவாக தெரிவிக்கின்றன. இந்த சந்தர்ப்பவாத பாஜக அரசியலை வெளிச்சம் போட்டு காண்பிப்பது ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களின் கடமை.

ree

கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்

முன்னாள் நீதிபதி


மணிப்பூரில் நடைபெறும் தொடர் கலவரங்கள் குறித்து, உலக அரசியல், இந்திய ஒன்றிய அளவில் மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவே கருத்துக்கள் பரபரப்பாக பேசப்படுகின்றது.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page