செப்.15 அண்ணா பிறந்த நாளில் கலைஞரின் மகளீர் உரிமைத்தொகை திட்டம்! பயன்பெற விபரம் வெளியிட்டது அரசு!
- உறியடி செய்திகள்

- Jul 8, 2023
- 2 min read


மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா...
செப்.15 அண்ணா பிறந்த நாளில் கலைஞரின் மகளீர் உரிமைத்தொகை திட்டம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்பணிகள் தீவிரம்!
சொன்னதை செய்யும். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழக ஆட்சியில்
மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பத்தில் கேட்கப்படும் தகவல்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.!
தி.மு.கழகத்தின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையில், கூறியவாறு தமிழ்நாட்டின்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொள்ள உள்ளார். பல்வேறு அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.!

வருகிற செப்டம்பர் 15ந்தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக பயனாளிகளை தேர்ந்தெடுக்க அனைத்து ரேஷன் கடை அருகிலும் சிறப்பு முகாம் நடத்துவது, உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தகுதிவாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை அவர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.!

இந்தத் திட்டத்துக்கான சிறப்புப் பணி அதிகாரியாக இளம் பகவத் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பத்தில் கேட்கப்படும் தகவல்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.!
வயது, மாவட்டம், தொழில், வங்கி கணக்கு எண் குறித்த விவரங்கள் கேட்கப்படுகிறது.
வாடகை வீடா? சொந்த வீடா?, நிலம் வைத்திருப்பவரா? வாகனம் வைத்து உள்ளவரா உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படுகிறது!
மேலும் அரசு தரப்பில் இது குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையில்......!

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.
குடும்பத் தலைவி வரையறை:
குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.
ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.
குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.
குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவியாகக் கருதப்படுவார்.
திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.!
ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்
பொருளாதாரத் தகுதிகள்: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்க்காணும் மூன்று பொருளாதார அளவுகோல்களைக்கு உட்பட்ட குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.
பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத்தகுதி இல்லாதவர்கள்: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும், கீழ்க்காணும் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர், மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதி இல்லாதவர் ஆவர்.!
ரூபாய் 2.5 லட்சத்துக்குமேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்குமேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.
மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்
(ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர).
அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
சட்டமன்ற உறுப்பினர்கள்,
மாவட்ட ஊராட்சித் தலைவர்கள்,
மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்,
ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள்,
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள்,
ஊராட்சிமன்றத் தலைவர்கள்,
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.
சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.
ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.
ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.
மேற்கண்ட ஏதாவது ஒரு தகுதியின்மை வகைப்பாட்டில் வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி இல்லை.
விதிவிலக்குகள்: மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. !
இவ்வகைப்பாட்டினர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது....!




Comments