top of page
Search

அதிமுக ஆட்சி நடவடிக்கையால் தமிழகம் உரிமைகளை இழந்தது! சேலம் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 12, 2023
  • 5 min read
ree

அதிமுக ஆட்சி நடவடிக்கையால்!

ஜி.எஸ்.டி.யால் தமிழகத்தின் உரிமையை இழந்தோம்! இரண்டாண்டுகழ்க ஆட்சியில்

தமிழகம் வளர்ச்சி பெற்ற முதன்மை மாநிலமாக திகழுகின்றதுமுதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!


இன்று ஜூன், 11.ஞாயிற்றுக்கிழமை சேலம், கருப்பூர் அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு

முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


தொடந்து நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது!

ree

இங்கே பேசிய நீர்வளத்துறை அமைச்சர், மிகுந்த பெருமையோடு இங்கே குழுமியிருக்கக்கூடிய கூட்டத்தினுடைய எழுச்சியைப் பற்றி சொன்னார். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது என்று சொன்னால், இந்த நலத்திட்ட நிகழ்ச்சியை, நலத்திட்ட விழாவாக மட்டுமல்லாமல், ஒரு மாநாடு போல் ஏற்பாடு செய்திருக்கக்கூடியவர் நம்முடைய கே.என். நேரு.

மலைக்கோட்டை வீரரான கே.என். நேரு இன்றைக்கு சேலத்தில் மக்கள் கோட்டையை திரட்டி காட்டியிருக்கிறார். அவருக்கு துணை நின்ற மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், அரசு அலுவலர்கள் அத்தனை பேருக்கும், மக்கள் பிரதிநிதிகள் அத்தனை பேருக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ree

ree

தமிழகத்தை உருவாக்கிய சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் என்றால் அது மிகையில்லை!

நம்முடைய தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின்நூற்றாண்டு விழா தொடங்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் சேலம் மாநகரில் கருணாநிதியின் திருவுருவச் சிலையினைத் திறந்து வைத்துவிட்டு மனநிறைவுடன் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.

சேலத்தில் ஏற்கனவே 2019 ஆண்டு ஆகஸ்டு 27.ம் தேதி அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின். சார்பில் தலைவர் கருணாநிதி சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.


இப்போது சேலம் மாநகராட்சியின் சார்பிலே பேரறிஞர் அண்ணா பூங்காவில் தலைவர் கருணாநிதி சிலை திறக்கப்பட்டுள்ளது.

ree
ree

அண்ணாவின் பூங்காவில் பூத்த மணம் தரும் மலர்தான் தலைவர் கலைஞர் சேலத்துக்கும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞருக்குமான நட்பு என்பது அன்பான நட்பு. ஒரு குடும்ப நட்பு. தலைவர் கலைஞர் ஒரு முழு கதை, வசனகர்த்தாவாக்கிய ஊர்தான் இந்த சேலம். இன்றைக்கும் சேலத்தில் மார்டன் தியேட்டர்ஸ் முகப்பு கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டு இருக்கிறது. அந்த மார்டன் தியேட்டர்ஸின் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரம். திரைப்படத் தயாரிப்பாளரான சுந்தரம் தான், தலைவர் கலைஞரை சேலத்துக்கு அழைத்தார்கள்.

அப்போது அவருக்கு ௹ 500 ஊதியமாக வழங்கப்பட்டது.

இங்கே பணியாற்ற வருவதன் காரணமாக எனது இயக்கப் பணிகள், கழகப் பணிகளுக்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்று நிபந்தனை வைத்து அப்படி எதுவும் இருக்காது என்று சுந்தரம் சொன்ன பிறகுதான் தலைவர் கலைஞர் சேலத்தில் தங்கிப் பணியாற்ற ஒப்புக் கொண்டார்கள்.

ree

அப்படி பணியாற்றத் துவங்கிய நேரத்தில் வெளிவந்த படம்தான் மந்திரிகுமாரி,தலைவர் கலைஞர் சேலத்தில் தங்கி இருந்த அந்தக் காலக்கட்டத்தில்தான் 1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகமே உருவானது. கழகத்தின் தொடக்க விழாவுக்கு சேலத்தில் இருந்துதான் முத்தமிழறிஞர் கலைஞர் சென்னைக்கு சென்றார் என்பது வரலாறு!


அந்தளவுக்கு நம்முடைய கழக தலைவரின். வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஊர் தான் சேலம். அந்த சேலத்தில் அவரது நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் சிலை நிறுவப்படுவது மிகமிக பொருத்தமான ஒன்று. இத்தகைய சேலம் மாவட்டத்துக்கு, தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, மறைந்த என் ஆருயிர் அண்ணன் சேலத்து சிங்கம் வீரபாண்டியார் மூலம் சேலம் மாவட்டத்திற்கு ஏராளமான புதிய, புதிய வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்லமுடியும்.

ree

ree

தற்போதும் இங்கே பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நம்முடைய கழக முதன்மைச்செயலாளர், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, அவரது சொந்த மாவட்டமான திருச்சியைவிட சேலத்திற்குத் தான் அதிக நிதியை ஒதுக்கீடு செய்து, மற்ற துறைகளின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களையும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக செயல்படுத்தி வருகிறார்.

ree

அவர் இங்கே பட்டியலிட்டாரே அதனைவிட அதிக திட்டங்கள் வருங்காலங்களில், கழக அரசால் சேலத்திற்கு வர இருக்கின்றன.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நாம் செய்த சில சாதனைகளை மட்டும் இங்கே உங்களுக்கு நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஐம்பது ஆண்டுகால கனவாக இருந்த சேலம் ரயில்வே கோட்டம், பெரியார் பல்கலைக்கழகம், சேலத்தில் அரசு மகளிர் கலைக் கல்லூரி, ஆத்தூரில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, 1553 கோடி ரூபாய் செலவிலே சேலம் உருக்காலை சர்வதேச அளவிற்கு உயர்த்தப்பட்டு புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்,

சேலத்தில் 136 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம், ஏத்தாப்பூரில் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், சேலத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இப்படி கணக்கில் அடங்காத வகையில் பல்வேறு திட்டங்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய ஆட்சியில்தான் சேலம் மாவட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டன!.

ree

ree

இந்த வரிசையில் இதைவிட அதிகமான சாதனைகளைச் செய்து கொடுப்பதற்கு இந்த ஆட்சி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு டிச11. சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 1,242 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் என்னால் அறிவிக்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் ஆணைகவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பில், 29 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மினி டைடல் பூங்காவிற்கு 15 ஏக்கர் நிலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் ஒதுக்கப்பட்டு காணொலிக் காட்சி வாயிலாக கடந்த மே19. அன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. "கொலுசு உற்பத்தியில் தலைசிறந்து விளங்கும் சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கொலுசு உற்பத்தியாளர்கள் உடனடியாகத் தொழில் தொடங்குவதற்கு வசதியாக பன்மாடி உற்பத்தி மையம் அமைக்கப்படும்" என்று நான் அறிவித்தேன்.

அதன்படி, சேலம் அரியாகவுண்டம்பட்டியில் 24 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொலுசு உற்பத்தியாளர்களுக்கான பன்மாடி உற்பத்தி மையம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ree

சேலம் மாவட்டத்தில், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையிலும், மாபெரும் ஜவுளிப் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்று நான் 2021. டிச11. அன்று அறிவித்திருந்தேன்.

இதற்காக, சேலம் மேற்கு வட்டம், ஜாகீர் அம்மாபாளையம் கிராமத்தில், 119 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு, இங்கு ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கு நிலம் ஒதுக்கீடு செய்வதற்கான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்த இடத்தில், இந்த நிகழ்ச்சியின் மூலமாக 880 கோடி ரூபாய் செலவில் ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கான கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் சேலம் மாவட்ட மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்

ree

சேலம் மாநகராட்சியில் போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி, மூக்கனேரி ஆகிய 3 நீர்நிலைகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, இந்த நிகழ்ச்சியின் வாயிலாக 52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்தப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பொதுமக்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் அமைக்க திட்ட ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


சேலம் மாநகராட்சியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாலமலை பகுதி மலைவாழ் மக்களின் 75 ஆண்டுகால கனவான சாலை வசதித் திட்டத்தினைச் செயல்படுத்தும் வகையில் 31 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 17.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலையாக மாற்றும் வகையில் கடந்த ஏப் 3. அன்று பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ree

எனவே இந்த அரசையும் எங்களையும்பொறுத்தவரையில் 'சொன்னதைச் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம்' என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். ஆட்சி அமைத்தது முதல் மாவட்டங்கள் தோறும் இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களையும் - திட்டங்களைத் தொடங்கும் விழாக்களையும் - முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்கும் விழாக்களையும் தொடர்ந்து நடத்தி மக்களுக்கு அர்ப்பணித்து வருகிறோம்.


தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சுற்று நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துவிட்டது. இப்போது சேலத்தில் தொடங்கி, அடுத்த சுற்று நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளோம்!

இன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின்கீழ் 652 கோடியே 84 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர், இடங்கண சாலை ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் சேலம், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் முதற்கட்டமாக 301 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்துள்ளேன்.

ree

101 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேலம் அரசு சட்டக் கல்லூரிக்கான மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தரக் கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. சேலம் பழைய பேருந்து நிலையத்தை 96 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஈரடுக்குப் பேருந்து நிலையமாக மறுசீரமைத்து 'கருணாநிதி நூற்றாண்டு மாநகரப் பேருந்து நிலையம்' என இன்றைய நாள் பெயர் சூட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.


பெரியார் பேரங்காடி, போஸ் மைதான வணிக வளாகம், வ.உ.சி மார்க்கெட், நேரு கலையரங்கம் ஆகியவற்றை மறுசீரமைக்கும் பணிகள் என இன்றைக்கு மட்டும் 1,367 கோடி ரூபாய் மதிப்பில் 390 பணிகள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 236 கோடி ரூபாய் மதிப்பிலான 331 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக 50 ஆயிரத்து 202 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கின்றன. 23 அரசுத் துறைகளின் சார்பாக 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கின்றன. 50 ஆயிரத்து 202 குடும்பங்களுக்கு இந்த உதவிகள் சென்றுசேர ஒரு அருமையான, மகிழ்ச்சியான விழாவாக, மாபெரும் நிகழ்ச்சியாக இது நடந்துகொண்டு இருக்கின்றது.

ree

இப்படி அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கை மேம்பாட்டையும் மனதில் வைத்துச் செயல்படும் அரசாக நமது திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

பயணாளிகள்

அரசு தொடங்கியுள்ள திட்டங்களின் மூலமாக சேலம் மாவட்டத்தின் அனைத்துத் தரப்பினரும் பயனடைந்து வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் மட்டும் 11 கோடி முறை கட்டணமில்லா பேருந்து வசதியை பெண்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். காலை உணவுத் திட்டத்தின்படி சேலத்தில் 7 ஆயிரத்து 953 மாணவ மாணவியர் காலை உணவு உண்கிறார்கள். புதுமைப் பெண் திட்டத்தில் சேலத்தில் 17 ஆயிரம் மாணவிகள் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்.

ree

தமிழகத்திலேயே அதிகளவில் சேலம் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 93 மாற்றுத்திறனாளிகளுக்கு 40 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 11 உழவர் சந்தைகள் மூலம் 3 இலட்சத்து 46 ஆயிரத்து 675 உழவர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு ஒரு கோடியே 97 இலட்சம் நுகர்வோர் பயனடைந்துள்ளனர். புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 6 ஆயிரத்து 750 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உழவர்கள் பயனடைந்து வருகின்றனர். இப்படி கழக அரசால் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களைச் சொல்லிக்கொண்டே போனால் நேரம் போதாது.

இவைகள் அனைத்திற்கும் மேலாக, முத்தாய்ப்பாக, நாட்டின் முதுகெலும்பாக திகழும், தன்னலமற்ற உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து நாளை தண்ணீரை திறந்து வைக்க இருக்கிறோம்.

ree

பெருமையோடு சொன்னார்களே, இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மூன்றாவது ஆண்டாக குறித்த நேரத்தில் பயிர் சாகுபடிக்குத் தண்ணீர் திறந்து வைக்கப்படுகிறது என்பது மட்டற்ற மகிழ்ச்சியினை அளிக்கிறது. அதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றால் நானும் ஒரு டெல்டாகாரன் என்ற அடிப்படையில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ree

எனவே ஜி.எஸ்.டி. உரிமையை இழந்தோம். அதனால்தான் இன்றைக்கு நிதி போதுமான அளவிற்கு கிடைக்கவில்லை. நிதி நெருக்கடியில் தவிக்கிறோம். உதய் என்ற திட்டத்தில் கையெழுத்து போட்டதால்தான் மின்கட்டணத்தை குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மாற்றி அமைக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் மக்களையும் பாதிக்காத வகையில் - அதே நேரத்தில் நிதி மேலாண்மையையும் உயர்த்திக் காட்ட வேண்டிய சூழல் திமுக அரசுக்கு ஏற்பட்டது. பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையைக் குறைத்தோம். அதேநேரத்தில் புதிய திட்டப்பணிகளையும் ஏராளமாகத் தொடங்கி கொண்டிருக்கிறோம். நிதி இல்லை என்று காரணம் காட்டி புதிய திட்டங்களை அறிவிக்காமல் இருக்கவில்லை.

ree

கடந்த இரண்டு ஆண்டுகாலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைப் பார்த்தீர்கள் என்றால், ஐந்து ஆண்டுகளில் அறிவிக்க வேண்டிய அளவிற்கான திட்டங்களை இரண்டே ஆண்டுகளில் அறிவித்து நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். அதனால்தான் 'நம்பர் ஒன் தமிழகம்'. 'நம்பர் ஒன் முதல்வர்' என்று என்னை முதல் ஆண்டில் சொன்னார்கள். என்னை 'நம்பர் ஒன் முதல்வர்' என்று சொல்வதைவிட 'நம்பர் ஒன் தமிழகம்' என்ற பெயரை எடுக்க வேண்டும் அதுதான் எனக்கு சிறப்பு என்று சொன்னேன். அந்த பெருமையை இன்றைக்கு அடைந்திருக்கிறோம். இது ஏதோ என்னால் ஆனது என்று நான் நினைக்கவில்லை.!


இவைகள் அனைத்தும், நம்முடைய அமைச்சர் பெருமக்களால், அரசு அலுவலர்களால், மக்கள் பிரதிநிதிகள், உள்ளிட்டவர்களது ஒத்துழைப்போடு, உத்வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்பட்டதால்தான் இத்தகைய சாதனையை நம்மால் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்ய முடிந்திருக்கிறது.


இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


தி.மு.கழக பொதுச்செயலாளர். நீர் வழி கனிமவளத்துறை அமைச்சர் துறைமுருகன் முதன்மைச்செயலாளர் சேலம் மாவட்ட பொருப்பாளர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு.கழக உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர். கடலூர் மாவட்ட செயலாளர், தருமபுரி மாவட்ட பொருப்பாளர், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாடாளுமன்ற, சட்டமன்ற, நகர்புற, கிராமப்புறஉள்ளாச்சி பிரதிநிதிகள் அனைத்துறை அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page