ஒன்றிய அரசின் ஆளுநர்கள் நியமனமும் - சர்ச்சைகளும்! காணாமல் போகும் அரசியலமைப்பு விதிமுறைகளும்!!
- உறியடி செய்திகள்

- Feb 19, 2023
- 3 min read

ஆளுநர்கள் நியமனமும், ஓயாத சர்ச்சைகளும்!
சமூக வளைதளத்தில் வைரல் பதிவு!!
ஓய்வுக்குப் பிறகான பதவி ஆசை, ஓய்வுக்கு முந்தைய தீர்ப்புகளை பாதிக்கும். இது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல். மத்திய அமைச்சராகவும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்த அருண் ஜெட்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்த கருத்து இது.
ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு புதிய பதவிகள் வழங்குவதை எதிர்த்து, கடந்த 2012-ம் ஆண்டு அவர் பேசி இருந்தார். ஆனால், தற்போது மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீரை, ஆந்திர ஆளுநராக நியமித்திருப்பது நாடு முழுவதும் மீண்டும் விவாதத்தை தொடங்கியுள்ளது.
அது தொடர்பாக அலசுகிறது இந்த செய்தித்தொகுப்பு.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 153-வது பிரிவு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆளுநர் இருக்க வேண்டும் என கூறுகிறது. பிரிவு 155, ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார் என்று கூறுகிறது. பிரிவு 156, ஆளுநரின் பதவி காலம் குறித்து விவரிக்கிறது.
அதாவது, குடியரசுத் தலைவரின் விருப்பம் வரை ஆளுநர் பதவி வகிப்பார் என்று தெரிவிக்கிறது. ஆனால் ஆளுநரின் பதவி காலம் பொதுவாக 5 ஆண்டுகள். அதற்குள் குடியரசுத் தலைவர் விரும்பாவிட்டால், ஆளுநர் பதவி விலக வேண்டும். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் செயல்படுவதால், அவர்களின் விருப்பமின்றி ஆளுநரால் அந்த பதவியில் நீடிக்க முடியாது என்பது தெளிவாகிறது.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 157 மற்றும் 158 ஆளுநரின் தகுதிகள் மற்றும் அவரது பதவிக்கான நிபந்தனைகளை வகுத்துள்ளது. ஆளுநராக நியமிக்கப்படுவர் இந்திய குடிமகனாகவும், 35 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்திலோ அல்லது மாநில சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருக்கக் கூடாது, மேலும் ஆதாயம் தரும் எந்த ஒரு பதவியையும் வகிக்கக் கூடாது.
மாநில அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டிய ஆளுநர் பதவி, அரசியலுக்கு அப்பாற்பட்டதாக கருதப்படுகிறது. அரசியலமைப்பின் கீழ் ஆளுநர் சில அதிகாரங்களை அனுபவிக்கிறார்.
அதாவது, மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவது, மாநில சட்டமன்றத்தில் ஒரு கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான காலத்தை தீர்மானிப்பது, அல்லது தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைக்க எந்த கட்சியை முதலில் அழைப்பது என்ற முடிவை எடுப்பது போன்ற சிறப்பு அதிகாரங்களை நமது அரசியலமைப்பு ஆளுநருக்கு வழங்கியுள்ளது.

அப்துல் நசீருக்கு முன் நீதிபதிகளாக இருந்தவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்படவில்லையா? என்று கேள்வி எழலாம். இதற்கு முன் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருந்த 3 பேர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதன்முறையாக நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர், ஆளுநராக நியமிக்கப்பட்டவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சயீத் பாசில் அலி. 1951-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற இவர், 1952-ம் ஆண்டு ஒரிசா ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் அசாம் மாநில ஆளுநராகவும் பதவி வகித்தார்.
மேலும், மொழிவாரி மாநில பிரிப்பு ஆணையத்தின் உறுப்பினராகவும் சயீத் பாசில் அலி பதவி வகித்தார்.
சயீத் பாசில் அலிக்கு பின் 45 ஆண்டுகள் கழித்து, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் மீண்டும் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதுவும் ஒரு பெண் நீதிபதி ஓய்வுக்குப் பின் முதன்முறையாக ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆவர் பாத்திமா பீவி. கேரளாவை சேர்ந்த பாத்திமா பீவி 1997-ம் ஆண்டு தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் இவர். ஆனால், 2001-ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி நள்ளிரவு கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து பாத்திமா பீவி பதவி விலக நேரிட்டது.
அதன் பின்னர், நீதித்துறையில் இருந்து ஆளுநராக நியமிக்கப்பட்டவர் சதாசிவம். 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்ற சில மாதங்களிலேயே சதாசிவத்தை கேரள ஆளுநராக நியமித்தது. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நீதிபதி சதாசிவத்திற்கு, ஆளுநர் பதவி அளிக்கப்பட்ட போது தான் முதன் முறையாக சர்ச்சையை எழுந்தது. காரணம், நீதிபதியாக இருந்த போது, சதாசிவம் அளித்த தீர்ப்புகள்.
ஆளுநராக சதாசிவம் நியமிக்கப்பட்ட போது கிளம்பியது போல், அப்துல் நசீர் நியமனத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த மாதம் 4-ம் தேதி தான், உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றார் அப்துல் நசீர். ஓய்வு பெற்று ஒரு மாதத்திற்குள் அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு நீதிபதியாக இருந்த போது அவர் வழங்கிய தீர்ப்புகளை சுட்டிக்காட்டுகின்றன எதிர்க்கட்சிகள்.
நீதிபதி அப்துல் நசீர், சர்ச்சைக்குரிய பாபர் மசூதி வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றிருந்தவர். மற்ற நீதிபதிகளுடன் இணைந்து ஒருமித்த தீர்ப்பை அப்போது அவர் வழங்கினார். கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி நடந்த ஆர் எஸ் எஸ்சின் துணை அமைப்பான அகில் பாரதிய அதிவக்ட பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்.
அதில் பேசிய அவர், இந்திய நீதித் துறை மனு, சாணக்கியர், காத்தாயனர், பிரஹஸ்பதி, நாரதர், யாக்யவாக்கியர் போன்றோர் உருவாக்கிய சட்டமரபை புறக்கணித்து வருகிறது. காலனிய நீதி அமைப்பைப் பின்பற்றுகிறது. இது நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், தேச நலனுக்கும் எதிரானது என்று பேசியவர்.
பணமதிப்பிழப்பு, முத்தலாக் உள்ளிட்ட வழக்குகளில் மத்திய அரசின் நிலைப்பாடு சரியானது என தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் குழுவில் அவர் இடம் பெற்றிருந்ததும், தற்போதைய சர்ச்சைகளுக்கு முக்கிய காரணம்.
ஆளுநர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி இரண்டும் அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்டது தான். உச்ச நீதிமன்ற நீதிபதியை மத்திய அரசால் பதவி நீக்கம் செய்ய முடியாது. உச்ச நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில், அவருக்கு எதிராக உரிமைமீறல் மசோதா கொண்டு வந்து மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் அதனை நிறைவேற்றினால் மட்டுமே நீக்க முடியும்.
ஆனால், சட்டத்தின் பார்வையில் ஆளுநர்களை அப்படிக்கூட நீக்க முடியாது. குடியரசுத் தலைவர் விரும்பும் வரை ஆளுநர் பதவியில் நீடிக்கலாம்.
ஆளுநராக ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீர் நியமனத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது போன்ற நியமனங்களுக்கு எதிராக, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த அருண் ஜெட்லி, 2012-ம் ஆண்டு மாநிலங்களவையில் பேசியதை மேற்கோள்காட்டி வருகின்றன.
அதாவது, 'ஓய்வுக்குப் பிறகான பதவி ஆசை, ஓய்வுக்கு முந்தைய தீர்ப்புகளை பாதிக்கும்' என்று அப்போது அருண்ஜெட்லி பேசியிருந்தார்.
நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு ஆளுநர்களாக நியமிக்கும் மத்திய அரசின் முடிவு, நாட்டின் அரசியல் சாசன விழுமியங்களுக்கு எதிரானவை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஓய்வு பெற்ற நீதிபதிகளை ஆளுநராக நியமிப்பது நீதித்துறைக்கு இழுக்கு என்றும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர். நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடாமல் இருக்க ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு புதிய பதவிகள் வழங்கக் கூடாது என்ற கருத்தையும் அவர்கள் முன் வைத்து வருகின்றனர்.
இதனை பின்பற்றி, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இணக்கமாக நடந்துகொள்ளும் ஐ.பி.எஸ்.உள்ளிட்ட உயர் பொருப்பிலிருந்து ஓய்வுபெற்றவர்களும் கவர்னர் களாக நியமிக்கப்பட்டு, மாநில உரிமைகளை பறிக்கும் செயல்களை. சட்டவிதிகளை - அரசியலமைப்பு சட்டத்தையே கேலி கூத்தாக்கும். அப்பட்டமான ஜனநாயக மீறலை நம்மால் காணமுடிகிறது. இதற்கு தமிழ்நாட்டின் நிர்வாக முடக்கம் ஒரு உதாரணம் என்றால் அது மிகையாகாது.....




Comments