top of page
Search

தமிழர்கள் தலைநிமிர்ந்த நாள்! தமிழ்நாடு உருவான நாள்! பேரறிஞர் அண்ணா, சட்டமன்ற பேச்சு!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 18, 2023
  • 4 min read

Updated: Jul 19, 2023


ree


‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டி வரலாற்றுத் தீர்மானம்” : பேரவையில் பேரறிஞர் அண்ணா வரலாற்று சாதனை பேச்சு!


அண்ணாவும்,தமிழ்நாடும்!

தமிழ்நாடு என்று பெயரை மாற்றுவதால் என்ன லாபத்தை அடையப் போகிறீர்கள்? என்று கேட்டதற்கு

பார்லிமென்டை 'லோக்சபா என்றும். கவுன்சில் ஆஃப் ஸ்டேட்சை ' ராஜ்யசபா' என்றும் மாற்றியதால் நீங்கள் என்ன லாபம் அடைந்து விட்டீர்கள் என்று பதில் கொடுத்தார் அறிஞர் அண்ணா.

தமிழ்நாடு என்பது நாடா? அல்லது இந்தியா என்பது நமது நாடா? எப்படி இதையும் நமது நாடு, அதையும் நமது நாடு என்று சொல்வது ? என்று முதலமைச்சர் பக்தவச்சலம் மன்றத்திலேயே கேள்வி எழுப்பினார் தமிழ்நாடு கோரிக்கையை ஆரம்பத்திலிருந்து தவிர்த்து வந்தனர்.

1956, நவம்பர் 1 அன்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதுவரை மதராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டு வந்த பகுதியில், தமிழர்கள் வாழ்ந்த பகுதி மட்டுமே மதராஸ் ஸ்டேட் ஆனது.

இந்த மாற்றம் குறித்து முன்பே அறிந்த பெரியார் 1955 அக்டோபர் 10ஆம் தேதி அறிக்கை வெளியிட்டார் . தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், கன்னடர்கள், ஆந்திரர்கள், பிரிந்து போன பின்பும் கூட தமிழகத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் இருக்கக்கூடாது என சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள். என்று கண்டன அறிக்கை விட்டார்.!


விருதுநகரில் சங்கரலிங்கனார் 1956 - ஜூலை 27ஆம் தேதி 12 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். அந்த 12 கோரிக்கைகளில் ஒன்று 'தமிழ்நாடு' பெயர் மாற்றம் கோரிக்கை. அன்றைய காங்கிரஸ் அரசோ சங்கரலிங்கனாரின் எந்த கோரிக்கையையும் ஏற்கவில்லை. அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. காமராசர், மா. பொ.சி , கக்கன், அண்ணாதுரை, ஜீவானந்தம், முதலான பலரும் சமாதானம் படுத்தியும் சங்கரலிங்கனார் விடாப்பிடியாக 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 1956 அக்டோபர் 14ஆம் நாளில் உயிர் தியாகம் செய்தார்.

அதற்குப் பிறகு தமிழ்நாடு பெயர் மற்றும் கோரிக்கை பிரதானமான பிரச்சனையாக உருவெடுத்தது. 1957-இல் அண்ணா தலைமையிலான தி.மு.கழகம்.சட்டமன்றத்தில் முதன் முதலாக நுழைந்தபோது பெயர் மாற்றம் கோரிக்கையை முன்வைத்து சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 42 வாக்கும் எதிராக 127 வாக்குகள் பதிவாகின. ஆனால் தொடர்ந்து தமிழ்நாடு கோரிக்கையை முன்னெடுத்து வந்தது தி.மு.கழகம்.!

ree

1961இல் சோசியலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மீண்டும் 'தமிழ்நாடு' பெயர் மாற்று தீர்மானத்தை முன்னெடுத்தார்.

காமராசர் பெயர் மாற்றம் சாத்தியமில்லை என்று அறிவிக்காமல், அரசின் கடிதப் போக்குவரத்தில் மட்டும் 'தமிழ்நாடு' என்று குறிப்பிடலாம் என்று சமாதானம் பேசினார் காமராசர்.

1963 - ல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் புபேஷ் குப்தா ' தமிழ்நாடு' பெயர் மற்றம் குறித்து தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார் . மத்திய அரசு ஒப்புதல் அளிக்கலாம் என்று விவாதித்தார். அவையில் உறுப்பினராக இருந்த அண்ணாவும் 'ஆயிலை தமிழ் கூறும் நல் உலகம்' என்ற தொல்காப்பிய வாசகத்தையும், " இமில் கடல் வேலியை" தமிழ்நாடாக்கின என்ற சிலப்பதிகார பாடலையும் சுட்டிக்காட்டி பேசினார். இருந்தும் பூ பேஸ் குப்தாவின் மசோதா தோல்வியை தழுவியது.

1963 - இல் ஜூலை 23 ராம. அரங்கண்ணன் பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தீர்மானத்தை நிறைவேற்றினார். முதல்வர் பக்தவச்சலம் பெயரை மாற்றினால் ஒப்பந்தங்களை ஆவணங்களை மாற்ற வேண்டும் என்று மறுத்தார் இதற்கு தி.மு.க.எதிர்ப்பு தெரிவித்தது.

திமுக ஆட்சிக்கு வந்து பிறகு 1967 - இல் ஜூலை 18ஆம் தேதி மதராஸ் ஸ்டேட் என்ற பெயரை 'தமிழ்நாடு 'என்று பெயர் மாற்றும் சட்ட முன் வடிவு கொண்டுவரப்பட்டது. 1968 - டிசம்பர் 1ஆம் தேதி பாலர் அரங்கில் பெயர் சூட்டும் விழா நடைபெற்றது.


1967, ஜூலை 18 அன்று


தமிழ்நாடு’ என பெயர் சூட்டி வரலாற்றுத் தீர்மானம்” : பேரவையில் பேரறிஞர் அண்ணா வரலாற்று சாதனை பேச்சு!



இந்த மன்றத்திலே எல்லாக் கட்சியினராலும் நல்ல அளவுக்கு ஒப்புக்கொள்ளப்பட்டு தீர்மானமாக நிறைவேற இருக்கின்ற “தமிழ்நாடு” என்று பெயரிடுகின்ற இந்த நிகழ்ச்சி இந்த அவையிலே இன்றைய தினம் உறுப்பினர்களாக இருக்கின்ற ஒவ்வொருவருடைய வாழ்நாளிலும் மிகுந்த மகிழ்ச்சியையும், நல்ல எழுச்சியையும் தரத்தக்க ஒரு திருநாள் ஆகும்.

ree

“இந்தத் திருநாளைக் காண்பதற்கு பன்னெடுங்காலம் காத்துக் கொண்டிருக்க நேரிட்டதே” என்பதுதான் மகிழ்ச்சியின் இடையிலே நமக்கு வருகின்ற ஒரு துயரமே தவிர, நெடுங்காலத்திற்கு முன்னாலே நடைபெற்றிருக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சியை மிகுந்த காலம் தாழ்த்தி இன்றைய தினம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்றாலும் இதிலே எல்லாக்கட்சியினரும் ஒன்றுபட்டு இந்தத்தீர்மானத்திற்கு அவர்கள் தங்களுடைய ஆதரவைத் தந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் திரு.கருத்திருமன் கூட இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கிறார்களே தவிர வேறில்லை. அதிலே சில ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறோம் என்று சொல்லியிருப்பது, எதிர்க்கட்சியில் இருப்பவர்களுடைய கடமை என்ற வகையில் ஆலோசனைகளைச் சொல்ல வேண்டுமென்ற முறையிலே தவிர, எதிர்க்கிறார்கள் என்று இல்லை!


. ஆகையினால் இந்தத் தீர்மானம் எல்லோருடைய ஆதரவையும் பெற்று இந்தியப்பேரரசுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

இந்தியப் பேரரசிலே மிகுந்த செல்வாக்கோடு இருக்கின்ற இரண்டொரு தலைவர்களுடன் உரையாடுகின்ற வாய்ப்புக்கிடைத்த போது இதைப்பற்றி அவர்கள் சொல்லும் போது, “தமிழகச் சட்டமன்றத்தில் இது நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படுமானால் இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்துவதிலே தயக்கம் இருக்காது” என்பதனை முன்கூட்டியேஎன்னிடத்தில் எடுத்துச்சொல்லி யிருக்கிறார்கள்.

இதுஅங்குள்ள பல தலைவர்கள், அதனை அரசை நடத்துகிறவர்கள் கூட ஏற்றுக் கொள்ளுகிறார்கள் என்றுதான் எண்ணத்தக்க விதத்தில் பத்து நாட்களுக்கு முன் பாராளுமன்றத்தில் இந்த மாநிலத்தைப் பற்றிப் பேச வேண்டிய வாய்ப்பு கிடைத்த நேரத்தில் அங்குள்ள உள்துறை அமைச்சர் .சவான் “மெட்ராஸ் ஸ்டேட்” என்று பேசிப்பழக்கப்பட்டவர் மிகுந்த அக்கறையோடும் மிகுந்த கவனத்தோடும் “தமிழ்நாடு” என்றுதான் பேசியிருக்கிறார். !

ree

ஆக இதை அவர்களும் ஏற்றுக்கொண்டு அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை இன்றைய தினம் இந்த அவையிலே நாம் பெற்றிருக்கிறோம்.இது

மதிப்புமிக்க ம.பொ.சி. அவர் கள் இதிலே மிகுந்த மன எழுச்சி பெற்றது இயற்கையானதாகும். பல ஆண்டுகளாக “தமிழ்நாடு” என்ற பெயர் இந்த நாட்டுக்கு இடப்பட வேண்டுமென் பதில் மிகுந்த அக்கறையோடு பாடுபட்டவர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதிலே ‘திராவிட' என்பதை இணைத்துக்கொண்டிருப்பதால் “தமிழ்நாடு” என்பதிலே அக்கறை இல்லாமல் போய் விடுமோ என்று சிலர் எண்ணிய நேரத்தில் “தமிழ்நாடு” என்று பெயரிடுதல் வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்து கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் கட்சியி லுள்ளவர்களும், மற்றவர்கள் கொண்டு வருகிறார்களே என்பதனாலே முன்னாலே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும் இலக்கியத்தில் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டிருந்தாலும், இன்றைய தினம் “தமிழ்நாடு” என்று சொல்லிக் கொள்வதில் மிகுந்த பெருமைப்படுகிறார்கள்.!


ஆகையினால் இந்தத் தீர்மானம் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் இந்த அவையிலே நிறைவேற்றப்பட இருக்கிறது என்று கருதுகிறேன். அப்படிப்பட்ட ஒரு வெற்றி கிடைக்கு மானால் அது இன்று தி.மு. கழகத்திற்கான வெற்றியல்ல, தமிழரசுக் கழகத்திற்கு வெற்றியல்ல, மற்ற கட்சிகளுக்கு வெற்றியல்ல, இது தமிழுக்கு வெற்றி, தமிழருக்கு வெற்றி, தமிழ் வரலாற்றுக்கு வெற்றி, தமிழ்நாட்டுக்கு வெற்றி என்ற விதத்தில் அனைவரும் இந்த வெற்றியிலே பங்கு கொள்ளவேண்டும்.

“தமிழ்நாடு என்ற பெயர் இருந்தால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளமாட்டார்கள்” என்பது மட்டுமல்ல, நம்முடைய தொழில் அமைச்சராக முன்னாள் இருந்த வெங்கட்ராமன் “ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டுக்கும் இடையே செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தம் எல்லாம் திருத்தி எழுதப்பட வேண்டிவரும், அதனாலே சிக்கல்கள் விளையும்” என்றெல்லாம் சொன்னார்.!


அதிலிருந்து அவர்கள் வெளிநாடுகளுக் கெல்லாம் போய் வந்தார்கள் என்பதைத் தான் கவனப்படுத்துகிறார்களே தவிர, உண்மையாகச் சிக்கல்கள் இருக்கின்றனவா என்பதைக் கவனப்படுத்த வில்லை.

மதிப்பிற்குரிய நண்பர் பாலசுப்பிரமணியம் எடுத்துச் சொன்னபடி “கோல்டு கோஸ்ட்” என்பது “கானா” ஆகி விட்டது. அதனால் எந்தவிதமான சர்வ தேசச் சிக்கல்களும் ஏற்பட்டுவிடவில்லை. தமிழ்நாடு தனி நாடாகி இந்தப்பெயரை இடவில்லை, இந்தியாவில் ஒரு பகுதியாக இருந்து கொண்டு இந்தப்பெயரை இடுவதால் இதிலே சர்வதேசச் சிக்கல்கள் எழுவதற்கு நியாயமில்லை. ஆகவே, இந்தத் தீர்மானத்தை அனைவரும் தங்கள் கட்சியின் சார்பில் ஆதரிக்க வேண்டு மென்பதை ஒருகடமையுணர்ச்சியாகக் கொண்டதற்காக மிக்க மகிழ்ச்சியடை கிறேன்.

நண்பர் ஆதிமூலம் . “தமிழ்நாடு” என்ற பெயர் மாற்றத்திற்காகத் தன்னைத்தானே தியாகம் செய்துகொண்ட சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் எழுப்பவேண்டும் என்று குறிப் பிட்டார். அதையும் அத்தனைபேரும் உள்ளத்திலே, கருத்திலே கொள்ளுவார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். அவருடைய எண்ணங்கள் இன்றைய தினம் ஈடேறத்தக்க நிலை கிடைத்திருப்பதும், அந்த நிலையை உருவாக்குவதிலே நாம் அனைவரும் பங்கு பெற்றிருக்கிறோம் என்பதும் நமக்கெல்லாம் நம் வாழ்நாள் முழுவதும் பெருமைப்படத்தக்க காரியமாகும்.!

ree

நம்முடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நெடுங்காலத்திற்குப் பிறகும்முடைய இல்லங்களிலே அமர்ந்து பேசிக்கொள்ளுகின்ற நேரத்தில், பெருமையோடு சொல்லிக் கொள்ளஇருக்கிறார்கள். “என்னுடைய பாட்டனார் காலத்திலே தான் நம்முடைய நாட்டுக்கு “தமிழ்நாடு” என்ற பெயர் இடப்பட்டது. எதிர்க்கட்சியிலே உட்கார்ந்து கொண்டிருந்த என்னுடைய பாட்டனார் கருத்திருமன் இதை ஆதரித்தார்” - என்று கருத்திருமன் பேரப் பிள்ளைகளும், எங்களுடைய பேரப் பிள்ளைகளும் எதிர்காலத்திலே பேசக்கூடிய நல்ல நிலைமைகளை எல்லாம் எண்ணிப் பார்ப்பார்களேயானால் நிச்சயமாக அந்த ஆலோசனையைக் கூடச்சொல்லாமல் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் துளியும் அய்யப்பாடு கொள்ளவில்லை.

ஆகையினால் இந்தத் தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டுமென்று பணிவோடு கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இவ்வாறு பேரறிஞர் அண்ணா பேசினார்,!


அதனை தொடர்ந்து

தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப் பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.!


பேரறிஞர்அண்ணா தலைமையில் சட்டமன்றம் முழங்கிய , தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள்இன்று - இது தமிழர் வரலாற்றில் மிக முக்கியமான நாள் !


உறியடி செய்திக்குழு

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page