தொடங்கியது பகுத்தறிவு தந்தை,வைக்கம் வீரரின் விழா! முதல்அமைச்சர், மு.க.ஸ்டாலின் அறிவித்தார்!!
- உறியடி செய்திகள்

- Mar 30, 2023
- 2 min read


ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக உரிமைக்கு வித்திட்ட 'வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா' தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று முதல் ஓராண்டுக்கு நடத்தப்படும் என தி.மு.கழகத் தலைவர். தமிழ்நாட்டின்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1924 ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டம், சமூக உரிமைக்காக நடைபெற்ற போராட்டங்களில் ஒன்றாக இந்திய அரசியல் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கரை உத்வேகப்படுத்திய அத்தகு சரித்திர புகழ் வாய்ந்த வைக்கம் போராட்டத்தின் நினைவுகளை சிறப்பு செய்யவும்,சமூக உரிமை உணர்வு என்றென்றும் இந்த சமூகத்தில் நிலைத்திருக்கவும் தமிழ்நாட்டின்முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பினை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார்...

இதன் அடிப்படையில் வைக்கம் போராட்டத்தின் வரலாற்றை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
கேரள மாநிலம் திருவாங்கூரில் வைக்கம் அப்பொழுது இருந்தது.
அங்கு மகாதேவர் ஆலயம் அமைந்திருந்தது. ஆலயத்தை சுற்றி உள்ள வீதிகளில் ஈழவர், தீயர், நாடார் சமூகத்தினர் செல்லக்கூடாது என்றும், ஆலயத்தில் பிரவேசிக்க கூடாது என்றும் விதிமுறைகள் இருந்தன.
இதை எதிர்த்து உள்ளூர் சமூக சீர்திருத்தவாதிகள் தொடங்கியது தான் வைக்கம் போராட்டம்.
திருவாங்கூர் பகுதியில் அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த டி.கே.மாதவன் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடி வந்தார். இவர்தான் அப்போது வைக்கம் போராட்டத்தை முன்னெடுத்தார்.


அவர் கைது செய்யப்படவே வைக்கம் போராட்டம் தளபதிகள் இன்றி தேக்கமடைந்தது. இந்த சூழலில் தான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்திற்கு தலைமை ஏற்றார்.
வைக்கம் போராட்டத்திற்காக 13.04.1924 ஆம் ஆண்டு் சென்ற பெரியாரை திருவாங்கூர் மன்னர் ரயில் நிலையத்தில் வரவேற்ற போது, தான் போராட வந்துள்ளதாகவும் தமக்கு வரவேற்பு தேவை இல்லை என்றும் பெரியார் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
வைக்கம் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு அருவிகுத்தி சிறையில் ஒரு மாதம் சிறை வைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து விடுதலையாகி மீண்டும் போராடிய பெரியார் மீண்டும் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவித்தார்.
இதன் மூலம் தந்தை பெரியார், வைக்கம் போராட்டத்திற்காக ஏழு மாதம் சிறை தண்டனையை அனுபவித்துள்ளார். ஆனால் சிறைச்சாலைகளில் தந்தை பெரியார் அரசியல் கைதிகளை போல் நடத்தப்படவில்லை.

அவருக்கு விலங்கிடப்பட்டு, கழுத்தில் 'கைதி எண்' குறிப்பிடும் மரப்பட்டை அணிவிக்கப்பட்டது. சமூக விடுதலைப் போராட்டத்திற்காக அனைத்து இழி செயலையும் சகித்துக் கொண்ட பெரியார், உறுதியுடன் வைக்கம் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி இறுதியில் அதில் வெற்றி கண்டார்.
30- 3- 1924 முதல் 29-11-1925 வரை 20-மாதம் வைக்கம் போராட்டம் நடைபெற்றது. 29- 11-1925-ஆம் தேதி தந்தை பெரியார் தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழா நடைபெற்றது.
இதன் பின்னர் ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் வீதிகளில் தலைநிமிர்ந்து நடந்தனர். ஆலயம் சென்று வழிப்பட்டனர்.
இந்த மகத்தான வெற்றியின் நூற்றாண்டு விழாவை சிறப்புக்கும் வகையில் 'வைக்கம் நூற்றாண்டு வெற்றி விழா' தமிழ்நாடு அரசின் சார்பில் ஓராண்டு சிறப்பாக நடைபெறும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

1924 ஆம் ஆண்டு இதே நாளில் வைக்கம் போராட்டம் தொடங்கியதன் நினைவாக, இன்று முதல் ஒரு வருடத்திற்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதன் முத்தாய்ப்பாய் வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி, கேரளா அரசு ஏற்பாடு செய்துள்ளள வைக்கம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
வைக்கம் போராட்டத்திற்காக சென்ற பெரியார் சிறை வைக்கப்பட்ட அருவிக் குத்து கிராமத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
செப்டம்பர் 17ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் 'சமூகநீதி நாளில்' தமிழ்நாடு அரசால் வைக்கம் விருது வழங்கப்படும்.
பழ. அதியமான் தமிழில் எழுதி எழுதிய 'வைக்கம் போராட்டம்' நூல் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படும்.

இந்த ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி தமிழ்நாடு-கேரளா ஆகிய இரு மாநில முதல்வர்கள் ஆளுமைகள் பங்கேற்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படும்.
கேரள மாநிலம் வைக்கத்திலுள்ள தந்தை பெரியார் நினைவிடம் நவீன முறையில் சீரமைக்கப்படும். இதற்காக ரூ. 8.14 கோடி நிதி ஒதுக்கப்படும் என்பன உள்ளிட்ட
அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் தான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
எளிய மக்களுக்காக எல்லை கடந்து போராடி வெற்றி கண்ட தந்தை பெரியாரின் நினைவை போற்றவும், சமூக நீதி கருத்துக்களை தொடர்ந்து வலியுறுத்தவும் 'வைக்கம் நூற்றாண்டு விழா' தமிழ்நாடு அரசால் நடத்தப்படுவதாக பெருமையுடன் குறிப்பிட்டார்.
எந்த சூழலிலும் சமூக நீதியை, சீர்திருத்த சிந்தனைகளை கைவிடாத தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின்முதலமைச்சர் தளபதியாரின் அறிவிப்பினை பின்பற்றி தந்தை பெரியார் வெற்றி கண்ட வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடி, சமூக நீதி போராட்டத்தின் வலியை வெற்றியை எதிர்கால தலைமுறையினரின் மனங்களில் பதிய வைப்பது நமது அனைவரின் கடமையாகும்.




Comments