top of page
Search

பல்லாயிரமாண்டுமனதில்தொடரும் தீண்டாமை அழுக்கு அகற்றப்படவேண்டும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Apr 11, 2023
  • 3 min read
ree

ஆசிரியர், மணவை, எம்.எஸ்.

பல்லாயிரமாண்டு அழுக்கு.. மனதில் மனமாற்றங்கள் ஏற்பட வேண்டும்” : அதனை நிலைநிறுத்தஅதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!

தி.மு.கழகத் தலைவர்,தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏப்.11.செவ்வாய்க்கிழமை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தலைமையுரை பேசியதாவது....


எல்லார்க்கும் எல்லாம்’ - என்ற உன்னதமான நோக்கம் கொண்ட திராவிட மாடல் அரசாக நமது அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்து வளர்ச்சியும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அமைய வேண்டும் என்பதே இந்த அரசினுடைய நோக்கம், லட்சியம், பாதை!

இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயர தனி அக்கறை செலுத்தி திட்டங்கள் தீட்டி வருகிறோம். இதில் சிலவற்றை மட்டும் இங்கு அனைவருக்கும் நான் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏப்ரல் 14-ஆம் தேதி ‘சமத்துவ நாளாக’ கொண்டாடப்பட்டு வருகிறது.

வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தீருதவித் தொகை (Solatium) குறைந்தபட்சம் 85,000 ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும், அதிகபட்சம் 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. கடந்த நிதியாண்டில், 3,870 நபர்களுக்கு 47 கோடி ரூபாய் தீருதவித் தொகை (Solatium) வழங்கப்பட்டுள்ளது.

வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தைச் சார்ந்த 723 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம், கல்வி உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா ஆகிய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

வன்முறையால் பாதிக்கப்பட்டோரைச் சமூக கண்ணோட்டத்துடன் அணுகி, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகளை வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டு, இப்பயிற்சிகள் அண்ணா பணியாளர் நிர்வாகக் கல்லூரியின் மூலம் வழங்கப்பட உள்ளன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீருதவிகள் மற்றும் மறுவாழ்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க, ஏற்கனவே 22 நீதிமன்றங்கள் உள்ளன. சேலம், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக நான்கு புதிய தனியுறு சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சேலத்தில் ஒரு புதிய தனியுறு சிறப்பு நீதிமன்றம் துவங்கப்பட்டுள்ளது.

சாதி வேறுபாடுகளற்ற மயானங்களை பயன்பாட்டில் கொண்டிருக்கும் முன்மாதிரி சிற்றூர்களில் (Model Village), வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஊக்கத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 70 சிற்றூர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற்றுள்ளன.

ree

தீண்டாமை கடைபிடிக்கப்படாமல் பொதுமக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தக் கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடும் பொருட்டு, 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த நிதியாண்டில் 37 கிராமங்கள் பயனடைந்துள்ளன.

பொதுமக்களிடையே தீண்டாமைக்கெதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை “மனிதநேய வார விழா” நடத்தப்படுகிறது.

ஆதிதிராவிட மக்கள் கல்விசார்ந்த திட்டங்களுக்காக 2,206 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டிற்காக 120 கோடி ரூபாய் சென்ற ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் ஆதிதிராவிட நலத் துறையால் நடத்தப்படும் 366 விடுதிகளை பழுது பார்க்க 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ree

இந்த அரசு பொறுப்பேற்றபின் திருத்தி அமைக்கப்பட்ட முனைவர் பட்டப்படிப்பிற்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் இதுவரை 2,954 மாணவர்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில மாணவர்களுக்கான வருமான உச்சவரம்பு 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, திருத்தி அமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ் 18 மாணவர்களுக்கு 3 கோடியே 66 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் பயனடைவதற்கான வருமான உச்சவரம்பு மூன்று இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில், தாட்கோவால் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம், 20,544 நபர்கள் மற்றும் 296 சுய உதவிக் குழுக்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிதியாண்டில் 68,225 நபர்கள் பயனடையும் வகையில் 285 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

ree

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 16 கிராமங்களில் வாழும் இருளர் மக்களுக்கு 967 ஏக்கர் நிலப்பரப்பில் முந்திரி சேகரம் செய்வதற்கு சிறப்பினமாக 86 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு 500 குடும்பங்களைச் சேர்ந்த, கூலித் தொழிலாளிகளாக இருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தற்போது தொழில் முனைவோராக தரம் உயர்த்தப்பட்டு உள்ளனர்.

ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் உன்னிக்குச்சி மூலம் 1 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் தளவாடப் பொருட்கள் உற்பத்திக்கான தொழிற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஆண்டு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்னும் புதிய திட்டம் 100 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

நகர்ப்புரப் பகுதிகளிலும், ஊரகப்பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதிசெய்து, முழுமையான சமூக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த “அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்” நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.

பழங்குடியின கிராமங்களுக்கு இணைப்புச் சாலைகள், தெரு விளக்குகள், சோலார் விளக்குகள் மற்றும் குடிநீர் வசதிகள் வழங்கும் சிறப்புத் திட்டத்தின்கீழ், கடந்த ஆண்டு 135 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. வீடற்ற இருளர் உள்ளிட்ட பழங்குடியினருக்கு 4,324 வீடுகள் 420 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகின்றன.

ree

பழங்குடியினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (CTDP), இந்த ஆண்டு 94 கோடியே 99 லட்சம் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனங்களில் குடியிருப்போர் (வன உரிமைகள் அங்கீகரித்தல்) சட்டம், 2006-இன் கீழ் இதுவரை 10,410 தனிநபர் உரிமைகளும், 528 சமூக உரிமைகளும் உறுதி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களின் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும், “தமிழ்நாடு மாநில பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான ஆணையம்” உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது.

பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ்களின் மெய்த்தன்மையினை கூர்ந்தாய்வு செய்து இறுதி ஆணை பிறப்பிக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளர் / கூடுதல் செயலாளர்கள் தலைமையில் மாநில அளவில் மூன்று கூர்நோக்குக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிரை வண்ணார் நல வாரியத்திற்கு புத்துயிர் அளித்து, வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நிதியாண்டில் 10 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

ree

சிறப்புக் கூறுகள் திட்டம் என அழைக்கப்பட்டு வந்த, ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின்கீழ் இந்த நிதியாண்டில் மாநில திட்ட ஒதுக்கீடான 77,930 கோடி ரூபாயில், ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்காக 17,075 கோடி ரூபாய் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்காக 1,595 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டம் செவ்வனே செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய தனிச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. உரிய ஆலோசனைக்குப் பின்னர், அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்கான சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ree

கல்வி புகட்டுதல்

வேலைவாய்ப்பை உருவாக்குதல்

அதிகாரம் பொருந்திய பொறுப்புகளில் அமர வைத்தல்

இடஒதுக்கீடுகள்

பொருளாதார உதவிகள்

மனைகள் தருதல், வீடுகள் வழங்குதல்

இவை அனைத்தும் கண்ணும் கருத்துமாக கவனித்து வழங்கப்பட்டு வருகிறது. இத்தோடு அரசின் கடமை முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை. சுயமரியாதைச் சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.

நிதி ஒதுக்கீடுகளால், தொலைநோக்குப் பார்வையால், கண்காணிப்பால் மற்ற வளர்ச்சிகளை நாம் எட்டிவிடலாம். ஆனால் சமூக வளர்ச்சியும், சிந்தனை வளர்ச்சியும் அப்படிப்பட்டது அல்ல. அது மக்கள் மனங்களில் உருவாக வேண்டும். மக்கள் மனதில் மனமாற்றங்கள் ஏற்பட வேண்டும். இது மிகச் சீக்கிரமாக ஏற்பட்டுவிடாது என்பது உண்மைதான். பல்லாயிரமாண்டு அழுக்கை சில பத்தாண்டுகளில் சரிசெய்திட முடியாது என்பது உண்மைதான். அதே நேரத்தில் சமூக வளர்ச்சி - சிந்தனை வளர்ச்சியை உருவாக்கும் நமது விழிப்புணர்வு பயணம் என்பது தொய்வில்லாமல் தொடர வேண்டும்.


என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page