தூத்துக்குடி, அம்மன் புரத்தில் இன்று வெங்கடேசன் பண்ணையார் குருபூஜை! பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
- உறியடி செய்திகள்

- Sep 26, 2023
- 2 min read

வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம்.. தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு.!.
பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
தூத்துக்குடி: வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் நாளைய தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாள், கத்தி, கம்பு வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேச பண்ணையார். நாடார் பாதுகாப்பு பேரவை என்னும் அமைப்பின் தலைவராக இருந்தவர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம், சமூகத்தில் பண பலம், படைபலம் என்னும் சகல அந்தஸ்துகளுடன் இருந்தவர் .
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராதிகா செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்ட வெங்கடேச பண்ணையார் பெரும்பாலும் சென்னையிலேயே தங்கியிருந்தார். தமிழகத்தின் தென் மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட நாடார் சமூகத்தினர் மத்தியிலும் இவருக்கு பெரும் செல்வாக்கு இருந்துள்ளது.!

கடந்த 2003ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நண்பரின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது நடு இரவில் போலீசார் அங்கு சென்று வெங்கடேச பண்ணையாரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். சென்னையில் எந்த ஒரு வழக்கிலும் சிக்காத வெங்கடேச பண்ணையாரை வேண்டுமென்றே பிடித்து போலீசார் சுட்டுக்கொலை செய்துள்ளதாகவும், இது என்கவுன்டர் இல்லை கொலை என்பதால், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி வழக்கு தொடர்ந்தார்.!

இந்த வழக்கு கடந்த 2003ஆம் ஆண்டு முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து கடந்த 2017ஆம் ஆண்டு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அதில், வெங்கடேச பண்ணையார் என்கவுன்டர் நடந்து 13 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த என்கவுன்டர் வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தேவையில்லை. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.!

ஆண்டுதோறும் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் குரு பூஜையாக கடைபிடிக்கின்றனர். நாளைய தினம் வெங்கடேச பண்ணையார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட உள்ளதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், அம்மன்புரம் கிராமத்தில் 26.09.2023 அன்று அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனம் சார்பில் மறைந்த வெங்கடேஷ் பண்ணையாரின் 20 ஆவது நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, அசம்பாவிதங்கள் ஏதுமின்றி மேற்படி விழா அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், 25.09.2023 மாலை 6.00 மணி முதல் 27.09.2023 காலை 06.00 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.!

அம்மன்புரம் பகுதிகளிலும் மற்றும் பிற பகுதிகளில் இருந்தும் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு வருகை தரும் பொதுமக்கள் அனைவரும் வாள், கத்தி, கம்பு வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும், விழாவிற்கு கலந்து கொள்ள பொதுமக்கள் அழைத்து வரப்படுவதற்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144இன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.!


இந்தத் தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு பொருந்தாது. வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினமானது அமைதியான முறையில் அனுசரிக்க மாவட்ட காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.!




Comments