top of page
Search

பன்முக கலைஞர் பி.யூ.சின்னப்பா! கவிதை பித்தனின் சிறப்பு ஆய்வுபார்வை!! நினைவிடம் காக்குமா தமிழக அரசு!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 5, 2023
  • 4 min read
ree



பி.யூ.சின்னப்பா அவர்களின் 108வது பிறந்தநாள்

இன்று (5.5.2023) !


முன்னால் எம்.எல்.ஏ.கவிச்சுடர் கவிதை பித்தன்மேனால் பதிவிலிருந்து!


பி.யூ.சின்னப்பாவின் நினைவிடம் பொலிவு பெறுமா?

..................... ................... ...................

வடக்கே திருச்சி மலைக்கோட்டை!

தெற்கே திருமயம் புகழ்க்கோட்டை!

நடுவில் திகழும் புதுக்கோட்டை!

நாடே புகழும் கலைக்கோட்டை!

என்று கவியரங்க மேடைகளில் நான் முழங்குவதுண்டு!


கலைக்கோட்டையான புதுக்கோட்டைக்கு, அழியாப் புகழ் சேர்த்த அற்புத நடிகர்!

தன் கம்பீரமான குரல் வளத்தால், நாடக, திரையுலக ஆர்வலர்களின் இதய சிம்மாசனத்தில் கொலுவீற்றிருந்த கோமகன்!

தனது தன்னேரில்லாத் தனித்தன்மை மிக்க நடிப்பாற்றலால், 80 ஆண்டுகளுக்கு முன்பே,

தமிழகத்தில் மட்டுமல்ல! கல்கத்தா, டெல்லி, மும்பை போன்ற மாநிலங்களிலும், பர்மா, பினாங்கு, மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் நாடகங்கள் மூலமாகப் பல்லாயிரக்கணக்கில் இரசிகப் பெருமக்களையும், இரசிகர் மன்றங்களையும் பெற்றிருந்த மிகப்பெரும் பெருமைக்கு உரியவர் தான் பி.யூ.சின்னப்பா அவர்கள்!

முப்பத்தைந்து ஆண்டுகளே வாழ்ந்து, முப்பதுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, அவற்றில் இருப்பத்தைந்து படங்களில் வெற்றிப் புகழ்நாட்டி, ஐம்பதுக்கு மேற்பட்ட நாடகங்களை, ஆயிரத்துக்கு மேற்பட்ட முறை நடத்தி, அகிலம் வியக்கச் சாதனை புரிந்த சரித்திர நாயகர் தான் பி.யூ.சின்னப்பா !

புதுக்கோட்டை அய்யனார்புரம் முதல் வீதியில், நைனாரிக் குளத்தின் தென்கரையை ஒட்டிய வீட்டில் பிறந்தவர். இவரது தாத்தாவும் இசை மேதை! இவர்தம் தந்தையார் "புதுக்கோட்டை உலகநாத பிள்ளை" , "புதுக்கோட்டையின் அடையாளங்களில்"ஒன்றான "புதுக்குளத்தின்" தென்கரை முனையில் அமர்ந்து பாடினால், திருக்கட்டளை வரை(மூன்று கிலோ மீட்டர்) கேட்குமாம்! அந்த அளவுக்குப் பிறப்பிலேயே குரல் வளம் வாய்த்த இசைப் பெருந்தகையின் பேராற்றல் மிக்க பிள்ளையாகப் பிறந்தவர்தான்,

பாடும் திறனாலும், ஒப்பற்ற நடிப்புக்கலையாலும் திரையுலகின் உச்சப் புகழில் ஒளி வீசித் திகழ்ந்த உயர்ந்த பெருமைக்குரிய பி.யூ.சின்னப்பா அவர்கள்!

ஐந்து வயது முதலே நாடகத்தில் நடிக்கத் தொடங்கி, தொடக்கப் பள்ளிக் கல்வியைக் கூட நிறைவு செய்யாமல் பாதியிலேயே நிறுத்தி,

மதுரை பாய்ஸ் நாடகக் கம்பெனியில், மாதம் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் தன் கலையுலகப் பயணத்தைத் தொடங்கி,

திருவையாறு சுந்தரேச நாயனக்காரரிடமும், காரைக்கால் வேதாசலப் பாகவதரிடமும் முறையாகச் சங்கீதம் பயின்று, வர்ணம், பல்லவி, சுரம் போன்றவற்றில் முதிர்ந்த இசைவாணர்களே மூக்கில் விரல் வைத்து, வியப்பில் மூழ்கும் அளவுக்கு 500 உருப்படிகளுக்கும் மேலாகக் கற்றுத் தேர்ச்சி பெற்ற சங்கீத இளவரசனாக மேடைகளில் மிளிர்ந்தோங்கி, இசைப் பயிற்சியுடன் நின்றுவிடாமல்,

புதுக்கோட்டையில் தால் மியான் கொட்டடி என்னும் சாமி ஆசாரிக் கொட்டடியில் சேர்ந்து,

புகழ்மிக்க இராமநாத ஆசாரி அவர்களிடம், கத்திச் சண்டை, கம்புச் சண்டை, சிலம்பம், எளிதில் எவரும் கையாள முடியாத சுருள் பட்டா வீச்சு போன்ற வித்தைகளையும் ஐயம் திரிபறக் கற்றுத் தேர்ந்து, குருநாதர்களே கொண்டாடும் அளவுக்கு நிகரற்ற வாள்வீச்சு வீரராகி,

அத்தனைத் திறமைகளின் மொத்த வெளிப்பாட்டின் காரணமாகத் திரையுலகின் முடிசூடா மன்னராகப் பதினைந்து ஆண்டுகள் பட்டொளி வீசிய பெரும்புகழுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்தவர்தான், எம்.ஜி.ஆர். அவர்களுக்கே கத்தி, கம்புச் சண்டை ஆசானாக விளங்கிய நம் மண்ணின் மைந்தர் மதிப்பிற்குரிய பி.யூ.சின்னப்பா ஆவார்!

கடிகாரத்தின் சுருள் வளையம் போன்ற அமைப்பு கொண்ட கத்தியின் ஒரு முனையைக் கையில் மாட்டிக் கொண்டு, மறு முனையை 40 அடி தொலைவில் உள்ள பகைவர் மீது வீசினால், எதிரியின் தலை மட்டும் துண்டாகி, கத்தியை வீசிய வீரரின் கைக்கு வந்து விடும்! இத்தகு சுருள்பட்டாவை வீசும் கலையில் அரைகுறையாகத் தேர்ச்சி பெற்றவர்கள், கொஞ்சம் எச்சரிக்கை தவறினாலும், கத்தியை வீசுபவர் தலையே துண்டாகி விடும் ஆபத்து நிறைந்த இந்த வித்தையில், வெள்ளையனை எதிர்த்து வீரச் சமர் புரிந்த ஊமைத்துரைக்குப் பிறகு நூறு விழுக்காடு முழுத் தேர்ச்சி பெற்றவர் ,

"தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார்" பி.யூ.சின்னப்பா தான் எனும் வரலாற்றுச் செய்தி நம்மை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடிக்கிறதல்லவா!?

1940 ஆம் ஆண்டிலேயே(உத்தமபுத்திரன்) இரட்டை வேடத்தில் நடித்து,

1949ஆம் ஆண்டிலேயே(மங்கையர்க்கரசி) மூன்று வேடங்களில் நடித்து,

1944 ஆம் ஆண்டிலேயே(ஜகதலப் பிரதாபன்)

ஐந்து வேடங்களில் நடித்து,

அனைத்துக்கும் மேலாக, முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே, அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத அந்தக் காலத்திலேயே, காத்தவராயன் திரைப்படத்தில் பத்து வேடங்களிலும் நடித்து, அதிசயம் நிகழ்த்திக் காட்டிய கலையுலகப் பேரரசர் அல்லவா , அபூர்வத் தனியாற்றல் மிக்க தவ நடிக பூபதி பி.யூ.சின்னப்பா தான்!

தனது 19 வது வயதில் "சவுக்கடி சந்திரகாந்தா" படத்தின் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து,

இராஜமோகன்(1937)

பஞ்ச சேகரி(1938)

அனாதைப்பெண்(1938)

யயாதி(1938)

மாத்ருபூமி(1939)

உத்தமபுத்திரன்(1940)

தயாளன்(1941)

தர்ம வீரன்(1941)

ஆர்யமாலா(1941)

மனோன்மணி(1942)

பிரிதிவிராஜன்(1942)

கண்ணகி(1942)

குபேர குசலா(1943)

ஹரிச்சந்திரா(1944)

ஜகதலப்பிரதாபன்(1944)

மகா மாயா(1944)

அர்த்தநாரி(1946)

விகட யோகி(1946)

காத்தவராயன்(1946)

துளசி ஜலந்தர்(1947)

கிருஷ்ண பக்தி(1949)

மங்கையர்க்கரசி(1949)

ரத்னக் குமார்(1949)

வனசுந்தரி(1951)

சுதர்சன்(1951)

போன்ற வெற்றிப் படங்களைத் தமிழ்த் திரையுலகுக்கு வழங்கி, வெள்ளித்திரையில் தனக்கென்று தனி முத்திரை பதித்துச் சென்ற

சரித்திரச் சாதனையாளர்தான் போற்றுதலுக்குரிய புகழின் சிகரம் பி.யூ.சின்னப்பா!

தமிழ்த்திரை வானில், சூரிய, சந்திரரைப்போல், கலாரசிகப் பெருமக்களின் நெஞ்சத்தில் நிரந்தர அரியணை போட்டு அமர்ந்து, இறுதிவரை நிமிர்ந்து புகழ்நடை போட்டவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பது உலகறிந்த உண்மையாகும்.

கத்தி, கம்பு, சிலம்பம், கொம்பு, வாள்வீச்சு, மல்யுத்தம் என, அத்தனைத் திறனும் காட்டி, தனக்கேற்ற, தான் விரும்பும் பாத்திரங்களில் மட்டுமே நடித்து, வாலிப நெஞ்சங்களையும், வயது முதிர்ந்தோரையும் கூட வளைத்துப் போட்டவர் எம்.ஜி.ஆர்.!

எந்தப் பாத்திரம் எனினும் ஏற்று, அந்தக் கதாபாத்திரமாகவே தத்ரூபமாக மாறி, அனைத்துத் தரப்பினரையும் தன் நடிப்பாற்றலால் ஈர்த்துச் சேர்த்து வைத்திருந்தவர், உலகத்தில் இணை சொல்ல முடியாத நடிகர் திலகம் !

இதில் வேடிக்கை என்னவெனில், அத்தனை விதமான பாத்திரங்களிலும் நடிகர் திலகத்தைப் போல், நவரசத்தையும் வெளிப்படுத்துவதில் முழுமையாக மக்கள் திலகம் முனைப்பு காட்டவில்லை!

நடிகர் திலகமோ சண்டைக் காட்சிகளில் ஒளிவிடும் அளவுக்கு மக்கள் திலகத்தைப் போல, வித்தைகளில் பயற்சி பெற ஈடுபாடு காட்டாதவர்!

இந்த இருவருமே பாடுவதில் ஆர்வமும், ஆற்றலும் இல்லாதவர்கள்.

திரையுலகில் ஈடும் இணையும் இன்றி உலா வந்த பெருமைக்குரிய தியாகராஜ பாகவதர் வசீகர முகப்பொலிவையும், மென்மை கலந்த குரல் வளம் கொண்டு பாடும் நளினத்தையும் மட்டுமே மூலதனமாக வைத்துக் கலைத்துறையில் முன்னேறி முழுப்புகழ் பெற்றவர்! இவருக்கு நவரச வெளிப்பாடும், சண்டைக் காட்சிகளில் மிளிரும் ஆற்றலும் முழுமையாகக் கைவரப் பெறவில்லை என்பதுதான் திரையுலக ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாக உணரப்படுகின்றது!

ஆனால், நடிப்பாற்றல், சண்டைக் காட்சிகளில் காட்டிய சாகசம், சங்கீதப் பேராற்றல் இவை மூன்றிலுமே சரிநிகர் திறமையை வெளிப்படுத்திய ,

இந்தியத் திரையுலகின் ஒரே சகலகலா வல்லவன் , பீடு மிகு நடிப்பு மன்னன் நம் பி.யூ.சின்னப்பா மட்டுமே!

முப்பத்தைந்து வயதுக்குள், பதினைந்தே ஆண்டுகளில், இருபத்தைந்துக்கு மேலான வெற்றிப்படங்களைக் கொடுத்து, மலையளவு புகழும், பொருளும் குவித்த மாமனிதர் பி.யூ.சின்னப்பா , இனி எந்த வீட்டையும், இடத்தையும் வாங்கவோ, பிறர் அவருக்கு விலைக்கு விற்கவோ கூடாது என்று.

அன்றைய புதுக்கோட்டை சமஸ்தானம் தனிச்சட்டமே நிறைவேற்றிய அதிசயம் இந்தப் புதுக்கோட்டை மண்ணில் நிகழ்ந்துள்ளது! அந்த அளவுக்குத் திரும்பும் திசையெல்லாம் வீடு, நிலம், வயல் என்று தன் சொந்த உழைப்பில் ஈட்டிய பொருளைக் கொண்டு இடங்களை வாங்கிப் போட்டார் பி,யூ.சின்னப்பா !

ஏறத்தாழ 200 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடைய சொத்துக்களுக்கு உரியவராக கலைவானில் கொடி கட்டிப் பறந்த, நடிப்புலகச் சக்ரவர்த்தி, தவ நடிக பூபதி பி.யூ.சின்னப்பா நினைவிடம், பாழடைந்து சிதிலமுற்ற ஒரு குட்டிச் சுவரை விட மோசமான நிலையில், அவர் பெயரிலேயே விளங்கும் சின்னப்பா நகரில் இருக்கிறது என்றால், யாரும் நம்ப மாட்டீர்கள்! ஆனாலும் நம்பித்தான் ஆக வேண்டும்! மாமன்னன் இராஜராஜ சோழன் நினைவிடம் கூட, குடந்தைக் கருகில், உடையாளூரில் குட்டிச்சுவரினும் கீழான நிலையில் தானே உள்ளது?!

புதுக்கோட்டையில் கவனிப்பாரற்றுக்கிடக்கும் அந்தக் கலைச் சிகரத்தின் நினைவிடம், புதுப்பிக்கப்பட்டு, மாபெரும் மணிமண்டபம் எழுப்பப் பெற்று, நாடக, திரையுலக வரலாற்றுக் கருவூலம் ஒன்றை அங்கே நிறுவி, ஆர்வமுள்ள அயல் நாட்டாரும் வந்து ஆய்வு செய்து பயனடையும் வகையில் நூலகம், கருத்துக்கண்காட்சிக் கூடங்கள் அமையப் பெற்ற காலப் பெட்டகமாக, அந்த நினைவு மண்டப வளாகம் திகழும் வண்ணம், தமிழர்தம் கலை, பண்பாட்டு விழுமியங்களைக் காப்பாற்றும் நம்முடைய கழகத் தலைவர், தமிழக முதல்வர் தளபதியாரின் தலைமையிலான தமிழக அரசு தன் கடமையை நிறைவேற்றுவதற்குப் பெருமுயற்சி எடுப்போம் என்பதுதான்,

தவ நடிக பூபதிக்குத் தமிழ் மக்கள், குறிப்பாகப் புதுக்கோட்டை மக்கள் செலுத்தும் வீர வணக்கம் நிறைந்த நன்றிக்கடன் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்வதுடன், 05.05.1916 ஆம் ஆண்டில் பிறந்த, அந்தக் கலை மாமன்னரின் 108 வது பிறந்தநாளில் அவரைப் பெருமையுடன் நினைவு கூரும் இந்தத் தருணத்தில்,

புதுக்கோட்டை மண்ணுக்குரிய பெருமைகளின் புகழ் மகுடமாகத் திகழும் தவ நடிக பூபதியைத் தன் உயிர் மூச்சுடன் கலந்து வைத்து, அவர் நினைவாகவே தம் ஒவ்வொரு கடமையையும் நிறைவேற்றிவருவதுடன், அவருக்கு நூற்றாண்டு விழாவையும் புதுக்கோட்டையில் நிகழ்த்திப் பெருமை சேர்த்த அன்பிற்குரிய கால்நடை மருத்துவர் .கனகராஜன் உள்ளிட்ட தோழர்களுக்கும் பாராட்டு நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- கவிச்சுடர். கவிதைப்பித்தன்.

................... .................... ....................

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page