எடப்பாடிக்கு 10 நாள் கெடு! செங்கேட்டையன் அதிரடி பேட்டி!
- உறியடி செய்திகள்

- Sep 5
- 2 min read

எடப்பாடிக்கு 10 நாள் கெடு! கே.ஏ.செங்கோட்டையன் அதிரடி!
இன்று கோபிச்செட்டிப்பாளையத்தில் அ.தி.மு.கவின் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 5ஆம் தேதி தொண்டர்கள் மத்தியில் மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்தார். கோபிச்செட்டிப்பாளையம் கரட்டூரில் உள்ள அ.தி.மு.க.. அலுவலகத்தில் தொண்டர்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அவரது பேச்சை ஒளிபரப்ப அலுவலகத்துக்கு வெளியே பெரிய திரை வைக்கப்பட்டது. நேரம் செல்லச்செல்ல ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் அங்கே குவிந்தனர்.
இந்தக் கூட்டத்திற்காக தனது இல்லத்திலிருந்து புறப்பட்டவர், கோபி நகர எல்லைக்கு வந்தவுடன் ஒரு திறந்த வெளி ஜீப்பில் ஏறி ஊர்வலமாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்தார். கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் ஜீப்பில் பயணம் செய்து அலுவலகத்தை வந்தடைந்தார்.
எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.கவைத் துவங்கினார். முதலில் குள்ளம்பாளையத்தில் கிளைக் கழகச் செயலாளராகப் பணியாற்றத் துவங்கினேன். 1973ல் திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் மாயத்தேவர் போட்டியிட்டு 237,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார். 1975ல் கோவையில் கட்சியின் பொதுக் குழு நடைபெற்றது. அதில் அரங்கநாயகம் தலைவராகவும் திருப்பூர் மணிமாறன் செயலாளராகவும் என்னைப் பொருளாளராகவும் நியமித்தார்கள். அதை நாங்கள் நன்றாகச் செயல்படுத்தியத்தை சத்யா ஸ்டுடியோவுக்கு அழைத்து எம்.ஜி.ஆர். பாராட்டினார். 1977ல் நான் கோபிச்செட்டிப்பாளையத்தில் போட்டியிட்டபோது, நீ சத்யமங்கலத்தில் நில் என்றார் எம்.ஜி.ஆர். எனக்கு சத்தியமங்கலம் புதிய தொகுதி என்றேன். என் பெயரைச் சொல் வெற்றிபெறுவாய் என்று சொன்னார்.
அந்த இயக்கத்திலிருந்து எஸ்டிஎஸ் போன்றவர்கள் வெளியேறும்போது, அவர்களது இல்லத்திற்கே சென்று, தமிழ்நாட்டைக் காப்பாற்ற நான் இந்த இயக்கத்தை நடத்துகிறேன். என்னோடு வாருங்கள் என்று அழைப்பார். அவரது 10 ஆண்டு காலக ஆட்சிக்குப் பிறகு எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு, கட்சியைப் பொறுப்பேற்குமாறு ஜெயலலிதாவிடம் நாங்கள் வேண்டினோம். அவரும் சிறந்த ஆட்சியைத் தந்தார். இது தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். 2016ல் ஜெயலலிதா மறைந்த பிறகு இந்த இயக்கத்திற்கு பல்வேறு சோதனைகள் வருகிறபோது, அன்று எல்லோரும் சேர்ந்து, இந்த இயக்கம் உடைந்துவிடக்கூடாது என அன்றைய பொதுச் செயலாளராக திருமதி சசிகலாவை ஒருமனதாக நியமித்தோம். என்னை ஜெயலலிதா பாராட்டியது எல்லோருக்கும் தெரியும். நாம் நெடும் பயணத்தை மேற்கொள்ளும்போது பல சோதனைகள் வரும், பொறுப்புகள் வரும். இந்த இயக்கத்திற்காக அந்தப் பணிகளை ஆற்றியிருக்கிறேன். இந்த இயக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருந்தேன். எனக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், இந்த இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்றுதான் என் பணிகளைத் தொடர்ந்தேன்.
2016க்குப் பிறகு நாம் தொடர்ந்து தேர்தலைச் சந்திக்கிறோம். ஜெயலலிதாவைப் பற்றி காளிமுத்து போன்றவர்கள் பேசிய வார்த்தைகள் இன்றும் தொண்டர்களின் நெஞ்சத்தில் முள் குத்துவதைப்போல இருக்கிறது. 1991ல் நீங்கள் கட்சியின் மூத்த தலைவர்களை மதிக்கவில்லை என்றார்கள். அதற்குப் பதிலளித்து பேசிய ஜெயலலிதா, என் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் எப்படி விமர்சித்தார்கள் என்பதைச்சுட்டிக்காட்டி பேசினார்.
தேர்தல்களைச் சந்திக்கும்போது பல பிரச்சனைகள் ஏற்பட்டன. அன்று பா.ஜ.கவோடு கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களை பெற்றிருக்கலாம். எல்லோரும் ஒன்றிணைத்து, அரவணைத்து செல்ல வேண்டும் என்றோம். சகோதரர் வேலுமணிகூட இதனைக் குறிப்பிட்டார். இதற்குப் பிறகு பொதுச் செயலாளரைச் சந்தித்தோம். தேர்தலில் என்னதான் வியூகத்தை வகுத்தாலும் வெற்றிபெற முடியவில்லை. நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சி.வி. சண்முகம் ஆகிய ஆறு பேரும் சந்தித்தோம். கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை. வெளியே சென்றவர்களை அரவணைத்தால்தான் வெற்றிபெற முடியும். 2010ல் டெபாசிட் இழந்த பிறகு, கோவை குலுங்கியது, மதுரை நடுங்கியது, திருச்சி திரும்பியது என்று சொல்லும் அளவுக்கு மாநாட்டிற்கு கூட்டம் வந்தது. இருந்தபோதும் தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளை இணைத்து ஜெயலலிதா வெற்றிபெற்றார். 2016லும் அப்படித்தான் வெற்றிபெற்றார். வெளியே சென்றவர்களை நாம் அரவணைக்க வேண்டும். எந்த நிபந்தனையும் இல்லை, எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள், உங்களோடு இணைந்து பணியாற்றுவோம், எந்தத் தியாகத்தையும் செய்து பணியாற்றுகிறோம் என்று பல்வேறு மேடைகளில், கடிதங்களில் சொல்லியிருக்கிறார்கள்.
நாங்கள் எல்லோரும் தவித்துக்கொண்டிருக்கிறோம். யார் இதை எடுத்துச் சொல்வது என்ற நிலையில், நான் இதைப் பேசுகிறேன். மக்கள் ஆட்சி மாற்றம் தேவை என நினைக்கிறார்கள். அப்படி ஆட்சி மாற்றம் தேவை என்றால் வெளியே சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். வெளியே அமைதியாக இருப்பவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். அப்படிச் செய்யும்போதுதான், வெற்றிபெற முடியும். நாளை நம் ஆட்சி மலரப் போகிறது என யாராலும் சொல்ல முடியாது. என்னிடம் பலரும் பேசினார்கள். அதன் அடிப்படையில்தான் உங்களைச் சந்தித்துப் பேசுகிறேன். அவர்கள் (வெளியில் இருப்பவர்கள்) எந்தப் பொறுப்பும் தேவையில்லை என அவர்கள் சொல்லும்போது, நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இதனை விரைந்து செய்ய வேண்டும். தேர்தல் பணிகள் துவங்கிவிட்டன. அப்படிச் செய்யவில்லையென்றால் இந்த மனநிலையில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து அந்தப் பணிகளை மேற்கொள்வோம். அதனைச் செய்யவில்லையென்றால் ஜெயலலிதா ஆட்சி மலர ஏதுவாக இருக்காது. இந்தப் பிரச்சனைக்கு முடிவுவந்தால்தான் சுற்றுப் பயணத்தில் கலந்துகொள்வேன்" இவ்வாறு அவர் கூறினார்.
.




Comments