சட்டமன்ற தேர்தல் பணி! 40 க்கு 40 பெற்றதைப்போல் இன்றே தொடங்குவோம்! கனிமொழி கருணாநிதி, பேச்சு!
- உறியடி செய்திகள்

- Jun 20, 2024
- 5 min read

மக்களவை தேர்தலில் 40 க்கு 40 ம் வெற்றிப்பெற்றதைப் போல 2026 , சட்டமன்ற தேர்தல் பணிகளை இன்றே தொடங்குவோம் என்று, கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. கூறினார்.
தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி. மு.கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா, 40/40 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம், குருக்கள்பட்டியில் முப்பெரும் விழாவாக நடைபெற்றது. இதில், தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளர், தி.மு.கழக. நாடாளுமன்ற இரு அவைக் குழு தலைவருமான கவிஞர் கனிமொழி கருணாநிதி, எம்.பி சிறப்புரையாற்றினார்.!
அப்போது கனிமொழி கருணநிதி எம்.பி. பேசியதாவது ....

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் தளபதி கலந்து கொண்ட நன்றி தெரிவிக்கும் கூட்டம் கோவையிலே இரண்டு நாட்களுக்கு முன்னால் மிகச் சிறப்பாக நடந்தது.
அங்கு பேசிய அனைத்துக் கட்சி தலைவர்களும், நமது கூட்டணி கட்சி தலைவர்களும் நாம் பெற்றிருக்கக் கூடிய இந்த 40 க்கு 40 வெற்றி என்பது இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த, திராவிட முன்னேற்றக் கழகத்தின், திராவிட மாடல் நல்லாட்சிக்கு கிடைத்த சான்று என்றும்.., அதே நேரத்தில் எந்த நேரத்திலும் நமது கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் ஒரு போராட்ட குணத்தோடு நின்று பா.ஜ.க.வை, அதன் பிரிவினை வாத கொள்கைகளை எதிர்த்து கொண்டிருக்கிறோம், அதற்கு கிடை த்திருக்கக் கூடிய வெற்றி என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.
வேறு எந்த மாநிலத்திலும் பெற முடியாத வெற்றி தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கும் வெற்றி. அதைவிட குறிப்பிட்டுச் செல்ல வேண்டும் என்றால் ஒன்றிய பி.ஜே.பி.யால் வெற்றி பெற்றிருக்கக் கூடிய சூழ்நிலை உருவாகி இருந்தாலும், அந்த வெற்றி என்பது ஒரு தோல்வியை போன்ற வெற்றிதான்.

இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்புக்கு வரவில்லை என்றாலும் இந்த நாடே நம் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது, இந்த உலகமே கொண்டாட கூடிய ஒரு வெற்றியாக இந்தியா கூட்டணியின் வெற்றி இந்த தேர்தலில் அமைந்திருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க. இந்த நாட்டுக்கு என்ன செய்திருக்கிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிரதமர் தான் கொடுத்த ஒரு வாக்குறுதியையாவது நிறைவேற்றியிருக்கிறாரா? பதினைந்து லட்ச ரூபாய் உங்கள் அக்கவுண்டில் போடுகிறேன் என்றார், கருப்பு பணத்தை ஒரே நாளில் ஒழித்து விடுவேன் என்றார், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கி தருவேன் என்றார்.!
இதில் எதையுமே நிறைவேற்றாத ஒருவர்தான் நரேந்திர மோடி.! அவர்கள் செய்தது ஒரே ஒரு சாதனை. அதை நடத்திவிட்டால் இந்த நாடே திரண்டு வந்து தங்களுக்கு வாக்களித்து விடும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார்கள். அதுவும் தமிழ்நாட்டிலிருந்து இலவசமாக பஸ், ரயில்கள் கூட விட்டார்கள். ஒருவேளை விமானம் கூட விட்டிருக்கலாம் எனக்கு தெரியவில்லை.!

அயோத்தியில் கோவிலை திறக்கக்கூடிய நேரத்திலே எல்லோரையும் விட அங்கே இருக்கக்கூடிய எல்லாவற்றையும் விட முன்னிலைப்படுத்தப்பட்டது பிரதமர் நரேந்திர மோடியைத்தான். அதனால்தான் என்னவோ. தேர்தல் நேரத்திலே நான் சாதாரண மனிதன் அல்ல நானே கடவுள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டார் போலும்.!
நான் கேட்கிறேன், ’நானே கடவுள். என் காலில் விழுந்து எல்லாரும் கும்பிடுங்கள்’ என்று உங்கள் ஊரில் யாராவது சொன்னால் நீங்கள் எல்லாம் என்ன சொல்வீர்கள்? இதற்கு மேல் நான் எதுவும் சொல்வதற்கில்லை. இப்படிப்பட்ட ஒரு பிரச்சாரத்தை கையில் எடுக்கக்கூடிய சூழலுக்கு செயலற்ற தன்மையால் அவர் தள்ளப்பட்டார்.!

கோவில் கட்டுவதோ, சர்ச் கட்டுவதோ, மசூதி கட்டுவதோ ஒரு அரசாங்கத்தின் வேலை அல்ல. அதெல்லாம் மக்களுக்கு தெரியும். அரசாங்கம் ஆட்சி நடத்த வேண்டும். மக்களுக்கான பணிகளை செய்ய வேண்டும். இது எதையுமே செய்யாமல் மக்களை மதத்தின் பெயரால் மட்டுமே ஏமாற்றி ஆட்சியைப் பிடித்து விட முடியும் என்ற கனவில்தான் தேர்தலுக்கு முன் நானூறு இடங்களை வெற்றி பெறுவோம் என்று பிரதமர் கூறினார்.!
தேர்தல் முடிவில் இந்திய மக்கள் எந்த இடத்தில் அவர்கள் இருக்க வேண்டும் என்ற இடத்தை காட்டியிருக்கிறார்கள்.!
அதைவிட நான் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்... தமிழக மக்கள் தாமரை இங்கே மலரவே மலராது என்று அவர்களை ஒதுக்கித் தள்ளி விட்டார்கள்.!

இன்னொருவர் கோயம்புத்தூரில் வேட்பாளராக நின்றார். அவர் பிரச்சாரத்தில் என்ன சொன்னார்? தென் தமிழகத்தில் ஒரு சீட்டு கூட தி.மு.க. கூட்டணி ஜெயிக்க முடியாகு என்று சவால் விட்டார். அவர் எதைச் சொன்னாலும் இதை நான் சாதாரணமாக சொல்லவில்லை ஆய்ந்து சொல்லுகிறேன் என்று சொல்லுவார். ஏனென்றால் மெத்தப்படித்த அதிகாரி இல்லையா அவர்? இங்கே கூட அதே போல் அதிகாரிகள் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி பேசுவதில்லை.!
அதனால் அவர் தனக்கு எல்லாமே தெரியும் தென் தமிழ் நாட்டில் திமுக வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று பேசினார். வாய்ப்பு இல்லாமல் போனது யாருக்கு என்பது உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும்.!
ஏனென்றால் தமிழ்நாட்டு மக்கள் ஒரு அரசாங்கத்தின் பணி என்ன என்பதை புரிந்து கொண்டிருக்கக் கூடியவர்கள். திராவிட இயக்கம் காலம் காலமாக மக்கள் அறிவாற்றல் பெற்றவர்களாக இருக்க வேண்டும், அறிவியல் புரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் ஆட்சி நடத்துகிறது.!
பிரதமர் தமிழ்நாட்டுக்கு திரும்பத் திரும்ப பல முறை வந்தார். பல்வேறு விஷயங்களை சொன்னார். ஆனால் தமிழ்நாட்டுக்கு வந்த போது நான் தான் கடவுள் என்று சொல்லவில்லை. ஏனென்றால் அப்படி சொன்னால் தமிழ்நாட்டில் சிரித்துக் கொண்டிருப்பார்கள் என்று அவருக்குத் தெரியும்.
மோடி, பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அத்தனைக்கும் தமிழ்நாடு இன்று பாடம் புகட்டியிருக்கிறது. ஆட்சி என்றால் மக்களுக்கான பணிகளை செய்ய வேண்டும், இங்கே முதலமைச்சராக இருக்கக்கூடிய நமது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் செய்து கொண்டிருப்பதை போல பணிகள் செய்ய வேண்டும். சும்மா இங்கே வந்து மக்களை பிரிக்கக்கூடிய பேச்சுக்கள், வீராவேசமான பேச்சுக்கள், மற்றவர்களை பழி சொல்லக்கூடிய பேச்சுக்களை மட்டும் வைத்துக்கொண்டு தேர்தலை வெற்றி பெற்று விட முடியாது என்ற பாடத்தை தமிழ் மக்கள் சொல்லித் தந்திருக்கிறார்கள்.!
இங்கே இருக்கக்கூடிய சகோதரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தருவேன் என்று அறிவித்தவர் நமது முதலமைச்சர் அண்ணன். அறிவித்தபடி அதை ஒரு கோடியே 16 லட்சம் சகோதரிகளுக்கு மாதாமாதம் வழங்கிக் கொண்டிருப்பவர் முதலமைச்சர். இந்த கூட்டத்திலேயே மகளிர் உரிமைத் தொகை வாங்குபவர்கள் அமைதியாக இருப்பீர்கள். வாங்காத அந்த இரண்டு மூன்று பேர் இன்னும் வரலையே என்று சொல்வீர்கள். ஆனால் மிக விரைவிலே மறுபடியும் கணக்கெடுக்கப்பட்டு விடுபட்டு போனவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் தளபதி அறிவித்திருக்கிறார்.!
திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி தரக் கூடியவர்கள் என்று தான் அர்த்தம். தலைவர் கலைஞர் அவர்கள் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி தருகிறேன் என்று அறிவித்த போது யாருமே நம்பவில்லை. ஒரு அரசாங்கத்தால் இதையெல்லாம் செய்ய முடியாது என்று சொன்னார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அதை நிறைவேற்றிக் காட்டியவர் தலைவர் கலைஞர்.!
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற போது கூட கலைஞர் தொலைக்காட்சி பெட்டி பற்றி பேசிய போது இன்னும் அது வேலை செய்து கொண்டிருக்கிறது என்று பலர் சொன்னார்கள். அதைக்கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.!
ஆகையால் நாங்கள் கொடுக்கக் கூடிய வாக்குறுதிகள் அது விவசாயிகளுக்கு இலவச மின்சாரமாக இருக்கட்டும், விவசாயிகளின் கடன் ரத்தாக இருக்கட்டும், அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டமாக இருக்கட்டும், இளம்பெண்களுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும் கல்லூரியில் படிப்பதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.!
இவ்வாறு மக்கள் முன்னேற வேண்டும், தலைமுறைகள் முன்னேற வேண்டும், அடுத்த தலைமுறை இந்த உலகத்தை ஆட்சி நடத்த வேண்டும் என்று சிந்திக்க கூடிய ஒரு ஆட்சியை... தமிழர்கள் இந்த உலகத்தை வழிநடத்தக் கூடியவர்கள். அவர்களது திறமைகளை நாம் அவர்களுடைய திறமைகளை நாம் வளர்த்து விட வேண்டும் என்று சிந்திக்கக்கூடிய ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தி வருகிறோம்.!
இன்று கூட தொலைக்காட்சியில் பார்த்தீர்கள் என்றால் நான் முதல்வன் திட்ட பயிற்சியில் இளைஞர்கள், இளம்பெண்கள் வெளிநாடு சென்று திரும்பி வந்திருக்கிறார்கள். புதுப்புது விஷயங்களை நிறைய கற்றுக் கொண்டோம் என்று அந்த மாணவர்கள் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்கள்.!
இப்படி மக்களுக்காக புதிய புதிய திட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்க கூடிய ஆட்சி நமது ஆட்சி. அதற்கு மக்கள் தந்திருக்கக்கூடிய பாராட்டு பத்திரம் தான் இந்த 40க்கு 40 வெற்றி என்பது.!
இப்போது நடக்கக்கூடிய ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொன்னது போல மைனாரிட்டி ஆட்சி, புதிய கல்விக் கொள்கை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார்கள்.!
தலைவர் கலைஞர் சின்ன சின்ன ஊர்களில் கூட கல்லூரிகளை திறந்தார். கல்லூரி வெளியூரில் இருந்தால் அது ஆணாக இருக்கட்டும் பெண்ணாக இருக்கட்டும் நீண்ட தூரம் சென்று கல்வி படிக்க முடியாது, ஹாஸ்டலில் தங்கி படிக்க முடியாது என்பதால், அவர்களுக்கான கல்வி மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதை மனதில் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவக் கல்லூரியை தலைவர் கலைஞர் உருவாக்கினார். அதேபோல நம்மூர் பிள்ளைகள் கல்வி பயில வேண்டும் என்பதற்காக சின்ன சின்ன ஊர்களில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளை உருவாக்கினார் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்.
ஆனால் இந்த புதிய கல்விக் கொள்கையில் என்ன சொல்கிறார்கள் என்றால்... எல்லா கல்லூரிகளையும் ஓர் இடத்துக்கு கொண்டு சென்று விட வேண்டும். அப்படி என்றால் கிராமப்புற பிள்ளைகள் எப்படி படிப்பார்கள்?
அது மட்டும் இல்லாமல் நாம் இங்கே வெற்றிகரமாக ஒரு திட்டத்தை உருவாக்கி நடத்திக் காட்டி இருக்கிறோம். ஆனால் அவர்கள் இந்தியாவில் இன்னும் 30 வருடங்களில் 50 சதவீதம் பேர் உயர்கல்வி பெற்றவர்கள் என்ற விகிதத்தை உருவாக்கி காட்டுவோம் என்று சொல்கிறார்கள்.!
ஆனால் நான் சொல்கிறேன்... இந்த இலக்கை தலைவர் கலைஞர் என்றோ முடித்து விட்டார். இன்றைக்கு உயர் கல்விக்கு செல்பவர்கள் 58 சதவீதம் என்பதை தொட்டுக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. நீங்கள் முப்பது வருஷம் கழித்து ஒன்றை செய்து விட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் அதை ஏற்கனவே நடத்திக் காட்டினார்,முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் . அதனால் தமிழ்நாட்டைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். இங்கே நாங்கள் ஆட்சி நடத்தக்கூடிய முறையை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். அப்போதாவது தொலைந்து போகாமல் இருப்பதற்கான வழியை காண்பீர்கள்.
40 இடங்களிலும் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இங்கே நம்முடைய சகோதரி ராணி அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார். நமது சட்டமன்ற உறுப்பினர் பேசும் போது தான் கொண்டு வந்திருக்கக்கூடிய திட்டங்களை எல்லாம் எடுத்து சொல்லிக் கொண்டிருந்தார். மேலும் என்னிடம் வரும் வழியில் பேசிக் கொண்டிருந்தபோது... தென்காசி மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு அவ்வளவாக இல்லை, விவசாயம் பாதிக்கப்படக்கூடிய சூழல் இருக்கிறது, அதனால் இங்கே வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரக்கூடிய வழிமுறைகளை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

நிச்சயமாக இங்கே மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கக்கூடிய ராணி ஸ்ரீகுமார் ,சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர்களுக்கு உறுதுணையாக நானும் இங்கே இருக்கக்கூடிய மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரக்கூடிய வகையிலே முதலமைச்சரிடம் பேசி திட்டங்களை வாங்கி தருவோம் என்ற உறுதியை உங்களுக்கு நான் வழங்குகிறேன்.!
அதே நேரத்தில் இந்த நல்லாட்சி தமிழகத்தை பாதுகாக்க கூடிய அண்ணன் தளபதியின் திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும். அதுதான் இங்கே இருக்கக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு. அடுத்த தலைமுறை இளைஞர்கள் இளம் பெண் களுக்கு பாதுகாப்பு. அதனால் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, அண்ணன் தளபதியார் தலைமையிலான ஆட்சி, முதலமைச்சர் சொன்னது போல் 200ஐ தாண்டக்கூடிய வெற்றி என்பதை நாம் உருவாக்கி காட்ட வேண்டும்.!

அது ஒன்றும் கஷ்டம் அல்ல. இப்போது 40க்கு 40 பெற்றது போல தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் இடமில்லை என்பதை நம்மால் நிரூபிக்க முடியும். அதற்கான உழைப்பை, அதற்கான வேலைகளை நாம் இன்றே தொடங்க வேண்டும், இன்றிலிருந்து மீண்டும் சட்டமன்றத் தேர்தல் பணிகளை ஆற்றத் தொடங்க வேண்டும்” என்று கூறினார்.!
இவ்வாறு கனிமொழி கருணாநிதி பேசினார்.




Comments