சி. ஏ.ஏ. சட்ட எதிர்ப்பில் உறுதி! உரிமைகளை நிலைநாட்ட நீதிமன்றத்தையும் நாடுவோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
- உறியடி செய்திகள்

- Mar 18, 2024
- 6 min read

“தேர்தல் பத்திர ஊழல் பா.ஜ.க.வின் முகத்திரையை கிழித்துள்ளது” என்றும் “குஜராத்தை மறைத்து போதைப் பொருள் நடமாட்டம் குறித்து அ.தி.மு.க. – பா.ஜ.க. அரசியல் நாடகம் நடத்துகிறார்கள்” முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு.!
ஆங்கிலநாளேட்டு ஒன்றில் வெளியாகியுள்ள தி.மு.கழகத் தலைவர் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியில் கூறியிருப்பதாவது.!
ஒரு தாய்க்கு தனது எல்லாக் குழந்தைகளும் சிறந்த குழந்தைகள்தான். அது போல், எனது அனைத்துத் திட்டங்களும் சிறப்பான திட்டங்கள்தான். முக்கியமான திட்டங்கள் தான். முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்துப் போட்டது விடியல் பயணம் திட்டத்துக்காக. நகரப் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தந்தது கோடிக்கணக்கான பெண்களுக்கு தினந்தோறும் பயனளித்து வருகிறது. மாதம் தோறும் 800 ரூபாய் வரை அவர்கள் சேமிக்கிறார்கள்.!
இதைவிட முக்கியமாக, பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி உள்ளது. அதேபோல் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலமாக 1.15 கோடி பெண்கள் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெற்றுள்ளார்கள். நாங்கள் இதனைஅறிவித்த போது, நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தார்கள். மிகக்கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும் மகளிருக்கு உரிமைத் தொகையை வழங்கியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.!

நான் முதல்வன் திட்டம்
எனது கனவுத் திட்டம்!
என்னுடைய கனவுத் திட்டம்தான், ‘நான் முதல்வன்’ திட்டம். படித்த இளைஞர்கள் அனைவர்க்கும் தனித்திறமையை ஏற்படுத்தி, அனைத்துப் பணிகளுக்கும் அவர்களைத் தகுதியானவர்களாக ஆக்கி வருகிறோம். அரசுப் பள்ளியில் படித்து விட்டு உயர்கல்வியை நோக்கி வரும் மாணவியர்க்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மாணவியர் மத்தியில் மறு மலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவியர்க்கு மட்டும் தானா, மாணவர்க்கு இல்லையா என்ற கோரிக்கையை ஏற்று, ‘தமிழ்ப்புதல்வன்’ என்ற பெயரில் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.!
மதிய உணவுத் திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். 17 லட்சம் பிள்ளைகள் தினமும் காலையில் வயிறார உணவு உண்ட பிறகு கல்வி கற்கிறார்கள். இதனைப் பார்க்கும்போது என் மனம் நிறைகிறது.!
தமிழ்நாட்டின் நிதிநிலையை அதலபாதாளத்தில் விட்டுச் சென்றது முந்தைய அ.தி.மு.க. அரசு. தி.மு.கழகம். ஆட்சிக்கு வந்த மூன்றாண்டு காலத்தில் அதனை இயன்ற அளவில் சரிப்படுத்தி, மேம்படுத்தி வருகிறோம். எனினும், தமிழ்நாட்டிற்குரிய வரிப்பங்கீடு, திட்டங்களுக்கான ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. அதனால், தொடர்ந்து கடும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட சூழலிலும் மக்கள் நலன் காக்கும் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்களையும், ஒவ்வொரு மாவட்டத்திற்கான கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கிச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.!
2024 மே மாதத்திற்குப் பிறகு, நிதிநிலைமை சீராகும் சூழல் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களுக்கான புதிய திட்டங்கள் தொடரும். இன்னும் பல திட்டங்கள் வர இருக்கின்றன.
எந்தத் திட்டத்திற்கும் உரிய நிதியை
ஒன்றிய அரசு தருவதில்லை!

ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்யும் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களின் அடிப்படை உரிமைகளும், நிதி ஆதாரங்களும் பறிக்கப்பட்டிருக்கின்றன. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வ தற்காக உதய் மின் திட்டம், நீட் தேர்வு நுழைவு என ஒன்றிய பா.ஜ.க. அரசின் மேலாதிக்கப் போக்கிற்கு அடிபணிந்து விட்டார்கள். இதன் காரணமாக மாநிலத்தின் நிதி நிலைமையும் கடும் பாதிப்புக்குள்ளானது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அதனைச் சீர்ப்படுத்தி வருகிறோம்.!
மெட்ரோ ரயில் திட்டம், வெள்ளப் பேரிடர் உள்ளிட்ட எதற்கும் ஒன்றிய அரசு உரிய நிதி ஒதுக்குவதில்லை. எனினும், தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உரிய கட்டமைப்புகளை உருவாக்கித் தரவும் உரிய நடவடிக்கைகளை எடுத்து, அதற்கான நிதிஆதாரங்களைத் திரட்டி, திட்டங்களைச் செயல்படுத்துவது தொடரும்.!

பொதுவாக, மாற்றுக் கட்சியில் இருப்பவர்கள் நம்மை விமர்சனம் செய்யும்போது ஒரு சில பொய்களை, தவறான தகவல்களை வெளியிடுவது உண்டு. ஆனால், பிரதமர் போன்ற மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் அப்படிச் செயல்படமாட்டார்கள். பண்டிதர் நேரு முதல் டாக்டர் மன்மோகன் சிங் வரை பிரதமர்கள் அப்படித்தான் இருந்தார்கள். ஆனால், திரு. நரேந்திர மோடியும் அவரது பா.ஜ.க. நிர்வாகிகளும் தவறான தகவல்களைச் சொல்பவர்களாகவும், வதந்திகளை வாட்ஸ்ஆப் வழியாகப் பரப்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டிருக்கிற பா.ஜ.க. நிர்வாகிகளும் உண்டு. அவை குறித்து, கேள்வி எழுப்பினால் பதில் இருக்காது. இன்னொரு வதந்திக்கோ, விமர்சனத்திற்கோ தாவி விடுவார்கள்.
தி.மு.க. மீது திசை திருப்பும்
விமர்சனம் செய்கிறார் மோடி!
ஒன்றிய அரசின் எந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு முடக்கியது என்று கேட்டால் அதற்குப் பதில் வராது. காரணம், ஒன்றிய அரசின் பங்களிப்போடு நடைபெறும் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழ்நாடு அரசு தன் பங்களிப்பைக் கூடுதலாகச் செலுத்தி, சிறப்பாக நிறைவேற்றி அதற்காக ஒன்றிய அரசின் சார்பிலேயே விருதுகளையும் பெற்றுள்ளது. இது பிரதமர் தொடங்கி பா.ஜ.க. நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும். அதனால்தான் தி.மு.க. மீது வாரிசு அரசியல், ஊழல் முறைகேடு என்று திசைதிருப்பும் விமர்சனங்களை வைப்பது வழக்கமாகிவிட்டது.!

நான் கலைஞரின் மகன்தான். அவருடைய கொள்கை வாரிசுதான். அந்த அடிப்படையில்தான் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். பா.ஜ.க. வெளியிட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாரிசுகளுக்கு பிரதமரும் அவரது கட்சி நிர்வாகிகளும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று இதே மோடியும் அமித்ஷாவும் விமர்சித்திருக்கிறார்கள். இப்போது எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் போற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் தங்களுடைய சாதனை என்று பா.ஜ.க.வால் எதையும் சொல்ல முடியாது. தி.மு.க ஆட்சியின் சாதனைகள் மீதோ, பேரறிஞர் அண்ணா - -– முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் அரசியல் கொள்கைகள் மீதோ பா.ஜ.க.வால் ஸ்டிக்கர் ஒட்ட முடியாது. அதனால் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் பயன்படுத்துகிறார்கள்.!
அ.தி.மு.க. – பா.ஜ.க.வும்தான்
போதைப் பொருளுக்கு
வித்திட்ட கட்சிகள்!
பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத்தான் போதை மருந்துகளின் தலைநகரமாக உள்ளது என்பதைப் பல புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அண்மையில், பழனிசாமியும் அதே குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். ஆக, இந்த இரண்டு கட்சிகளும்தான் போதைப் பொருள்களுக்கு வித்திட்ட கட்சிகள். ஜாபர் சாதிக் விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தி.மு.க. மீதுஅவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.!

இந்தியா முழுவதும் மோடி தலைமையிலான அரசின் பத்தாண்டுகால ஆட்சியின் அவலங்களும் அதனால் அதிருப்திகளும் வெளிப்பட்டு வருகின்றன. அது தேர்தல் களத்தில் நிச்சயம் எதிரொலிக்கும். தமிழ்நாடும் தென்மாநிலங்களும் அதைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே எதிரொலித்தன. தமிழ்நாட்டிற்கு என்னென்ன நன்மைகள் செய்தார் என்று மக்களிடம் உண்மையைச் சொல்ல முடியுமா? அவர் வருகிற ஒவ்வொரு முறையும் அவரே தனது ஆட்சியின் அவலங்களை நினைவுபடுத்திவிட்டுச் செல்வார்.!
தமிழ்நாட்டில் தாமரை மலருமா?
கவிழுமா? என்பது தேர்தல் முடிவு காட்டும்!
: –மாய பிம்பத்தைக் கட்டமைக்க நினைக்கிறார்கள். (தாமரை) மலருமா கவிழுமா என்ற உண்மையைத் தேர்தல் முடிவுகள் காட்டிவிடும்.
: –2004–-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதும் இதேபோல ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று ஆளும் பா.ஜ.க. தன் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. கருத்துக் கணிப்புகளும் அதனையொட்டியே இருந்தன. குறிப்பாக, வட மாநிலங்களில் பா.ஜ.க. ஆதரவு அலை என்று தெரிவித்தன. எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமையில்லை என விமர்சிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கே சாதகமாக அமைந்தன. அடுத்த பத்தாண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்றது. 2004 போலத்தான் 2024 தேர்தல் முடிவுகளும் அமையும். வரலாறு திரும்பும்.!

‘இந்தியா’ கூட்டணியை தகர்த்துவிடலாம்
என்ற பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறாது!
‘இந்தியா’ கூட்டணியை முற்றிலுமாகத் தகர்த்துவிடலாம் என்ற பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறவில்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. மதவாத அரசியல் என்பது பா.ஜ.க.வின் அடிப்படைக் கொள்கை. மக்களின் பக்தியுணர்வை வாக்குகளாக மாற்ற நினைப்பது அதன் தேர்தல் உத்தியாக இருக்கலாம்.
மதச்சார்பின்மை – பன்முகத்தன்மை - – மாநில உரிமைகளை எந்தளவு பா.ஜ.க. சிதைத்துள்ளது என்பதும் மக்களுக்குத் தெரியும். அதை உரிய வகையில் தேர்தல் களத்தில் எடுத்துரைக்கும் பணியை இந்தியா கூட்டணி உறுதியாகவும் தெளிவாகவும் மேற்கொள்ளும்.!
ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்தக் கட்சிகளுக்கு செல்வாக்கு இருக்கிறதோ அதற்கேற்பத் தொகுதிப் பங்கீடு இருக்க வேண்டும் என்பதும், அந்தந்த மாநிலங்களிலும் பெறுகின்ற முழுமையான வெற்றியின் மூலம் ஒன்றிய அரசில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்திலேயே வலியுறுத்தியிருக்கிறேன். ஒரு சில கட்சிகள் தங்களின் மாநில அரசியல் சார்ந்த கண்ணோட்டத்தில் செயல்படுவதைத் தவிர்க்க முடியாது. பா.ஜ.க. மீது மக்களுக்குள்ள கோபத்தை வாக்குகளாக மாற்றும் சக்தி பெற்ற அரசியல் கட்சிகளே தற்போதைய தேர்தல் களத்தில் முதன்மையாக இருப்பதைப் பல மாநிலங்களிலும் காண முடிகிறது.!

சட்டமன்ற - – நாடாளுமன்றத் தேர்தலில்
மக்களின் தீர்ப்பு அவ்வப்போது மாறும்!
ஒரு சில மாதங்களுக்கிடையே நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இடையில் மக்களின் தீர்ப்புகள் மாறுபட்டிருப்பதைப் பல தேர்தல்களில் பார்த்திருக்கிறோம். இனியும் பார்க்கலாம்.
ராகுல் காந்தி இந்தியாவின் நம்பிக்கைக்குரிய தலைவராக உள்ளார். அரசியல் மட்டுமல்ல சமூகக் கருத்துகளையும் துணிச்சலாக அவர் வெளிப்படுத்தி வருகிறார். களத்தில் அவருடைய பங்களிப்பு நிறைய தேவைப்படும்.!
‘இந்தியா’ கூட்டணி தனது
பணியைத் தொடங்கி விட்டது
: –இந்தியா கூட்டணி என்பது தன்னுடைய வேலைத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டது. அவற்றை ஒருங்கிணைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தேர்தல் பரப்புரைகளின் போது உங்களின் கேள்விக்கான விடையை நேரில் காண்பீர்கள்.
–பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் மற்றும் பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் இவற்றைக் குறிவைத்தே அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமானவரித்துறை ரெய்டுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை எல்லாரும் அறிவார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க.வுக்குத் தாவி விட்டால், அவர்கள் மீதான ஊழல் கறையைச் சலவை செய்து தூய்மைப்படுத்தும் வாஷிங் மெஷினாக பா.ஜ.க. செயல்பட்டு, அவர்களுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் பதவியும் வழங்கி வருகிறது.
அரசியல் கட்சிகளை மிரட்ட
அமலாக்கத்துறையைப் பயன்படுத்தும் மோடி!
மற்ற கட்சிகளையெல்லாம் ஊழல்வாதிகள் என்றும், தாங்கள் மட்டுமே யோக்கியசிகாமணிகள் என்றும் சொல்லி வந்த பா.ஜ.க.வின் முகத்திரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அம்பலமாகியிருக்கிறது. அமலாக்கத் துறையால் நடவடிக்கைக்குள்ளான நிறுவனங்கள் பல அடுத்த சில நாட்களில் பா.ஜ.க.வுக்கு பெருமளவில் நிதியளித்திருப்பது வெளிப்பட்டுள்ளது. இதிலிருந்தே அரசியல் கட்சிகளையும் நிறுவனங்களையும் மிரட்டுவ தற்காகவே அமலாக்கத்துறை என்கிற அமைப்பை மோடி அரசு பயன்படுத்தியிருப்பதும், அதன் மூலமாக நூற்றுக்கணக்கான கோடிகளை நிதியாகப் பெற்றிருப்பதும் உறுதியாகிவிட்டது. உண்மையான ஊழல் கட்சி பா.ஜ.க.தான் என்பதை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டார்கள்.!

தோழமைக் கட்சிகளுக்கு
மதிப்பளித்து தொகுதிப் பங்கீடு!
இது தேர்தல் கூட்டணி அல்ல. கொள்கைக் கூட்டணி என்பதை 2019, 2021 தேர்தல்களில் நிரூபித்தோம். அதே கூட்டணி இப்போதும்தொடர்கிறது. தோழமைக் கட்சிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தொகுதிப்பங்கீடும் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பதும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது ஓர் ஆரோக்கியமான கூட்டணியின் தொடர் செயல்பாடு. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் முழுமையான வெற்றி என்பதுதான் எங்கள் இலக்கு.
யூகங்களாகப் பல செய்திகள் வெளியாகியிருக்கலாம். ஒரு சில தேர்தல் தோல்விகள் அடிப்படையில் எல்லா அம்சங்களையும் புறக்கணித்துவிட முடியாது. பா.ஜ.க.வுக்கு எதிராக நிற்கக்கூடிய தேசிய அளவிலான கட்சி காங்கிரஸ். அதற்குரிய இடத்தை வழங்கியிருக்கிறோம்.!
கள நிலவரத்தை தி.மு.க.
உணர்ந்தே தொகுதிப் பங்கீடு!
தி.மு.க.வைத் தோழமைக் கட்சியினர் நம்புகிறார்கள். தோழமைக் கட்சிகளை தி.மு.க. மதிக்கிறது. கள நிலவரத்தையும் தி.மு.க. உணர்ந்திருக்கிறது. இதன் வெளிப்பாடுதான் தற்போதைய தொகுதிப் பங்கீடு.
:சட்டமன்றத் தேர்தலில் இரண்டு பொதுத் தொகுதி களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போட்டியிட்டு வெற்றி பெற்று, உறுப்பினர்களாக உள்ளனர். தற்போதைய தேர்தல் களத்தையும் சூழலையும் பற்றி முழுமையாகக் கலந்தாலோசித்துத்தான் முடிவுகள் எடுக்கப்பட்டன. அது குறித்து, சகோதரர் திருமாவளவன் அவர்களே தெளிவாக விளக்கிவிட்டார்.
இளையவர்கள் – மூத்தவர்கள் – பெண்கள்என அனைவரையும் உள்ளடக்கிய வேட்பாளர் பட்டியல் வரும்.
:மூத்தவர்கள் – இளையவர்கள் --– பெண்கள் ஆகிய அனைவரையும் உள்ளடக்கியே வேட்பாளர் பட்டியல் இருக்கும்.!
:தன்னிச்சையாகச் செயல்படக்கூடிய எந்தவொரு அமைப்பையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தன் கைப்பாவையாக மாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதைக் கடந்த 10 ஆண்டுகளில் பார்த்துவிட்டோம். தேர்தல் ஆணையத்தின் மீதான பா.ஜ.க அரசின் ஆதிக்கமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஜனநாயகத்தைக் காக்கின்ற போராட்டத்தில் இதனையும் கவனத்தில் கொண்டே செயல்படுகிறோம்.!

பா.ஜ.க. அரசு உச்சநீதி மன்றத்தையேஏமாற்ற நினைத்தது அம்பலமாகிவிட்டது!
:இந்திய மக்களின் கடைசி நம்பிக்கையாக உச்சநீதிமன்றம் உள்ளது. அதன் உத்தரவுகளையே புறக்கணிக்க நினைப்பதும், காலம் தாழ்த்த நினைப்பதும் அரசமைப்புக்கு எதிரான செயல். ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள இந்தியாவின் கறுப்புப்பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவேன் என்று சொன்ன மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, அதில் ஒரு நயா பைசாவைக்கூட மீட்காமல், ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்லாயிரம் கோடிகளைப் பல நிறுவனங்க ளிடமிருந்து நிதியாகப் பெற்று, நீதிமன்றத் தையே ஏமாற்ற நினைத்தது அம்பலமாகியுள்ளது.!
:தி.மு.க தனது முதல் தேர்தல் களத்திலிருந்தே தேர்தல் நிதி திரட்டுகிற இயக்கம்தான். 1967 தேர்தலில் 10 லட்சம் என்கிற தேர்தல் நிதி இலக்கு நிர்ணயித்தார் பேரறிஞர் அண்ணா. 11 லட்சமாகத் நிதி திரட்டித் தந்தார் கலைஞர். நாங்கள் நிதி திரட்டுவது என்பதும் அது குறித்த கணக்குகளை முறையாகத் தணிக்கை செய்வதும் வழக்கம்தான். இப்போதும் அதே வெளிப்படைத்தன்மையுடன்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டியிருக்கிறோம். ஆனால், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகளைக் குறையாக - குற்றமாகச் சொல்லிக்கொண்டிருந்த பா.ஜ.க.வின் யோக்கியத்தன்மை என்ன என்பதும், அது யார்- – யாரிடம் எதற்காக- – எத்தகைய நெருக்கடி கொடுத்து தேர்தல் நிதியைப் பெற்றுள்ளது என்பதும் கவனத்திற்குரியது. கையும் களவுமாக சிக்கியுள்ளது பா.ஜ.க.
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால்
அரசியலமைப்பு சட்டத்தையே தூக்கி எறிந்துவிடுவார்கள்!
:மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தையே தூக்கி எறிந்து விடுவார்கள். இதைத்தான் வெளிப்படையாக அவர் சொல்லி இருக்கிறார். பா.ஜ.க தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கு இதைவிட வேறு காரணம் தேவையில்லை.
பா.ஜ.க.வின் பொய்முகம்
தேர்தல் களத்தில் எதிரொலிக்கும்!
:பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகள், துரோகங்கள், மக்களைப் பிளவுபடுத்தும் சதிகள், மாநில உரிமைகளுக்கான ஆபத்து இவற்றுக்குள் நீங்கள் சொன்ன அனைத்தும் அடங்கும். அவையேதேர்தல் களத்தில் நாடெங்கும் எதிரொலிக்கும்.
:மதரீதியாக – மொழிரீதியாக –- சாதிரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலைத்தான் பா.ஜ.க. தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கம்தான் சி.ஏ.ஏ. தற்போது சிறுபான்மை யினருக்கு எதிரான நடவடிக்கையாக மட்டுமே இது தெரிந்தாலும், எதிர்காலத்தில் ஒவ்வொரு மாநிலத்தில் வாழும் வெவ்வேறு மொழி பேசும் மக்களை நோக்கியும் புதிய சட்டங்களை பா.ஜ.க. கொண்டு வரும். அதற்கு சி.ஏ.ஏ. ஒரு முன்னோட்டம்.
சி.ஏ.ஏ.வை தமிழ்நாட்டில்
நடைமுறைப்படுத்த மாட்டோம் என்பது உறுதி!
:ஒன்றிய அரசு கொண்டுவரும் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளிடம்தான் உள்ளது. இந்தி மொழி தொடர்பான ஒன்றிய அரசின் சட்டத்திற்கு எதிரா கத்தான் பேரறிஞர் அண்ணா இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார்.இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்கிற ஒன்றிய அரசின் நடை முறையை மாநில அரசு ஏற்கவில்லை. அதுபோலத்தான் சி.ஏ.ஏ.விலும் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். இதற்குரிய அரசியல்சட்ட உரிமைக்கான வழியை யும் நீதிமன்றத்தின் மூலம் நிலை நாட்டுவோம்.!
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆங்கில இதழுக்கு அளித்த சிறப்புப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.




Comments