top of page
Search

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! ஆதிக்க வெறியர்களுக்கு எதிராக தமிழகம் போராடும்! ஆர்.என்.ரவிக்கும் பதிலடி!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Oct 5
  • 1 min read
ree

ஆதிக்க வெறியர்களுக்கு எதிராக தமிழகம் போராடும்- ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!


“தமிழ்நாடு யாருடன் போராடும்? என ஆளுநர் கேட்டுள்ளார். இந்தி மொழியை ஏற்றால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்” என ஆளுநர் ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.!


வள்ளலாரின் பிறந்தநாள் விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்’ என அடிக்கடி கூறிவரும் நிலையில், தமிழ்நாடு யாருடன் போராடும்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.!

இந்நிலையில், இது குறித்து தி.மு.கழகத் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், கூறியிருப்பதாவது:

“"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்… இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும். அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!


உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்.


ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்.

ree

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும். ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்.


உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும். தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும். ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்.


நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்.


நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும். இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page