மனித வளத்தை சீர்குலைப்பதா? ஒன்றிய அரசு இதோடு நிறுத்தி கொள்ள வேண்டும்! எடப்பாடி பழனிசாமி அறிக்கை!
- உறியடி செய்திகள்

- Aug 28, 2024
- 1 min read

மனிதவளத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதா? ஒன்றிய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு 2024-2025ம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ. 573 கோடியை கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு விடுவித்திருக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு தனது பங்குத் தொகையை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதற்குக் காரணமாக புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தவில்லை என்று ஒன்றிய அரசு கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.!
இந்தியா கல்வியில் சிறந்த நாடு. உலகிலேயே மனித வளம் அதிகமுள்ள நாடு. இந்த நாட்டில் தங்களுடைய கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் தற்போதைய ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.! மாநிலங்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமையாகும்.!

நிபந்தனைகளின் அடிப்படையில்தான் கல்வி வளர்ச்சிக்கு நிதி தர முடியும் என்று கூறுவது ஏற்கக்கூடியதல்ல. மாநிலப் பட்டியலில் இருந்து கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றி சுமார் 48 ஆண்டுகள் ஆகின்றன.!
'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு முதல் தவணையை இதுவரை விடுவிக்காததால், சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையும், 'கல்வி உரிமைச் சட்டம்' (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு மாநில அரசு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.!
'கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை' என்ற குறளின் பொருளை முழுமையாக உள்வாங்கி, மாணவச் செல்வங்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை இனியாவது ஒன்றிய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.!
இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.




Comments