அரசு பேருந்து உரிய கால நேரத்திற்கு வந்து செல்ல வேண்டும்! கனிமொழி கருணாநிதி வலியுறுத்தல்!
- உறியடி செய்திகள்

- Aug 23
- 1 min read

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கப்பிகுளம் ஊராட்சிக்கு நாள்தோறும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. காமநாயக்கன்பட்டி, சால்நாயக்கன்பட்டி, அச்சன்குளம், கோவிந்தன்பட்டி, தெற்கு தீத்தாம்பட்டி, பசுவந்தனை, வடக்கு கைலாசபுரம், தெற்கு கைலாசபுரம் ஆகிய கிராம பகுதிகளுக்கு செல்லக்கூடிய இந்த அரசு பேருந்தில், காலை வேளையில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வது வழக்கமாக உள்ளது. ஆனால், கடந்த 22ஆம் தேதி அரசு பேருந்துக்காக மாணவர்கள் காத்திருந்தபோது, வெகுநேரமாகியும் பேருந்து வரவில்லை. இதனால் பள்ளி நேரம் ஆகி விட்டதால், மாணவர்கள் பல கிலோமீட்டர் தூரத்தை நடந்தே பள்ளிக்குச் செல்ல நேரிட்டது.
வழக்கமாக செல்ல வேண்டிய அரசு பேருந்து பஞ்சராகியதால் இயக்கப்படவில்லை என்று கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த பேருந்து திடீரென வராமல் போனதால், பள்ளிக்குச் செல்லும் கிராமப்புற மாணவ-மாணவிகள் பல கிலோமீட்டர் தூரம் நடந்தே கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, காலையும் மாலையும் பள்ளி நேரங்களில் அரசு பேருந்து முறையாக இயக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் தமிழ்நாடு அரசுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் கோரிக்கை வைத்தனர்.
இதனை அறிந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள அதிகாரிகளிடம் விசாரித்தார். வழக்கம்போல் பேருந்து இயக்கப்பட வேண்டும் என்றும், பேருந்து சிறிது நேரம் முன்னதாக இயக்கப்பட வேண்டும் என்றும் கனிமொழி கருணாநிதி எம்.பி. வலியுறுத்தினார். இதன் பிறகு, இனி இத்தகைய பிரச்சினை ஏற்படாது என்று அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகள் உறுதியளித்தனர்




Comments