top of page
Search

உயர் நீதிமன்ற கிளை அதிரடி !த.வெ.க. ஆனந்த் - நிர்மல்குமாருக்கு ஜாமீன் மறுப்பு! சிறப்பு விசாரணை அமைப்பு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Oct 3
  • 3 min read
ree

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில், தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது. ‘கரூரில் கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்தது நீதிமன்றத்தை தொந்தரவு செய்கிறது’ என நீதிபதி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். சிறப்பு விசாரணை அமைத்தும் நீதிமன்றம் உத்தரவு!


கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக இருந்து வரும் இருவரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.

ree

இந்த மனுக்கள் நீதிபதி ஜோதிராமன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வாதிடுகையில், “முதல் மனுதாரர் புஸ்ஸி ஆனந்த் வேலுச்சாமிபுரத்தில் பக்ல 12 மணியளவில் விஜய் பேசுவார் என ஊடக சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இதனால் காலையிலேயே மக்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். மக்களுக்கு தண்ணீர், உணவு வழங்கவில்லை. கழிப்பறை வசதியில்லை. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் கூட்ட ஏற்பாட்டாளர்கள் தவறிவிட்டனர். இதனால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்துள்ளன” என்ற து


மனுதாரர் தரப்பில், “கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது ஒரு விபத்து. ஆனால், மனுதாரர்கள் மீது குற்றமில்லா கொலை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மக்களை வேண்டும் என்றே காக்க வைத்து கூட்டத்துக்கு தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்தார் என்பது சரியல்ல. கரூர் சம்பவம் திட்டமிட்ட செயல் அல்ல. தவெகவுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. போலீஸார் உரிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.


உரிய பாதுகாப்புக்காகவே காவல் துறையை அணுகுகிறோம். அதிகளவில் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி, குறுகிய சாலை, இரு பக்கமும் தடுப்பு அமைக்க வேண்டியது வரும் எனக் கூறி போலீஸார் அனுமதி மறுத்திருக்கலாம். எங்களுக்கு இது தெரியவில்லை. தவெக பல்வேறு இடங்களில் கூட்டம் நடத்தியபோது அதிகளவில் மக்கள் வந்தனர். அதேபோல் கரூர் கூட்டத்துக்கு அதிகளவில் மக்கள் வருவார்கள் என்பதை போலீஸார் கணித்திருக்க வேண்டும்.

ree

கூட்டத்தை கணிப்பதில் நாங்கள் புலமை பெற்றவர்கள் அல்ல. ஒரு நாளுக்கு முன்பு வேலுச்சாமிபுரத்துக்கு பதில் வேறு இடத்தில் அனுமதி கோரி நீதிமன்றத்தில் முறையிட வந்தோம். அன்று நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் முறையிட முடியவில்லை. இதனால் வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடத்த வேண்டியது ஏற்பட்டது.


விபத்தை விபத்தாகவே பார்க்க வேண்டும். அதற்காக கட்சியின் பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் மீது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்? கூட்டத்தை மேலாண்மை செய்யும் பொறுப்பு முழுக்க முழுக்க அரசுக்கே உள்ளது. கட்சித் தலைவரை பார்ப்பதற்காக கூட்டத்தினர் காத்திருக்கின்றனர். சிலர் கூட்டத்தில் செருப்பு மற்றும் சில பொருட்களை வீசுகின்றனர். உடனே போலீஸார் எவ்வித எச்சரிக்கையும் கொடுக்காமல் தடியடி நடத்தினர். இதன் காரணமாகவே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. காவல் துறையினர் கூட்டத்தை சரியாக கையாள தவறிவிட்டனர்” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.


இந்த வாதங்களுக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். “மனுதாரர் தரப்பில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் அரசு மீதும் போலீஸார் மீதும் குற்றச்சாட்டுகளை கூறுவதை ஏற்கமுடியாது” என்றார்.


அப்போது நீதிபதி, “நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எனும்போது அந்த நிகழ்ச்சியில் நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் தானே?” என்றார். மனுதாரர் தரப்பில், “நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மாவட்ட செயலாளர் மதியழகன் தான். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனுதாரர்கள் குற்றம் செய்யவில்லை.


நிலைமையை காவல் துறை சரியாக கையாள தவறிவிட்டது. எச்சரிக்கையின்றி தடியடி நடத்தப்பட்டதன் காரணம் என்ன? கூட்டம் நடைபெற்ற இடத்தை விஜய் அடைய 1 மணி நேரம் ஆனது. கூட்டம் அதிகமாக இருப்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்ய காவல் துறை கூறியிருக்கலாம். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. ஆனால், காவல் துறை கடமையைச் செய்யாமல் கட்சியினர் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்” எனக் கூறப்பட்டது.

ree

அரசு தரப்பில், “41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சிலர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 105 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலுக்கு காரணமானவர் யார் என கண்டறிய விசாரணை அவசியம். அந்த விசாரணை தற்போது தொடக்க நிலையிலேயே உள்ளது. மனுதாரர்கள் இருவரே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.


41 பேரின் மரணத்தில் இவர்களுக்கு தொடர்பு உள்ளது. இவர்கள் தான் 12 மணிக்கு கட்சித் தலைவர் வருவார் என அறிவித்தவர்கள். அதை கேட்டே கூட்டம் கூடியுள்ளது. ரோடுஷோ நடத்த அனுமதி வழங்கவில்லை. ஆனால் நடத்தியுள்ளனர் எனக் கூறப்பட்டது.


அப்போது நீதிபதி, “அனுமதியை மீறினால் நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கலாமே?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பில், “மேலும் பிரச்சினை எழக் கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்யவில்லை. இந்நிகழ்வு துரதிஷ்டவசமானது. ஆனால் நிகழ்வு நடந்ததும் இவர்கள் காணாமல் போய்விட்டனர். ஒரு பொறுப்பான அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் செய்யும் வேலையா இது?

ree

ree

தொண்டர்கள் மீதும் போதிய கவனம் செலுத்தாமல், போதிய ஏற்பாடுகளையும் செய்யாமல் மக்கள் கூடுவதற்கு அழைப்பு விடுத்துவிட்டு தலைமறைவாவது ஏற்கத்தக்கதல்ல.

மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த காவல் துறையினர் முயன்றனர். உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு துயர சம்பவம் நிகழ்ந்தது. கட்சியினரால் தான் தொண்டர்களைக் கட்டுப்படுத்த இயலும். அதை மனுதாரர்கள் செய்யவில்லை. பெரும்பாலானவர்கள் நீரிழப்பின் காரணமாகவே உயிரிழந்ததாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.


நீரிழப்பு மற்றும் கூட்ட நெரிசலால் உயிரிழந்துள்ளனர். மனுதாரர்கள் தலைமறைமாக உள்ளனர். இருவரையும் கைது செய்து விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும். நடிகர் விஜய் பிரச்சாரத்துக்கு செல்லும் கேரவனில் 4 மூலைகளிலும் சிசிடிவி கேமரா உள்ளது. அதன் பதிவுகளையும் வழங்க வேண்டும். விசாரணை தொடக்க நிலையில் உள்ள போது மனுதாரர்களுக்கு முன் ஜாமின் வழங்கினால் விசாரணை செய்வது கடினம். கட்சியினரின் பொறுப்பற்ற தன்மையால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே முன்ஜாமீன் வழங்கக் கூடாது” எனக் கூறப்பட்டது.


நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ‘கரூர் சம்பவம் தொடர்பாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் நீதிமன்றத்தை தொந்தரவு செய்கிறது. சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளி மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் செப்.29-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ree

மனுதாரர்கள் 2-வது, 3-வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணை தொடக்க நிலையிலேயே உள்ளது. எனவே, மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளனர்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page