கரூர் : 40 பேர் பலியான சம்பவம்! ஆணைய விசாரணை தொடங்கியது!
- உறியடி செய்திகள்

- Sep 28
- 2 min read

கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தனது ஆய்வை தொடங்கி உள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்துக்கு வந்த அவர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய்யின் பிரச்சாரம் கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேலுசாமிபுரத்துக்கு வருகை தந்தார். அப்போது, அசம்பாவிதம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் அவருக்கு விளக்கினர்.இது மேலும், அருணா ஜெகதீசன் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து, சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்களிடமும் அவர் சில கேள்விகளை முன்வைத்தார்

வேலுசாமிபுரத்தில் சம்பவம் நடந்த இடம் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு வெளியாட்கள் யாரும் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவத்துக்குப் பிறகு அங்கு எத்தகைய சூழல் ஏற்பட்டதோ அது அப்படியே இருந்தது. அவற்றை அருணா ஜெகதீசன் பார்வையிட்டார். பொதுமக்களின் ஏராளமான காலனிகள், கட்சிக் கொடிகள் போன்றவை சிதறிக்கிடந்ததைப் பார்வையிட்ட அருணா ஜெகதீசன், நிகழ்ச்சி தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

குறிப்பாக, கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதா? போலீஸ் பாதுகாப்பு எப்படி இருந்தது? எத்தனை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்? எத்தகைய அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்பன உள்ளிட்ட கேள்விகளை அவர் எழுப்பியதாகத் தெரிகிறது.
இந்த ஆய்வை அடுத்து, சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அவர் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தியவர் அருணா ஜெகதீசன். அப்போது, அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதேபோல், இந்த சம்பவம் குறித்தும் கூடிய விரைவில் அவர் தனது அறிக்கையை அரசுக்கு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
, நீதிபதி அருணா ஜெகதீசன், இதற்கு முன்பாக பல்வேறு முக்கிய வழக்குகளில் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார். அதேபோல, பல முக்கிய விசாரணைக் குழுக்களுக்கு தலைமையும் தாங்கியுள்ளார்.
இவர் குறித்து வெளியான தகவல்கள்.
அதாவது, 2009ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த 2012ம் ஆண்டு சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் 5 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில், சிபிஐ விசாரணை தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கினார்.

2018ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்கும் ஆணையத்திற்கு அருணா ஜெகதீசன் தலைமை வகித்தார். சுமார் 4 ஆண்டு காலம் இது தொடர்பாக விசாரணை நடத்தி கடந்த 2022ம் ஆண்டு முதல்வரிடம் அருணா ஜெகதீசன் தலைமையிலான குழுவினர் அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில், போலீசார் தான் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அம்பேத்கர் சட்டப் பல்கலை துணை வேந்தர் தேடுதல் குழுவில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமை வகித்தார்.
இதுபோன்று பல்வேறு விசாரணை ஆணையங்களில் திறம்பட செயல்பட்ட அருணா ஜெகதீசனின், இந்த கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




Comments