top of page
Search

கரூர்: நெரிசலில் 41. பேர் பலியான சம்பவம், மாவட்ட த வெ.க. நிர்வாகிகளுக்கு அக்.14 வரை சிறை! மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Sep 30
  • 2 min read
ree

நடிகர் விஜய்யை காண 10, 000 பேர் தான் வருவார்கள் எப்படி கணித்தீர்கள் என்று தவெக தரப்புக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் சரமாரி கேள்வி!. மாவட்ட நிர்வாகிகளுக்கு அக்.14 வரை சிறை நீதியரசர் பரத்குமார் உத்தரவு.



கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தொடர்பான வழக்கில் நேற்று தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனும், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக நிர்வாகி பவுன்ராஜ் என்பவர் இன்றும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.


அப்போது இந்த வழக்கில் காவல்துறை, தவெக மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் சுமார் ஒரு மணி நேரம் கடுமையான வாத, பிரதிவாதங்கள் நிகழ்ந்தது.


விசாரணையின் போது கோர்ட்டில் தவெக தரப்பு முன் வைத்த வாதம் வருமாறு;


நாங்கள் விஜய் பிரசாரத்துக்காக 3 இடங்களை கேட்டு இருந்தோம். ஆனால் எந்த இடங்களையும் எங்களுக்கு ஒதுக்கவில்லை. கரூரில் 1.20 லட்சம் சதுர அடி கொண்ட லைட் அவுஸ் பகுதியைத் தான் கேட்டோம். ஆனால் காவல்துறையினர் கொடுக்கவில்லை.


சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் அன்றைய தினம் யாரும் எங்கள் கூட்டத்துக்கு வரமாட்டார்கள், 10,000 பேர் தான் வருவார்கள் என்று கணித்தோம். ஆனால் ஏராளமானோர் வந்ததால் சமாளிக்க முடிய வில்லை என்று வாதிட்டனர்.


இதை தமிழக காவல்துறையினர் மறுத்து வாதம் செய்தனர். அவர்கள் தங்கள் வாதத்தில் கூறி இருப்பதாவது;


விஜய் பிரசாரம் மேற்கொண்ட இடத்தில் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. போலீஸ் அனுமதி வழங்கவில்லை என்று தவெக தரப்பு கூறி உள்ளது. அவர்கள் கேட்ட லைட் அவுஸ் பகுதியில் அமராவதி ஆற்றுப்பாலம் இருப்பதால் அனுமதி தரவில்லை.


பிரசாரத்தின் போது ஆனந்த் வந்த வாகனத்தை நிறுத்தி முனியப்பன் கோவில் சந்திப்பில் தவெகவினர் தாமதம் செய்தனர். போலீசார் கூறியதை மீறி விஜய் தவறான வழியில் சென்றார். விஜய் வாகனம் குறிப்பிட்ட இடத்துக்கு வந்தவுடன் அங்கேயே நிறுத்தும்படி கூறினோம்.

ree

ஆனால் விஜயின் வாகனம் இன்னும் முன்னே செல்ல வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா கூறினார். தவெகவினர் நேர அட்டவணையை பின்பற்றவில்லை. சாப்பாடு இல்லாமல் குழந்தைகளுடன் ஏராளமான பெண்கள் காத்திருந்தனர்.


எத்தனை மணிக்கு விஜய் வருவார் என்று கூறியிருந்தார்களோ அந்த நேரத்துக்கு அவர் சரியாக வரவில்லை. கைது செய்யப்பட்ட மதியழகன், பவுன்ராஜ் இருவரும் வாகனத்தை செல்லவிடாமல் தடுத்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக இருந்தது.


கரூர் பாலத்தில் இருந்து வேண்டும் என்றே தாமதமாக வந்தனர். முனியப்பன் கோவில் சந்திப்பில் விஜய் கேரவனுக்குள் சென்று விட்டார். அவரை பார்த்திருந்தால் கூட்டம் கலைந்து சென்றிருக்கும்.



விஜய் பிரசாரம் நடந்த இடத்தில் இதற்கு முன்பு அதிமுக பிரசாரம் மேற்கொண்டபோது அதிக வாகனங்கள் வந்தன. அதிக நபர்கள் வந்ததால் தான் அந்த இடத்தை தவெக பிரசாரத்துக்கு வழங்கினோம்.

ree

அருணா ஜெகதீசனின் ஒருநபர் ஆணைய விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிவரும். விஜய் பஸ் நின்ற பகுதியை விட அதற்கு எதிர் திசையில் பலியானவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்று போலீஸ் விளக்கம் அளித்தது.


இருதரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட 1 மணி நேரம் நீதிமன்றத்தில் கடும் வாத, பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. அதன் பின்னர் கரூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி பரத்குமார் கூறியதாவது;


பிரசாரத்திற்காக மைதானம் போன்ற பகுதியை ஏன் தவெக கேட்கவில்லை. தவெகவினர் கேட்ட 3 இடங்களுமே போதுமானதாக இல்லை. விஜய்யை பார்க்க குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள், அதற்கு தகுந்த இடத்தை கேட்டிருக்க வேண்டும்.


இபிஎஸ்சை பார்க்க வருவது கட்சிக் கூட்டம், ஆனால் விஜய்யை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள். அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா? இதுகுறித்து அவரிடம் சொல்லப்பட்டதா?



மற்ற அரசியல் தலைவர்களுடன் விஜய்யை ஒப்பிடவேண்டாம். கூட்டம் அளவு கடந்து செல்கிறது என்று தெரிந்தும் தவெக நிர்வாகிகள் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை. வார விடுமுறை, காலாண்டுத் தேர்வு விடுமுறை நாளில் எப்படி குறைந்த எண்ணிக்கையில் வருவார்கள் என்று எப்படி கணித்தீர்கள்?

ree

தவெகவினர் பல்வேறு ஆவணங்களை கொடுத்துள்ளீர்கள்? நான் எந்த ஆவணத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் மனசாட்சிபடியே தான் உத்தரவிடுவேன்.

இவ்வாறு நீதிபதி பரத்குமார் கூறினார்.


வாத, பிரதிவாதங்களைத் தொடர்ந்து நீதிபதி பரத்குமார் வழக்கை சிறிதுநேரம் தள்ளி வைப்பதாக அறிவித்தார். மீண்டும் விசாரணை தொடங்கியபோது, கைது செய்யப்பட்ட இருவரையும் அக்.,14 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page