கரூர்: 41. பேர் உயிரிழந்த சம்பவம். வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க அதிமுக வலியுறுத்தல்!
- உறியடி செய்திகள்

- Sep 30
- 1 min read

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவ வழக்கை சிபிஐ-க்கு மாற்றாவிட்டால் அதிமுக சார்பில் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநிலங்களவை அதிமுக உறுப்பினர், அக்கட்சியின் வழக்கறிஞர் அணி செயலர் இன்பதுரை தெரிவித்தார்.
திருநெல்வேலியில் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு திட்டம் தொடங்கப்பட்ட பின்னரும் அதில் தண்ணீர் முறையாக வரவில்லை. பல இடங்களில் ஷட்டர்கள் பழுது ஏற்பட்டுள்ளது. பாலங்களை சரிசெய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.

ராதாபுரம் தொகுதியில் குவாரிகளின் ஆட்சி நடந்து வருகிறது. குவாரிகள் செயல்பட வேண்டும் என்றால் குளங்களில் தண்ணீர் இருக்கக் கூடாது என்பதால், அங்குள்ளவர்கள் தெளிவாக பல்வேறு பணிகளை செய்து தண்ணீர் வரவிடாமல் தடுத்து வருகிறார்கள்.
கரூர் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். பல்வேறு சந்தேகங்கள் தமிழக அரசின் மீதும் காவல் துறை மீதும் எழுந்துள்ளது. எனவே, சிபிஐ வசம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்டம் நடத்துவதற்கு பொருத்தமற்ற இடம் என்று அங்குள்ள காவல் ஆய்வாளர் கடந்த ஜனவரி மாதம் அதிமுக பொதுக்கூட்டம் நடத்த மனு அளித்தபோது நிராகரித்து உத்தரவிட்டிருந்தார்.
வேலுசாமிபுரம் பகுதி குறுகிய இடம். அதில் கூட்டம் நடத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். கூட்டம் நடத்துவதற்கு உரிய இடம் இல்லை என்று கடந்த ஜனவரி மாதம் அனுமதி மறுத்த நிலையில், விஜய்க்கு கூட்டம் நடத்த செப்டம்பர் மாதம் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது கேள்வியாக எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்




Comments