கரூர்: சம்பவம் சி.பி.ஐ.விசாரணை வேண்டும்! உயர் நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா மனுதாக்கள்! முன் ஜாமீன் கோரி ஆனந்த். நிர்மல்குமாரும் மனு தாக்கல்!
- உறியடி செய்திகள்

- Sep 30
- 2 min read

கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் .!
மனு மீதான விசாரணை அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பரப்புரையில் விஜயை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் திட்டமிட்ட சதி என்று தவெகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அருணா ஜெகதீசன் கரூரில் ஆய்வு நடத்தி, விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, கரூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார். தவெக தலைவர் விஜயோ, தவெக நிர்வாகிகளோ இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவில்லை.
இந்நிலையில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கூட்ட நெரிசல் சம்பவத்தில் உள்ளூர் அரசியல்வாதிக்கு தொடர்பு இருப்பதாக மதுரை ஐகோர்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஆதவ் அர்ஜுனா மனுவில் கூறியிருப்பதாவது
கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உள்ளூர் அரசியல்வாதிக்கு தொடர்பு இருக்கிறது. செந்தில் பாலாஜி குறித்து பேசியபோது மின் தடை செய்யப்பட்டது. செருப்பு, கற்கள் வீசப்பட்டன. திடீரென அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டன. மக்கள் மீது தடியடி நடத்த என்ன காரணம்.

சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே மருத்துவமனைகள் தயார் நிலையில் இருந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்ற என்னை அனுமதிக்கவில்லை. கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா மனுவில் கூறியுள்ளார். தற்போது நீதிமன்றம் தசரா விடுமுறையில் இருப்பதால் இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 3 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது..
மேலும் காவல்துறை தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் முதல் குற்றவாளியாக மதியழகன் சேர்க்கப்பட்டு உள்ளார்.

கடந்த 2 நாட்களாக அவர்களை தீவிரமாக தேடிய போலீசார், குற்றம்சாட்டப்பட்ட2வர்களில் ஒருவரான மதியழகனை நேற்று கைது செய்தனர். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கரூர் தவெக நிர்வாகி மாசி பவுன்ராஜ் என்பவரை இன்று (செப்.30) காலை கைது செய்தனர்.
இந் நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் அவர்கள் இருவரும் முன் ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.
மனுவில் ஆனந்த் கூறி உள்ளதாவது;
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் எங்கள் மீது எந்த தவறும் இல்லை. காவல்துறையினர் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டனர். அரசு எந்திரங்கள் தங்கள் தோல்வியை மறைக்க எங்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
விஜய் பிரசாரம் செய்ய சரியான இடம் ஒதுக்கித் தரவில்லை. இந்த வழக்கில் காவல்துறை கைது செய்யக்கூடும் என்பதால் தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளார்.
இவர்களின் முன்ஜாமின் மனுக்கள் வரும் வெள்ளிக்கிழமை (அக்.3) விசாரணைக்கு வருகிறது.




Comments