கரூர்: கூட்ட நெரிசலில் 41, பேர் பலியான சம்பவம் மாவட்ட செயலாளர் மதியழன் கைது! போலீஸ் தீவிர விசாரணை!
- உறியடி செய்திகள்

- Sep 29
- 2 min read

தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக, த.வெ.க கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
த.வெ.க தலைவர் விஜய், முன்தினம் (செப்.27) நாமக்கல்லை தொடர்ந்து கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கூட்ட நெரிசலுக்கான அனுமதியைக் கேட்டவர் மதியழகன் என்பதால், அவர் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார்.

சம்பவம் நடந்த உடன் மதியழகன் தலைமறைவாகி இருந்தார். தனிப்படை காவலர்கள் அவரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், கரூர் புறநகர் பகுதியில் இன்று இரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தவுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், மற்றும் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் மற்றும் பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை உள்ளிட்ட பிரிவுகள் இதில் அடங்கும்.

இந்த வழக்கில் முதற்கட்ட விசாரணை அதிகாரியாக கரூர் டி.எஸ்.பி. செல்வராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது, விசாரணை அதிகாரியாக கூடுதல் எஸ்.பி. பிரேமானந்தனை நியமித்து பொறுப்பு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்காக த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், மற்றும் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்குச் சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்திருந்தாக கூறப்படுகின்றது. பொதுச்செயலாளர் ஆனந்தின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கபட்டது.

இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய குற்றத்திற்காக மேலும் 3 நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். பெரும்பாக்கம் பா.ஜ.கவைச் சேர்ந்த சகாயம், மாங்காடு தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சிவனேசன், ஆவடி த.வெ.க நிர்வாகி சரத்குமார் ஆகிய மூவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது, இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நகர்வு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாமக்கல்லில் பரப்புரை மேற்கொண்ட விஜய் நிகழ்ச்சியில் காவல் துறையினர் நிபந்தனைகள் எதுவும் அன்று பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது. தவிர, மதியம் 2.45 மணியளவில் தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் பங்கேற்றார். காலதாமதமாக விஜய் பங்கேற்ற காரணத்தினால் அங்கு திரண்டிருந்த தவெக தொண்டர்களால் அசாதரண சூழல் ஏற்பட்டதாக நாமக்கல் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் சாந்தகுமார் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் தவெக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் என்.சதீஷ்குமார், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட கட்சி நிர்வாகிகள் மீது உண்மைக்கு புறம்பான தகவல் தந்தது, அச்சுறுத்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்து கூட்டத்தை கூட்டுவது என்பன உள்பட 5 பிரிவுகளின் கீழ் நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டும் வருகிறது.
.
.




Comments