கரூர் சம்பவம் : உயர் நீதிமன்றம் உத்தரவு! சிறப்பு விசாரணை அதிகாரியாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் நியமனம்!
- உறியடி செய்திகள்

- Oct 3
- 2 min read

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஐ.ஜி. அஸ்கா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது சென்னை ஐகோர்ட்டு
கரூர் மாவட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தநிலையில், கரூர் பலி சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ போன்ற நிகழ்வுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில் குமார்,
தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகளுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில் குமார் இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து,

தவெகவின் செயலை நீதிமன்றம் கடுமையாக கண்டிக்கிறது. என்ன மாதிரியான கட்சி இது. கரூர் துயரத்துக்கு தவெக வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது அக்கட்சி தலைவரின் மனநிலையை காட்டுகிறது. அரசியல் கட்சிக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச சமூக பொறுப்பை கூட தவெக பின்பற்றவில்லை. சம்பவத்திற்கு பொறுப்பேற்காத தவெகவின் செயலுக்கு கடும் கண்டனம்.
ஒரு அரசியல் கட்சியின் இத்தகைய செயலை நீதிமன்றம் கடுமையாக கண்டிக்கிறது. குழந்தைகள், பெண்கள் இறந்து கிடந்தபோதும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிவிட்டனர். தவெக தலைவருக்கு தலைமைத்துவ பண்பே இல்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. கரூர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு கருணை காட்ட முடியாது.

கரூரில் நடைபெற்ற இந்த நிகழ்வு மனிதனால் நிகழ்த்தப்பட்ட பேரழிவு. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், அரசு அமைதியாக இருக்க முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் இருந்து எது கட்சியை தடுத்தது. குடிநீர் வழங்குவதற்கு கூட ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.அனைத்தும் நடைபெற அனுமதித்துள்ளீர்கள், காவல்துறை கண்மூடிக்கொண்டிருக்க முடியாது. சம்பவம் தொடர்பான வீடியோக்களை பார்க்கும்போது வேதனை அளிக்கிறது. நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. கலவரம் நடைபெறுவதை போல நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். என்ன மாதிரியான கட்சி இது?

ஒன்றிரண்டு தவிர மற்ற நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன. கட்சி தொண்டர்களை விட்டுவிட்டு தலைவரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் மறைந்துவிட்டனர். சம்பவம் நடைபெற்றதும் மற்ற கட்சியினர் உதவிக்கு விரைந்த போது தவெக நிர்வாகிகள் காணாமல் போனது ஏன்?
2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. தவெக இதற்காக காட்டிய பொறுப்பு என்ன? காவல் துறையும் தனது கைகளை கழுவி விட்டது. தவெக தலைவர் விஜய் வாகனத்தால் விபத்து ஏற்பட்டது தொடர்பாக வழக்கு பதியப்பட்டதா? விஜயின் வாகனம் மோதியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாவிடில் மக்கள் எப்படி நம்புவார்கள்? வழக்குப்பதிவு செய்ய என்ன தடை? புகார் இல்லாவிட்டாலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்கலாம்.
கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு நியமிக்கப்படுகிறது. வழக்கின் ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழு விடம் உடனே ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது. இதனையடுத்து விசாரணையின் நிறைவாக, விதிகளை வகுக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்தார் நீதிபதி செந்தில் குமார்.




Comments