top of page
Search

சிறுநீரக - உடல் உறுப்பு திருட்டு அபாயமானது! உயர் நீதிமன்ற நீதிபதிகள் விமர்சனம்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Aug 19
  • 2 min read
ree

உடல் உறுப்பு திருட்டு கொடூரமானது, அபாயகரமானது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, நாமக்கல் சிறுநீரக திருட்டு வழக்கின் விசாரணை மற்றும் மனித உடல் உறுப்புகள் விற்பனையை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.


பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள், சாய ஆலை தொழிலாளர்களிடம் சட்டவிரோதமாக சிறுநீரகம் திருடப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு சிறுநீரகத்துக்கு ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது. இது 1994-ம் ஆண்டின் மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சட்டத்துக்கு எதிரானது.

இருப்பினும் சிறுநீரக திருட்டு தொடர்பாக தமிழக அரசு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதால் மாநில காவல் துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, சிறுநீரகம் திருட்டு வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு இன்று விசாரித்தது. அரசு தரப்பில், ஏழை மக்களின் வறுமை நிலையை பயன்படுத்தி அவர்களிடமிருந்து உடல் உறுப்புகளை சிலர் வாங்குவது தெரியவந்துள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது எனக் கூறப்பட்டது.


இதையடுத்து நீதிபதிகள், ‘சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளின் உடல் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்வது கொடூரமானது, அபாயகரமானது. உயிர் வாழும் உரிமை அடிப்படை உரிமை. இதனை பாதுகாப்பது அரசின் கடமை. மனித உடலுறுப்புகளை பிற பொருட்களைப் போல விற்பனை செய்வது ஏற்கத்தக்கதல்ல. அது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றனர்.


மனுதாரர் தரப்பில், சிறுநீரகம் விற்பனை தொடர்பாக இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. 6 நபர்கள் சிறுநீரகங்களை தானமாக வழங்கியதாக கூறுகின்றனர். அதில் 5 பேர் அந்த ஊரிலேயே இல்லை. அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.


பின்னர் நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் தினமும் செய்திகள் வெளியாகி வருகிறது. இருப்பினும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? சிறுநீரகம் திருட்டு தகவல் தெரிந்தவுடன் மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும்.


ஏழைகளின் சிறுநீரகங்கள் எப்போது திருடப்பட்டது என்பது கூடத் தெரியாமல், 10, 15 ஆண்டுக்கு பிறகு சிறுநீரகம் திருடப்பட்டது தெரியவருவது பெரிய வேதனையானது. மனித உடல் உறுப்புகள் விற்பனையை தடுக்க வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் தமிழக சுகாதாரத் துறையின் தலைமைச் செயலர், ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குனர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறது.


சிறுநீரகம் விற்பனை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், மனித உடல் உறுப்புகள் விற்பனை செய்வதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஆக.21க்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page