top of page
Search

சமூகவலை தளத்திலிருந்து விலகல்! நாதக சீமான் மீது மானநஷ்ட வழக்கு! எஸ்.பி. வருண்குமார் அறிக்கை!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Aug 24, 2024
  • 3 min read
ree

தோகமலை.

ச.ராஜா மரியதிரவியம்....


எக்ஸ் தளத்தில் விலகல்! சீமான் மீது திருச்சி எஸ்பி வருண்குமார் மான நஷ்ட வழக்கு ! பரபரப்பு அறிக்கை!


எக்ஸ்தளத்தில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகவும், நாதக, சீமான் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாகவும் திருச்சி எஸ்பி வருண் குமார் அறிவித்துள்ளார்.!


அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


திருச்சி எஸ்பியாக கடந்த ஒரு வருடமாக பணிபுரிகிறேன். எனது 13 ஆண்டு கால ஐபிஎஸ் வாழ்க்கையில் எல்லா ஆண்டுகளிலும் நன்மதிப்பை மட்டுமே உயர் அதிகாரிகளிடம் இருந்து பெற்றுள்ளேன். 2021ம் ஆண்டு யுடியூபர் ஒருவர் ஒரு அரசியல் கட்சி பின்புலத்தோடு பொய் செய்திகளைப் பரப்பி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தினார். அப்போது, திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக இருந்த நான் அந்த யுடியூபரை கைது செய்து, பிரச்னையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தில் அடைத்தேன்.சமீபத்தில், அதே யுடியூபர் பதிவு செய்த சர்ச்சையான அவதூறுகளால் சைபர் க்ரைம் போலீசில் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டார். நான் சட்டப்படி பணியாற்றியதற்காக, அந்த யுடியூபர் சார்ந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் என்னைக் கடுமையாக (சில சாதி பெயர்களைக் குறிப்பிட்டு) சாடினார்.!

ree

அது விமர்சனைத்தையும் தாண்டி தீவிர அவதூறு கோணத்தில் இருந்தது. எனவே, அதற்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் அவதூறு நோட்டீஸ் எனது வழக்கறிஞர் மூலம் அனுப்பினேன். ஒருங்கிணைப்பாளருக்கு நான் சட்டப்படி இந்த நோட்டீஸ் அனுப்பிய ஒரே காரணத்திற்காக என்னைத் தாண்டி என் குடும்பத்தினர்கள், பெண்கள், குழந்தைகள் என என்னைச் சார்ந்தவர்கள் மீது வசைகளையும், ஆபாசமான, அவதூறான செய்திகளையும், அருவருப்பான வாக்கியங்களுடன் எக்ஸ் தளத்தில் பரப்பினர்.என் குழந்தைகள் மற்றும் என் குடும்ப பெண்களின் புகைப்படங்களும் தரம் தாழ்ந்து ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்டது. இது ஒரு கட்டத்தில் என் குடும்பத்தினருக்கே கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு அச்சுறுத்தலாக உருமாறியது. இவ்வாறு தொடர்ந்து ஆபாச சித்தரிப்பில் ஈடுபடும் இந்த கணக்குகளை ஆராயும்போது இவை அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரில் தொடங்கி மாநில பொறுப்பாளர்கள் வரை முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதலால் இயக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில், இவை அனைத்தும் போலிக் கணக்குகளாகவும், தொடர்ந்து இதே வேலையைச் செய்து வருபவையாகவும் உள்ளன!.

ree

அதிலும் பல போலி கணக்குகள் அந்த கட்சியின் தூண்டுதலின் காரணத்தினாலேயே வெளிநாடுகளில் வாழும் தமிழ் தெரிந்த நபர்களுக்கு பணம் கொடுத்து ஆபாச பதிவுகளை பதிவிட உத்தரவிட்டதாக தெரியவருகிறது.நான் இந்த விஷயத்தில் அளித்த 3 புகார்களில் 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சைபர் க்ரைம் போலீசார் இதனை விசாரித்து வருகிறார்கள். நானும், எனது மனைவியுமான வந்திதா பாண்டே ஐபிஎஸ்சும் தமிழ்நாட்டில் மத்திய காவல் மண்டலத்தில் முக்கியமான திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் எஸ்பிக்களாக பணிபுரிகிறோம். இந்த சவாலான பணியில் நேர்மையாகக் கடமையாற்றினால் மக்களின் நன்மதிப்புகளோடு ஒருசிலரின் பகையையும் சம்பாதிக்க நேரிடும் என்பதை நாங்கள் அறிவோம். பொது வாழ்வில் இருக்கும் எங்களுக்கு இதுபோன்ற தொடர் ஆபாச தாக்குதல்கள் ஒரு பொருட்டே அல்ல.!

ree

என்னதான் காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்தாலும் நாங்களும் சராசரி மனிதர்கள்தான். ஒரு சாதாரண தகப்பன் மற்றும் தாயாக இது எங்கள் குழந்தைகளையும், குடும்பத்தினரையும் பாதித்துள்ளது.நிஜவாழ்வில் பலரை எதிர்கொள்ளும் சூழலில் இந்த இணையக் கூலிப்படையை எதிர்கொள்வது எங்களுக்கு பொருட்டல்ல. ஆனால், ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த எக்ஸ் இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும், எனது மனைவியும் விலக முடிவு செய்துள்ளோம். எங்களது இந்த முடிவு தற்காலிகமானது என்றபோதும் நாங்கள் இதை பயத்தினாலோ, அருவருப்பினாலோ மேற்கொள்ளவில்லை. போலிக் கணக்குகள் மூலம் பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் குழந்தைகளுக்குக் கொலை மிரட்டல் விடும் வக்கிர புத்தியும், கொடூர எண்ணமும் கொண்டவர்கள் தான் இதற்கு அவமானப்பட வேண்டும். எங்கள் கையில் உள்ள பொறுப்பு, மக்கள் எங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை, நாங்கள் மேற்கொண்டு வரும் பணியின் பொருட்டு இதுபோன்ற குறுக்கீடுகளைப் புறந்தள்ளுகிறோம்.!


முகம் தெரியாத கோழைகளுக்கும் இணையக் கூலிப்படைகளுக்கும் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமோ, தேவையோ இல்லை. ஒரு காவல்துறை அதிகாரியாக நான் எனது கடமையை செய்ததற்கு எனது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரைத் தாக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? அது என்னை நேரடியாகவோ சட்டரீதியாகவோ எதிர்கொள்ள முடியாத கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடாகவே பார்க்கிறேன். அதேநேரத்தில், ஒரு சாதாரண குடிமகனாக இணையத்தில் எழுந்துள்ள இதுபோன்ற கூலிப்படை தாக்குதலைக் கண்டு மிகவும் அக்கறையும், அறச்சீற்றமும் கொள்கிறேன். ஒரு மாவட்ட கண்காணிப்பாளராக உள்ள பெண்ணையே இவர்கள் இந்தளவிற்குத் தாக்குகிறார்கள் என்றால் சாதாரண மக்களையும், பெண்களையும் என்ன செய்வார்கள்? இன்றுவரை பதிவிட்ட எந்த ஆபாச பதிவுகளையும் நீக்கவில்லை.வருத்தம் தெரிவிக்கவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை எனும்போது இந்த கூட்டத்திற்குச் சட்டத்தின் முன் தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது. இது சம்பந்தமாக சைபர் கிரைமில் மூன்று குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணையும், கைது நடவடிக்கையும் தொடரும். இதில் ஈடுபட்ட நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தருவது உறுதி.!

ree

ஒரு குடும்ப நபராகவும், காவல் அதிகாரியாகவும் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் கும்பல்களின் செயற்பாட்டை முறியடிப்பது எனது கடமை. இது போன்ற தாக்குதல்களுக்கு ஆளாகும் சாமானிய மக்கள் எந்தவித அச்சத்திற்கும் ஆட்படாமல் தானாக முன்வந்து புகார் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.ஆபாசம் மற்றும் அவதூறு பரப்பிய அனைத்து போலி கணக்குகளையும் அதன் பின் ஒளிந்து கொண்டு ஆபாசம் பரப்பும் விஷமிகளையும் அவர்களை கூலிக்காக தூண்டிவிடும் அந்த கட்சி பொறுப்பாளர்களையும் Tamil Nadu Prohibition of Harassment of Women Act 1998, Information Technology Act 2000, சட்டம் 2023 மற்றும் பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் 2023-ன் படி வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவேன் என்பதில் மிகவும் முனைப்புடன் இருக்கிறேன். இதுபோக இந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். எந்தவித சமரசமும் இன்றி இந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன். ஆன்லைன் அபியூஸ் என்பது சட்டத்தின் இரும்பு கரங்களால் ஒடுக்கப்படவேண்டிய ஒன்று. அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. குறிப்பாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அறவே இல்லை.உங்கள் அருகில் உள்ள சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஆன்லைன் அபியூஸ் பற்றிய புகார்களை உடனடியாக எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யவும். மேலும் தேசிய பெண்கள் உதவி எண் 7827170170, இதர உதவி எண்கள் 100, 112, 181, 1091, 1098, 1930 மற்றும் https:// cybercrime.gov.in (NCRP Portal) சமூக வலைத்தளங்கள் இன்று பயன்படுத்தும் சூழலில், குழந்தைகள் உட்பட அனைவரும் நாம் அதில் இதுபோன்ற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.!


இவ்வாறு அவர் கூறியுள்ளார்

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page