பெரியார், அம்பேத்கார் கொள்கைவழியில் அரசியல் நகர்வு ஏற்படுத்துவோம்! திருமுருகன் காந்தி அழைப்பு!
- உறியடி செய்திகள்

- Nov 24, 2023
- 3 min read

திருச்சியில் முப்பெரும் விழா
திருமுருகன் காந்தி பதிவிலிருந்து...!
தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை வீழ்த்த முற்போக்கு சிந்தனைகளே முதன்மையானது. காலந்தோறும் அத்தகைய சிந்தனையாளர்களை தமிழ்ச்சமூகம் உருவாக்கி இருக்கிறது. இச்சிந்தனையாளர்கள் வஞ்சிக்கப்பட்ட மக்களை மட்டுமே கணக்கில் கொண்டு எதிர்வினையாற்றியவர்கள். தமிழர்கள் எதிர்காலத்தில் எப்படியான சமூகத்தில் வாழவேண்டுமென கனவு கண்டவர்கள். அவர்களுக்கு பழம்பெருமைகளைவிட, நிகழ்கால வன்முறைகளே கண்ணில் தெரிபவை. இப்படியாக சிந்தித்தவர்களை காலம் தோறும் பார்ப்பனியம் சிதைத்தோ, ஒதுக்கியோ, அழித்தோ வெற்றிகரமாக ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. ஆனாலும், விதைகளாக இச்சிந்தனைகள் காலத்திற்கேற்ப முளைத்துக்கொண்டே இருந்திருக்கின்றன.!

தமிழன் எதிர்கொண்ட ஆரிய மத ஆதிக்கம், ஆரிய மொழி ஆதிக்கம், ஆரிய சாதி ஆதிக்கம் எனும் பட்டியல் மிக நீளமானது. இந்த ஆரிய ஆக்கிரமிப்பு ஒரு நூற்றாண்டில் நடக்கவில்லை. ஒரு மன்னரது ஆட்சியில் நிகழவும் இல்லை. ஆயிரம் ஆண்டுகாலமாக வேர்விட்டுவளர்ந்து ஆதிக்க மரமாக நின்றுகொண்டிருக்கிறது. இந்த ஆதிக்க மரத்தின் வேர்களில் அமிலத்தை ஊற்றியவர்களாக திருவள்ளுவரில் ஆரம்பித்து, சித்தர்கள், வள்ளலார் வரை பட்டியல் மிக நீண்டது. வெள்ளையரின் ஆட்சிகாலத்தில் உருவான புதிய அரசு கட்டமைப்புகளை ஆக்கிரமிக்க பார்ப்பனியம் முயன்ற காலத்தில் எழுந்த போர்க்குரல் அயோத்திதாசர், வ.ஊ.சி, நீதிக்கட்சி என வளர்ந்து தந்தைப்பெரியாரினால் பேரியக்கமாக உருவெடுத்தது. ஒருபுறம் தமிழ்மொழி மீட்புக்கான போராட்டமும், சமூகநீதிக்கான போராட்டம் மறுபுறமாக இயங்கிய நிலையில், ஆதிக்க பார்ப்பனரான ராஜாஜியின் கூட்டம் இந்த ஆற்றல்கள் வலிமையாக ஒன்றுபட்டு போராடும் நெருக்கடியை உருவாக்கியது. இவ்வாறு எழுந்த போராட்ட களம் ஆதிக்க பார்ப்பனர்களை அரசியல், சமூகவெளியில் இருந்து ஓரம்கட்டியது. இருந்த போதிலும் இந்தியாவிற்குள் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர் பார்ப்பனர்கள்.
இந்த பார்ப்பனிய சதிகளை ஆய்வுமூலமாகவும், போராட்டம் மூலமாகவும் அம்பலப்படுத்திய அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகள், செயல்கள் இந்திய அளவில் பார்ப்பனிய எதிர்ப்பு விரிவடைய களம் அமைத்தது!.

தென்னகத்தில் இருந்த பார்ப்பனல்லாதார் திராவிடர் இயக்க அரசியலும், வடக்கில் எழுந்த அம்பேத்கரது ஒடுக்கப்பட்டோர் எழுச்சி அரசியலும் இந்திய வர்லாற்றில் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிரான கூட்டணியை அமைத்தது. இந்த எதிர்ப்பு அரசியல் பார்ப்பனியத்திற்கு விடுத்த சவால்களே இந்திய அரசியல் சாசனம் மனுதர்மத்தின் கட்டுப்பாட்டிற்குள்ளாக, சங்கரமடத்தின் ஆதிக்கத்திற்குள்ளாக செல்லாமல் தடுக்கப்பட்டது. பார்ப்பனர்கள் ஆதிக்கத்தை தடுக்க பாராளுமன்றம், அரசியல்சாசன உருவாக்கத்தில் போராடிய அண்ணலும், அரசியல் சாசனத்திற்குள்ளாக பார்ப்பனர்கள் திணித்த சாதிய-இந்துத்துவ அரசியலுக்கு எதிராக பெரியாரும் மக்களை அணி திரட்டினர். இந்த போராட்டங்களே இந்தியாவின் அரசியலில் பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டிய சனநாயக உரிமைகளை பாதுகாக்கும் சட்ட உருவாக்கம் அம்பேத்கரால் போராடி அங்கீகரிக்கப்படலும், பார்ப்பனர்களால் திணிக்கப்பட்ட சாதியை பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் சட்ட எரிப்புப் போராட்டமாக பெரியாராலும் முன்னெடுக்கப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள்.
வாய்ப்பிருந்திருக்குமெனில் பெரியாரின் சாதியை பாதுகாக்கும் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் முதல் நபராக சட்டநகலை எரித்திருப்பார் அண்ணல். அவரே இதை ஒருகட்டத்தில் அறிவித்துமிருக்கிறார்.!

அண்ணலால் போராடி கொண்டுவரப்பட்ட சனநாயக உரிமைகளை காக்கும் போராட்டம் இன்று நமக்கு உருவாகி இருக்கிறது. பெரியார் எதிர்த்த சாதியை வலுப்படுத்தும் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக அணி திரளும் அவசியமும் நமக்கு இருக்கிறது. இப்படியான நெருக்கடிக்கு தீர்வுகளையும், போராட்ட வழிமுறைகளையும் நமக்களித்த பெரியாரையும், அண்ணலையும் அன்னியப்படுத்தும் பிரச்சாரங்களை போலித் தமிழ்த்தேசியம் முன்னெடுக்கிறது. இந்த ஆளுமைகள் மீது தத்துவார்த்த விவாதங்களை முன்னெடுக்காமல் ஐயா. மணியரசனும், திரு. சீமானும் அவதூறுகளை அடுக்கிச்செல்கிறார்கள். இவர்கள் உருவாக்க விரும்பும் வெற்றிடத்தில் இந்துத்துவ அரசியல் காலூன்றும் என்று அறிந்தும் இந்த இரண்டக அரசியலை முன்னகர்த்துகிறார்கள். பெரியாரை, அம்பேத்கரை எதிர்ப்பதுவே தமிழ்தேசியமென முழங்கிச் செல்கிறார்கள்!.

சாதி, இந்துத்துவம், இந்திய ஆதிக்கம் ஆகியவற்றிற்கு எதிராக போராடுவதே தமித்தேசியமென தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள், பாவலரேறு பெருஞ்சித்தரனார் முதல் மேதகு பிர.பாகர.ன், ஆண்டன்பாலசிங்கம், தராகிசிவராம் வரை பல ஆளுமைகள் இப்போராட்டத்தை நெறிப்படுத்தியதை நிரகாரித்து போலி அரசியலையும், இந்தியாவின் ஆதிக்க அரசியல் நிலைபெறும் வகையில் சீரழிவு அரசியலை உருவாக்குகிறார்கள். சாதி, பெண்ணடிமை, இந்திய ஆதிக்க எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, மதவெறி எதிர்ப்பு என முற்போக்கு அரசியலை தமிழ்த்தேசிய தலைவர் மேதகு அவர்கள் உருவாக்கிச் சென்ற அரசியலை சிதைப்பதே இவர்களின் உள்ளார்ந்த இலக்காக உள்ளது. தமிழர் அழிப்பு நடந்த கடந்த 15 ஆண்டுகளில் ஆக்கப்பூர்வ அரசியலையோ, தமிழரை அழித்த ஆதிக்கத்திற்கு எதிரான அரசியலையோ முன்னகர்த்தாமல், தமிழருக்குள்ளாக குழப்ப அரசியலை துணிந்து முன்னெடுக்கிறார்கள். தேர்தல் அதிகாரத்தை வைத்துக் கொண்டு சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, இந்திய-இந்து-இந்தி ஆதிக்க அரசியலை ஒழித்துவிட முடியாது என்பதை அறிந்தும், தேர்தல் ஆட்சியாளர்களை மட்டும் இலக்காக்கி தமிழ்த்தேசிய அரசியலை மடைமாற்றம் செய்து இளம் தமிழர்களை சிதைக்கும் அரசியலை செய்துவருகிறார்கள்.!
இதே சமயத்தில் தமிழகத்தின் போராட்ட அரசியலை பயன்படுத்தி அதிகாரத்திற்கு வந்த திமுகவின் செயல்பாட்டாளர்கள், சில மூத்த திராவிட ஆளுமைகள் ஆதரவோடு மேதகு பிர.பாகர.னை தமிழ்நாட்டிற்கு தேவையற்றவராக, தமிழின அரசியலின் எதிரியாக சித்தரிக்கும் சீரழிவான இழிவான அரசியலை ஆதரித்து வளர்க்கிறார்கள். இவ்வாறான இந்திய பார்ப்பனியத்தின் கைக்கூலி வேலையை செய்யும் சந்தர்ப்பவாதிகளை கண்டிக்காமல் மெளனம் காக்கிறார்கள். தமது தனிப்பட்ட வன்மத்திற்காக ஈழ அரசியல் மீது அவதூறு செய்யும் சதிகார கும்பலைக் கொண்டு திமுகவின் பயிற்சி அரங்கை அலங்கரிக்கின்றனர். இந்திய-சிங்கள இனவாத அரசியலுக்கு துணை போகும் சீரழிவு நபர்களை வளர்த்துவிடும் இரண்டக போக்கை செய்துவருகின்றனர்.
ஆக போலித்தமிழ்த்தேசியவாதிகள் பெரியாரை இழிவுபடுத்துவதும், அண்ணலை ஏற்கமறுப்பதுமாக தமிழர் அரசியலை பின்னுக்கு இழுக்கும் குழு ஒருபுறமும் , தமிழின ஆளுமையான பிர.பாகரனை எதிரியாக சித்தரித்து கொச்சைப்படுத்தும் பணியை திராவிடத்தின் பெயரால் சீரழிவு அரசியலையும் கும்பல் மறுபுறமாக இந்திய பார்ப்பனியத்திற்கு சேவை செய்யும் அரசியலை வீழ்த்தவே தலைவர், தம்பி, அண்ணலைக் கொண்டாடும் ’முப்பெரும் விழா’வை கொண்டாடுகிறோம். இந்த சீரழிவு அரசியலை வீழ்த்தி தமிழர் அரசியலை பாதுகாக்கவே ‘தமிழ்த்தேசியக் கூட்டணி’ எனும் கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.!

பெரியார், அண்ணல், தலைவர் ஆகியோரை ஏற்கும் எவரும் எம் அணியில் இணையலாம். தமிழர் அரசியலை முன்னகர்த்த கைகோர்க்கலாம் என அன்புடன் அழைக்கிறோம்.
வாருங்கள் நவம்பர் 26ல், (ஞாயிற்றுக்கிழமை) திருச்சியில் ஒன்றுகூடுவோம்!.
இவ்வாறு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்
திருமுருகன் காந்தி கூறியுள்ளார்




Comments