100, அடியை நெருங்கும் மேட்டூர் டேம்! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! 9 மாவட்டங்களுக்கு முன் எச்சரிக்கை!
- உறியடி செய்திகள்

- Jul 26, 2024
- 2 min read

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்கி வரும் நிலையில், கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து, ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, வருவாய் துறை சார்பில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 9 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பலபடுத்தவும் தமிழக அரசு உத்தரவு!

கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், மீண்டும் சரிய தொடங்கியது. தற்போது, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால், அங்குள்ள அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வெள்ளிக்கிழமை காலை விநாடிக்கு நீர்வரத்து 45,598 கன அடியாகவும், மதியம் 58,973 கன அடியாகவும் இருந்தது.

தொடர்ந்து, நீரின் அளவு அதிகரித்து, இன்று மாலை விநாடிக்கு நீர்வரத்து 68,032 கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் மட்டுமே நீர் வெளியேற்றப்படுகிறது. இதனிடையே, அதிகரித்து காணப்படும் நீர்வரத்தினால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 92.62 அடியாக இருந்த நீர் மட்டம், மாலையில் 94.23 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 55.69 டிஎம்சியில் இருந்து 57.62 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து இருக்கும் நிலையில், பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வள ஆணையம், தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியதும், டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. !

தற்போதைய நீர் வரத்து தொடர்ந்தால், இன்று மாலைக்குள் நீர்மட்டம் 100 அடியை எட்டிவிடும். தொடர்ந்து, நீர்வரத்து அதிகரித்தால், டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பது குறித்து அணையின் நிலவரங்களை தனி கவனத்துடன் கண்காணித்து வரும், தி.மு.கழகத்தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு முடிவு செய்யும்,” என்றும் சம்மந்தபட்ட தரப்பில் கூறப்படுகின்றது.!
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படிமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர் வளத்துறை ஆணையத்தின் செயற்பொறியாளர் பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.!

அதில், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட 83,000 கன அடி நீர் நாளைக்குள் மேட்டூர் அணை வந்தடையும். எனவே, நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.! அணைதிறப்பு தண்ணீர் செல்லும்
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை ஆகிய 9 மாவட்ட ஆட்சியருக்கு இது குறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.!

கர்நாடகா அணைகளில் இருந்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், சேலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி, வருவாய்துறை சார்பில் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டூர் அணை நீர்தேக்க பகுதியான கோட்டையூர், செட்டிப்பட்டி, பண்ணவாடி, கோவிந்தபாடி உள்ளிட்ட பகுதிகளில் மீன் பிடிக்கவோ, பரிசல் இயக்கவோ, துணி துவைக்கவோ பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வருவாய் துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.!




Comments