நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
- உறியடி செய்திகள்

- Aug 15
- 2 min read

சென்னையில் இன்று காலமான நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுக்கு மறைவுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1945 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தவர் மறைந்த இல. கணேசன். சிறுவயதிலேயே தந்தையை இழந்து, பின்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஈர்ப்பு கொண்டு அதில் பணியாற்றினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேரச் செயல்பாட்டாளராக இயங்க ஆரம்பித்தார். திருமணமே செய்துகொள்ளாமல் பொதுவாழ்விற்கு தனது வாழ்வை அர்ப்பணித்த இல. கணேசன், பாஜகவில் இணைந்து செயலாற்றினார்.
செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த இல. கணேசனுக்கு பாஜக மாநிலத் தலைவர் ஆகிய பதவிகளை தேசிய பாஜக வழங்கியது. 2021ஆம் ஆண்டு மணிப்பூரின் ஆளுநராக நியமிக்கப்பட்ட இல. கணேசன், 2023ல் நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு, அம்மாநிலத்தின் ஆளுநராக செயல்பட்டுவந்தார்.
இந்நிலையில், நீரிழிவு நோய் காரணமாக சிகிச்சை பெறுவதற்கு சென்னை வந்த இல. கணேசன், கழிவறையில் தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் அடிபட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் இன்று மாலை சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
இல.கணேசன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இல.கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "மாற்றுக் கொள்கை கொண்ட இயக்க தலைவர்களிடமும் மரியாதை பாராட்டியவர் இல.கணேசன். மாண்புடன் நடந்து கொண்டு அரசியல் நாகரீகம் பேணிக்காத்தவர். அரசியல் வாழ்க்கைக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் பொது வாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி இரங்கல்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அனைவரிடமும் அன்புடனும், பாசத்துடனும் பழகக்கூடிய இல.கணேசன் ஆளுநர், எம்.பி. உள்ளிட்ட பல பதவிகளில் பணியாற்றிய பெருமைக்குரியவர். இல.கணேசனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்" எனத் தெரிவித்துள்ளார்.
எல்.முருகன் இரங்கல்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நாகலாந்து மாநில ஆளுநரும், நமது பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அய்யா இல. கணேசன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை சாமானிய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு வகித்தவர், கண்ணியமான பேச்சும் கனிவான குணமும் கொண்டவர், தனது வாழ்நாளை தேசத்திற்காகவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்து வாழ்ந்தார்.
மாண்புமிகு நாகலாந்து மாநில ஆளுநராக தனது சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வந்த அய்யா இல. கணேசன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நமது பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட பதிவில், "நாகலாந்து ஆளுநரும், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான இல.கணேசன
உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இல.கணேசன் எளிமையானவர். பண்பாளர். அவரது மறைவு, அரசியல் துறைக்கும், மக்களுக்கும் பெரும் இழப்பாகும். இக்கடினமான நேரத்தில், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபத்தையும், தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.




Comments