திருச்சி வந்தார் பழனிசாமி! தேர்தல் பரப்புரையிலும் பங்கேற்பு!
- உறியடி செய்திகள்

- Aug 23
- 1 min read

தமிழக எதிர் கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று மாலை விமானம் மூலம் திருச்சி வந்தார். இந்த 3 நாட்கள் சுற்றுப்பயணத்தில் 9 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது குறித்த விபரம் வருமாறு;
2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் மாநகர், வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் இன்று முதல் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதையொட்டி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் முன்னாள் எம்பி முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று அங்கு ஓய்வு எடுத்தவர், பின்னர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதையடுத்து சிறிதுநேர ஓய்வுக்கு பிறகு அவர், ஓட்டலில் இருந்து புறப்பட்டு மாலை திருவெறும்பூர் தொகுதியில் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகே பிரசாரம் செய்கிறார்.
அதன்பிறகு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காந்திமார்க்கெட் மரக்கடை அருகே இரவு பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து அங்கிருந்து அவர் லால்குடிக்கு சென்று அங்கு இரவு 9 மணி அளவில் பிரசாரம் செய்கிறார்.
நாளை திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் கடைவீதியில் மாலை 4 மணி அளவில் பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி, அதனை தொடர்ந்து துறையூர் மற்றும் முசிறியிலும் பிரசாரம் செய்கிறார். நாளை மறுநாள் திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் திருச்சி மணப்பாறை பகுதியிலும், மாலை 6.30 மணி அளவில் திருச்சி மாநகரில் புத்தூர் நால்ரோடு பகுதியிலும், இரவு 8 மணி அளவில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகிலும் தீவிர பிரசாரம் செய்கிறார்.
திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரசாரம் நடைபெறும் இடங்களில் கொடி, தோரணங்கள், அலங்கார வளைவுகள், பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் வழிநெடுகிலும் தொண்டர்கள் திரண்டு நின்று அவரை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளது.




Comments