எடப்பாடி மீது பிரேமலதா விஜயகாந்த் கடும் தாக்கு!
- உறியடி செய்திகள்

- Aug 31
- 1 min read

சென்னை தியாகராய நகரில் இன்று நடைபெற்ற தே.மு.தி.க பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.!
"எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான கூட்டணி ஒப்பந்தங்களில் தேதி குறிப்பிட மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதேபோலத்தான் தேமுதிகவுடனான ஒப்பந்தத்திலும் தேதி குறிப்பிடப்படவில்லை. ஆனால், மாநிலங்களவை எம்.பி. இடம் குறித்து தெளிவாகப் பேசிய பிறகே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். அவர் முன்னாள் முதலமைச்சர் என்ற மரியாதை காரணமாகவே அந்த ஆதாரங்களை நாங்கள் வெளியிடவில்லை," என்று பிரேமலதா பேசியதாகக் கூறப்படுகிறது.
"அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம். பதவி கொடுப்பார்கள் என நம்பியிருந்தோம். பெரிய மனிதர் என நம்பி நம்பி ஏமாந்தது போதும், இனி நாம் நம்பத் தயாராக இல்லை. எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார்" என பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணங்களுக்குக் கூட்டம் கூடுவதன் பின்னணியையும் பிரேமலதா கேள்விக்குள்ளாக்கினார். "அவரது பிரச்சாரக் கூட்டங்களுக்குப் பணம் மற்றும் மது ஆகியவற்றைக் கொடுத்து ஆட்களைக் கூட்டி வருகிறார்கள். ஆனால், நமது கூட்டங்களுக்கு விஜயகாந்த் மீதுள்ள அன்பால் மக்கள் திரண்டு வருகின்றனர்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் தேர்தல்களில் தே.மு.தி.கவைத் தேடி மற்ற கட்சிகள் வரும் என்றும், கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது எத்தனை தொகுதிகள் என்பதை எழுத்துப்பூர்வமாகப் பெற்ற பின்னரே கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும் பிரேமலதா உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 19-ஆம் தேதி தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது, கடந்த மக்களவைத் தேர்தல் ஒப்பந்தத்தின்படி, தங்களுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்க வேண்டும் என தே.மு.திக. தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை இடம் தருவதாக சொல்லவே இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அ.தி.முக பொதுச்செயலாளரை சந்தித்த தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷிடம், தேர்தலில் இடம் இல்லை என்றும், அடுத்த தேர்தலில் வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதன் பிறகு, 2026 தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை இடம் தரப்படும் என அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தச் சூழ்நிலையில்தான், பிரேமலதா விஜயகாந்த் இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சித்துள்ளார்.




Comments