top of page
Search

தென்காசி :இயற்கைக்கு எதிராக தனியார் சோலார் நிறுவனம்! தடை செய்ய வலியுறுத்தி 8 பேர் தீக்குளிக்க முயற்சி!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Oct 6
  • 1 min read
ree

தனியார் சோலார் உற்பத்தி நிலையத்துக்கு எதிர்ப்பு: தென்காசியில் 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!


ஆலங்குளம் அருகே கல்லத்திகுளம் கிராமத்தில் தனியார் நிறுவனம் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லத்திகுளம் கிராமத்தில் தனியார் நிறுவனம் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக வாங்கப்பட்ட நிலத்தில் இருந்த ஏராளமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மரங்களை வெட்டி இயற்கையை அழிப்பதாக கூறி, சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த கல்லத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.


கல்லத்திகுளத்தில் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். கோரிக்கை தொடர்பாக முக்கிய பிரமுகர்கள் 5 பேர் மட்டும் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று, ஆட்சியரை சந்தித்து மனு அளிக்குமாறு போலீஸார் கூறினர். அதன் பின்னர், 5 பேர் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று மனு அளித்துவிட்டு வெளியில் வந்தனர். அதன் பின்னரும் போராட்டம் நீடித்தது.


ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களிடம் தென்காசி டிஎஸ்பி தமிழ் இனியன் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களில் சிலர் அடுத்தடுத்து தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். தற்கொலைக்கு முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, பிடித்துக்கொண்டனர்.


உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிய 8 பேர் ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்சியர் அலுவலக கேட்டை மூடிய போலீஸார், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியவர்களை பிடித்து, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தீக்குளிக்க முயன்றவர்கள் மீது தீயணைப்புப் படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page