தி.மு.க ஆட்சி விணடிக்கபட்டது! எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு!
- உறியடி செய்திகள்

- Aug 16
- 3 min read

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி. இன்று செங்கம், கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் மக்களை சந்தி
த்தார். முதலில் செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த மக்களிடம் இபிஎஸ், ‘’செங்கம் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என்பதற்கு இந்த மக்களின் ஆரவாரமே சாட்சி. திமுக ஆட்சியின் 51 மாதம் வீணடிக்கப்பட்டுவிட்டது. நிறைய திட்டங்கள் கொடுத்திருக்கலாம், எதுவுமே கொண்டுவரவில்லை.
அதிமுக ஆட்சி விவசாயிகளின் பொற்கால ஆட்சியாக இருந்தது. விவசாயிகளுக்கு இரண்டு முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்தோம். குடிமராமத்துத் திட்டம் கொண்டுவந்தோம், 24 மணி நேரமும் பயன்படுத்தும் வகையில் மும்முனை மின்சாரம் கொடுத்தோம். பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகளை இணைத்து இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். மேலும் விவசாயத் தொழிலாளர்களுக்கு பசுமை விடுகள், கறவை மாடுகள், ஆடு, கோழி, உழவர் பாதுகாப்பு திட்டம் கொடுத்தோம். அடுத்தாண்டு அதிமுக ஆட்சி அமைக்கும்போது விவசாயிகள், ஏழைத் தொழிலாளிகள், தாழ்த்தப்பட்டோருக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும்.
இன்று காலை விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரிடம் பேசினேன், போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் எங்களால் வியாபாரம் செய்ய முடியவில்லை என்று வருந்தினார்கள். நானும் இதைத்தான் பலமுறை சொன்னேன், எதையுமே திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவினால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாக்கிவிட்டனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டனர். தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பாதிரியார்களும் பள்ளி மாணவர்களும் போதைக்கு அடிமையாகிவிட்டனர் என்று வருந்தினார்கள்.
அதிமுக போராட்டம் நடத்தினால் நாங்களும் இணைகிறோம் என்றார்கள். அதாவது, தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் போதைப் பொருள் ஊடுருவியுள்ளது. இதனைத் தடுப்பதற்கு அரசினால் முடியவில்லை ஏனென்றால் போதைப் பொருள் விற்பவர்கள் திமுகவுக்கு நெருக்கமானவர்கள். இதில் போலீஸாருக்கு முழு சுதந்திரம் இல்லை அதனால்தானோ போதை ஆசாமிகளை கட்டுப்படுத்த முடியலை. எல்லோரும் திமுக நிர்வாகியாக இருப்பதால் போலீஸால் நடவடிக்கை எடுக்கமுடியலை.

சிறுமி முதல் முதியோர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. முதியோரை குறிவைத்து திருடிவிட்டு அவர்களை வெட்டிச் சாய்க்கிறார்கள். அரசு விழிப்புடன் இருந்தால் இந்த பிரச்னையைத் தீர்க்கலாம் ஆனால், இந்த அரசுக்கு அந்த திறமையில்லை. அதனால் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை. 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். மக்களைப் பாதுகாக்கும் போலீஸை ராணுவம் வந்து பாதுகாக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. இதற்கெல்லாம் முடிவுகட்டும் தேர்தலாக 2026 இருக்கும். ஸ்டாலின் 525 அறிவிப்புகள் வெளியிட்டார், எதையும் நிறைவேற்றவில்லை. இந்த உண்மையைச் சொன்னால் நாங்கள் அரசியல் செய்கிறோம் என்று திருமாவளவன் சொல்கிறார், நாங்கள் அரசியல் செய்யவில்லை, நடப்பதையே சொல்கிறோம்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு உறுதி கொடுக்கிறார், அவர்கள் கொடுத்த பட்டியலைப் பெற்றுக்கொண்டு உறுதி கொடுத்தார். அதன்படி தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்யுங்கள் என்று ஆணையாளருக்குக் கடிதம் எழுதினார். இவற்றை எல்லாம் செய்து வாக்குகளை வாங்கிவிட்டு கோரிக்கைகளை நிராகரித்துவிட்டார். தூய்மைப் பணியாளர்களை கைதுசெய்து மண்டபங்களில் அடைத்தார். இதற்கு திருமாவளவன் வக்காலத்து வாங்குகிறார், திருமா அவர்களே, திமுக செய்கின்ற பாவ மூட்டையை சுமக்காதீர்கள்.
கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் விவகாரத்தில் மக்களை நேரடியாக சந்தித்த திருமாவளவன் மதுவை ஒழிக்க மாநாடு நடத்துவேன் என்று அறிவித்தார். அதன் பிறகு அந்த போராட்டத்தை போதை ஒழுப்பு மாநாடு என்று பெயர் மாற்றிவிட்டார். திமுக கொடுத்த நெருக்கடியில் பெயரை மாற்றியது மட்டுமில்லாமல் திமுக நிர்வாகிகளை மேடையேற்றி பேச வைக்கிறார். திருடன் கையில் சாவி கொடுத்த மாதிரி. நடந்துகொண்டார். பாவம் திருமாவளவன், சேரக்கூடாத இடத்தில் போய் சேர்ந்துவிட்டார். வேறு வழியில்லை கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரே காரணத்தினால் திமுக சொல்வதை அறிக்கையாக வெளியிட்டு வருகிறார். திருமா அவர்களே, உங்களுக்கு என மரியாதை இருக்கிறது. திமுக செய்யும் தவறை எல்லாம் நீங்கள் சுமந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாக கருத்தை வெளியிட்டால் உங்கள் நிலை தலைகீழாக மாறிவிடும் என்று அன்போடு சொல்கிறேன்.
திமுக அரசு சமூக நீதி பேசுகிறார்கள். ஆனால், அப்படி நடப்பதில்லை. அண்மையில் சேலத்தில் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் அரசு விழா நடந்தது. அதில் மேட்டூர் நகர்மன்றத் துணை தலைவரை நாற்காலியில் அமரவைத்தனர், ஆனால், மேட்டூர் நகர்மன்ற தலைவர், இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் இவரை நிற்க வைத்தனர். (போட்டோவை மக்களிடம் காட்டுகிறார்). இவர் தான் சமூகநீதியைக் காப்பாற்றுகிறாராம். இதற்கு திருமா வரிந்துகட்டி பேசிக்கொண்டிருக்கிறார். இனியாவது திருமா உணர்ந்து அதற்குத்தக்க நடந்துகொள்ள வேண்டும். ஸ்டாலின் 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக உயர்த்தவில்லை, சம்பளமும் உயர்த்தவில்லை, அவர்களுக்கான சம்பளத்தையே அதிமுக தான் பெற்றுக்கொடுத்தது.
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவராக 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டுவந்தோம். அதன்மூலம் 2818 பேர் இலவசமாகப் படித்து மருத்துவர் ஆகிவிட்டனர். மக்களுக்குத் தேவையானதை செய்தோம். இன்று திமுக அரசு அப்படி இருக்கிறதா..? அரசு பணத்தில் உதயநிதி கார் பந்தயம் நடத்தினார், ஸ்டாலின் கடலில் பேனா வைக்கிறார். எழுதாத பேனாவை எங்கு வைத்தால் என்ன? நடுக்கடலில் 82 கோடியில் ஏன் வைக்க வேண்டும்? எழுதும் பேனாவை மாணவர்களுக்குக் கொடுங்கள், அவர்கள் பாராட்டுவார்கள். திமுக ட்ரஸ்டில் பல்லாயிரம் கோடி ரூபாய் இருக்கிறது. அந்த பணத்தில் வையுங்கள், யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அரசியல் கட்சிகளிலேயே டிரஸ்ட்டில் அதிக பணம் வைத்துள்ள ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான்.
ஊழல் என்றாலே திமுகதான். இன்று கூட ஒரு மந்திரி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தது. (மக்கள் அமைச்சர் பெயரைச் சொல்கிறார்கள். நீங்களே பெயர் சொல்லிவிட்டீர்கள். நான் அவர் பெயரைச் சொன்னால் திமுக கூட்டணிக்காரர்களை வைத்து பேச வைப்பார்கள். ஏனென்றால் திமுகவால் பேச முடியாது. சரக்கு இருந்தால்தானே பேச முடியும்? ரெய்டு நேரத்தில் ஒரு அலுவலகத்தை சோதனை செய்துவிடக்கூடாது என்று பூட்டி வைத்துவிட்டனர். நீங்கள் உத்தமர் என்றால் திறந்துவிடுங்கள், என்ன இருக்கிறது என்று பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது..?
மடியிலே கனம் இருப்பதால் வழியிலே பயம் பிடித்துவிட்டது. அதனால்தான் பூட்டி வைத்தனர். நான் முதல்வராக இருந்தபோது என் மீது ஊழல் வழக்கு போட்டார்கள், வழக்கு போட்டவரே திரும்பப்பெறுவதாகச் சொல்லியும், நான் வழக்கை நடத்தி நிரபராதி என்று உங்கள் முன்பு நிற்கிறேன். உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர், ஆனால் அங்கும் டிஸ்மிஸ் செய்துவிட்டனர்.இப்போது என் மீதான வழக்கை தூசுதட்டி எடுப்போம் என்று என் மீது கேஸ் போட்டவர் சொல்கிறார், நானே தூசுதட்டித் தருகிறேன். நீங்கள் போய் வழக்குப்போடுங்கள். தூசு தட்டவேண்டிய நேரம் வரும் 2026ல் அப்போது யார் யார் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே அனைவரும் இருப்பார்கள்.
நான்கு ஆண்டுகள் பூச்சாண்டி காட்டியும் அதிமுகவை எதுவும் செய்ய முடியவில்லை. இருபெரும் தெய்வ சக்தி படைத்தவர்கள் உருவாக்கிய கட்சி அதிமுக. இப்போது ஒரு அமைச்சர் கதவை தான் அமலாக்கத் துறை தட்டியிருக்கிறது. இதற்கே மற்ற அமைச்சர்கள் எல்லாம் தூக்கம் இழந்துவிட்டனர். ஊழல் மலிந்த அரசை யாராலும் காப்பாற்ற முடியாத நிலை வந்துவிட்டது. அதனால் தான் ஓரணியில் தமிழ்நாடு என்று வீடுவீடாகச் சென்று உறுப்பினர் ஆகுங்கள் என்று பிச்சை எடுக்கிறார்கள். இப்படி ஒரு பரிதாபமான நிலை திமுகவுக்கு வந்துவிட்டது. அதிமுக 10 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு திட்டங்களை வழங்கி சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றினோம். அடுத்தாண்டு தேர்தலில் வென்று அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம், பைபை ஸ்டாலின்” என்று உற்சாகத்துடன் பேசினார்.




Comments