த. வெ.க. பிரச்சார கூட்டத்திற்கு ஏன் பெரிய இடம் கொடுக்கவில்லை! பா.ஜ. எம்.பி.க்கள் சரமாரி கேள்வி!
- உறியடி செய்திகள்

- Oct 1
- 2 min read

த.வெ.க பிரச்சார கூட்டத்திற்கு பெரிய இடத்தை கொடுக்காமல் சிறிய இடத்தை அனுமதிக்க காரணம் என்ன? விஜய் வரும்பொழுது மின்வெட்டு நடந்ததற்கான காரணம் என்ன? – கரூர் ஆய்வுக்குப் பின் பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா கேள்வி!
ஒரு நபர் ஆணைய விசாரணை என்பது மாநில அரசுக்கு சாதகமாகவே இருக்கும். எனவே வெளிப்படையான விசாரணை தேவை என்றால் சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கரூர் சோக சம்பவம் குறித்த நேரில் விசாரணை மேற்கொண்ட பா.ஜ.க பாராளுமன்ற குழு உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொண்ட பா.ஜ.க எம்பிகள் குழுவினர் காலை முதல் அங்கு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தும் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டும் விசாரணை நடத்தினர்.
அதை தொடர்ந்து கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி திரும்ப பாராளுமன்ற உறுப்பினர்கள் தேஜஸ்வி சூர்யா மற்றும் அனுராக் தாகூர் ஆகியோர் வந்தனர். அவர்களுடன் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

கோவை விமான நிலையத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.,க்கள் ஆய்வு குழு தலைவர் ஹேமாமாலினி கூறுகையில், ”நாங்கள் செய்த ஆய்வு பற்றி ஏற்கனவே விரிவாக கூறியிருக்கிறோம். எங்களது அறிக்கையை பிரதமரிடமும் பா.ஜ.க தலைவர் நட்டாவிடமும் கொடுக்க இருக்கிறோம். உச்சநீதிமன்றம், சி.பி.ஐ இடமும் வழங்குவதற்கு திட்டம் உள்ளது. நாங்கள் விசாரித்த வரை சிறிய இடத்தில் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யார் எந்த இடத்திற்குச் சென்றாலும் குறிப்பிட்ட கூட்டம் தான் இருக்க வேண்டும். கூட்டம் அதிகமாக செல்லும் பொழுது பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
விஜய் வெளியிட்டுள்ள வீடியோ குறித்தான கேள்விக்கு, ”எனக்கு அது பற்றி தெரியாது” என ஹேமமாலினி கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி சூர்யா, ”கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தகவல்களைப் பெற மாவட்ட அதிகாரி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரை அணுகியபோது அவர்கள் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. தொடர்ந்து அவர்களை தொலைபேசி மூலமாகவும் கடிதம் மூலமும் ஈமெயில் மூலமாக தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர்கள் பதில் அளிக்கவில்லை.

இதனை நாடாளுமன்றத்தில் முன்வைப்போம். காலை முதல் கரூர் சோக சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் பேசினோம். அதன் அடிப்படையில் ஐந்து விதமான கேள்விகளை இந்த குழு தமிழக அரசிடம் முன்வைக்கிறது.
த.வெ.க பிரச்சார கூட்டத்திற்கு பெரிய இடத்தை கொடுக்காமல் சிறிய இடத்தை அனுமதிக்க காரணம் என்ன? விஜய் வரும்பொழுது மின்வெட்டு நடந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து மக்கள் தங்களிடம் தெரிவித்தனர். அந்த ஊருக்கு சம்பந்தம் இல்லாத பலர் விஜய் வந்த 15 நிமிடத்திற்குள் உள்ளே வந்துள்ளனர். இவர்களெல்லாம் யார் என்ற கேள்வி எழுகிறது. விஜய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்?.
மேலும் தமிழக உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. ஏன் அதிக அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு போடவில்லை. இவ்வளவு பேர் அங்கு வருவார்கள் என்று காவல்துறைக்கு தெரியாதா? அருகில் இருந்த தனியார் மருத்துவமனைகளுக்கு பாதிக்கப்பட்டவர்களை கொண்டு செல்லாமல் எதற்காக 25 நிமிடம் பயணம் செய்யும் தூரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்களை கொண்டு சென்றார்கள்?

8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் காலை முதல் நடத்திய விசாரணை குறித்த தகவல்கள் அனைத்தையும் அறிக்கையாக ஓரிரு தினங்களில் ஒப்படைப்போம். மேலும் விஜய் வந்தபோது செருப்பு வீசிய நபர்கள் யார் என்பது தெரியவில்லை. அது குறித்தும் பொதுமக்கள் தங்களிடம் தெரிவித்தனர். தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையம் என்பது போதாது. பொதுவாகவே அரசு அமைக்கும் ஒரு நபர் ஆணையம் என்பது அரசுக்கு சாதகமான அறிக்கையையே தரும்.
அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் வெற்றி பெற்ற ஆர்.சி.பி அணியின் அணிவகுப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்த சூழலில் அது குறித்து விசாரிக்க அம்மாநில அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. ஆனால் அந்த ஒரு நபர் ஆணையம் ஆர்.சி.பி நிர்வாகத்திற்கு எதிராகத்தான் அறிக்கை கொடுத்தார்கள். எனவே இந்த ஒரு நபர் ஆணையம் போதாது என்று மக்கள் தெரிவிக்கின்றனர்,” என்று தேஜஸ்வி சூர்யா கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய அனுராக் தாகூர், ”விஜய் பங்கேற்ற பிரச்சார நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது யார்?, போலீசார் எத்தனை பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்? சமூக வலைதளங்களில் பேசுபவர்களின் குரல்களை இந்த அரசு நசுக்குகிறது. தாங்கள் திரட்டிய தகவல்களை இந்த வார இறுதிக்குள் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவிடம் கொடுக்க இருக்கிறோம். வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றால் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு கொடுக்கலாம். உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் இதில் விசாரணை நடத்தினால் நேர்மையாக இருக்கும். பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு உரிய தகவல்களை மாவட்ட நிர்வாகம் அடுத்த மூன்று நாட்களில் இமெயில் மூலம் வழங்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்று கூறினார்.




Comments