பீகார் வாக்களார் பட்டியல் முறைகேடு! தமிழகத்தில் தொடர்ந்தால் முதல்வர் தலைமையில் போராடுவோம்! அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை!
- உறியடி செய்திகள்

- Oct 8
- 2 min read

பீகாரில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைப் போல, தமிழ்நாட்டிலும் 'எஸ்.ஐ.ஆர். (SIR - Special Intensive Revision)' என்ற பெயரில் வாக்காளர்களின் உரிமையைப் பறிக்கும் சதித் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்த முயன்றால், முதலமைச்சர் தளபதியார் தலைமையில் தமிழ்நாடு ஒன்றுசேர்ந்து போராடும் என்று திமுக முதன்மைச் செயலார், நகராட்சி அமைச்சருமான கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (அக்டோபர் 8) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறி:
'எஸ்.ஐ.ஆர்.' எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப் போவதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
ஆனால், 'இந்தியா' கூட்டணி சார்பில் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களுடன் எழுப்பிய கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் இதுவரை உரிய பதில் அளிக்கவில்லை.
ஆட்சியை மாற்றுவது வாக்காளர்களின் உரிமை; அதைத் தேர்தல் ஆணையம் கையில் எடுத்து, ஒன்றிய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவது ஜனநாயகத்தை நாசமாக்குவதற்குச் சமம். இந்தச் செயலை தமிழ்நாடு அனுமதிக்காது.
மோடி அரசு அமைந்த பிறகு சிபிஐ, ரிசர்வ் வங்கி, சிஏஜி, அமலாக்கத் துறை போன்ற தன்னாட்சி அமைப்புகள் ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறியுள்ள வரிசையில், தற்போது தேர்தல் ஆணையமும் மத்திய அரசின் கண் அசைவுக்கு ஏற்ப நடக்க ஆரம்பித்துள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி, பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதால் தான் அவர் தமிழ்நாட்டில் பிரச்சாரக் கூட்டங்களை முன்னதாகவே நடத்த முடிந்தது. இதன் மூலம் தேர்தல் ரகசியத்தைக் காக்கத் தவறியது அப்பட்டமாகத் தெரிந்தது.
பீகாரில் நடந்த மோசடி:
பீகாரில் சுமார் 8 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 'எஸ்.ஐ.ஆர்.' என்ற பெயரில் தேர்தல் ஆணையம் முதலில் 65 லட்சம் பேரையும், அடுத்து 3.7 லட்சம் பேரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது. இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர், பெண்கள் ஆகியோரை குறிவைத்து இந்த நீக்கம் நடந்தது.

இந்த முறைகேடு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியதுடன், உச்ச நீதிமன்றமே கண்டிக்கும் நிலையும் ஏற்பட்டது. புதிதாகச் சேர்க்கப்பட்ட 21 லட்சம் வாக்காளர்கள் குறித்து உச்ச நீதிமன்றம் விவரங்களைக் கேட்டுள்ளது.
பாஜக-வுக்கு எதிராக வாக்களிக்கும் இஸ்லாமியர்கள், பட்டியல் வகுப்பினர் உள்ளிட்டோரின் வாக்குகளைப் பறிப்பதே 'எஸ்.ஐ.ஆர்.'-இன் நோக்கம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை:
பீகாரில் கடைப்பிடிக்கப்பட்ட தில்லுமுல்லுகளைப் போல, தமிழ்நாட்டிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்படாமலேயே நமது வாக்காளர்களை நீக்கவும், வெளி வாக்காளர்களைச் சேர்க்கவும் பாஜகவினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களை நேர் நின்று வீழ்த்த முடியாத எதிரிகள் குறுக்கு வழியைக் கையாண்டு வெல்லலாம் எனக் கனவு காண்கிறார்கள்.
இந்தச் சதியைத் தமிழ்நாடு ஒன்று திரண்டு போராடும். "SIR என்ற அநீதிக்கு எதிராகத் தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்" என்று அமைச்சர் கே.என்.நேரு தனது செய்திக்குறிப்பில் எச்சரித்துள்ளார்.




Comments