தஞ்சை: நெல் மூட்டை பாதிப்பு பொய்யான தகவலை கூறினேனா? பழனிசாமி மீண்டும் கேள்வி?
- உறியடி செய்திகள்

- Oct 23
- 1 min read

முதல்வரும், அமைச்சர்களும் ஒரு பொய்யான கற்பனை உலகத்தில் வாழ்கிறார்கள். இவர்கள் தமிழக மக்கள் படும் துன்பங்கள், வேதனைகளை அறிவதில்லை,'' என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடும் குற்றசாட்டு! ஊடகங்கள் மீதும் கடும் பாய்ச்சல்!
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவ:

விவசாயிகள் படும் துயரங்கள் தொடர்பாக நான் எடுத்துக்கூறிய பிறகும், விளம்பர மாடல் திமுக அரசின் முதல்வர், ' நான் பொய் குற்றச்சாட்டு சுமத்துவதாகவும், விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை,' என்றுப் பேட்டி அளிக்கிறார். ஆனால், விவசாயத்துறை அமைச்சரோ 16 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெல் பயிர் பாதிப்படைந்துள்ளது என்று பேட்டி கொடுக்கிறார். உணவுத்துறை அமைச்சர் நெல் கொள்முதல் செய்ய தாமதம் ஏற்பட்டதற்கு மத்திய அரசு காரணம் எனக்கூறுகிறார்.
கும்பகர்ண தூக்கத்தில் இருந்த இந்த திமுகஅரசு இப்போது 150 அலுவலர்களுக்கு மேல் டெல்டா பகுதிகளை ஆய்வு செய்ய அனுப்பியுள்ளது.நாட்டில் என்ன நடக்கிறது ? களத்தில் உள்ள பிரச்னை என்ன? என்பதைக் கூட அறிந்து கொள்ளாத முதல்வர், இன்று தமிழக முதல்வராக இருக்கிறார். இது தான் தமிழகத்தின் துரதிர்ஷ்டம்.
அதிமுக ஆட்சியில் எதற்கு எடுத்தாலும் குறை சொல்லும் ஒரு சில பத்திரிகைகளும், ஊடகங்களும் அரசியல் கட்சி தலைவர்களும், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் இந்தக் கூற்றை கேட்டுக் கொண்டு மவுனமாக இருக்கின்றனர். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்படுவதற்குப் போராடுவதாக் கூறும் கம்யூனிஸ்ட்களும் நெல் கொள்முதலில் நடக்கும் குளறுபடிகளை பற்றி எதுவும் கூறாமல் மவுனம் காப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.
விவசாயிகளிடம் இருந்து நெல்லை முழுமையாகக் கொள்முதல் செய்ய முடியவில்லை என்பதைக் கூட உணரவில்லை இந்த திமுக விளம்பர மாடல் அரசு. டெல்டா மாவட்டத்தில் என்ன நடக்கிறது என முதல்வருக்கு தெரியவில்லை.
தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால், தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது எனக்கூறுவார்கள். முதல்வரும், அமைச்சர்களும் ஒரு பொய்யான கற்பனை உலகத்தில் வாழ்கிறார்கள். இவர்கள் பொதுவான ஊடகங்களையோ, பத்திரிகைகளைப் பார்த்தோ தமிழக மக்கள் படும் துன்பங்கள், வேதனைகளை அறிவதில்லை. நேரில் சென்று பார்ப்பதில்லை.இவர்களுக்கென்று ஒரு உலகம். அதில் இவர்களுக்கு வேண்டிய அதிகாரிகள், உளவுத்துறை ஊடகங்கள், பத்திரிகைகள். மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள் என்று தங்களுக்குத் தாங்களே அதிகாரிகள் சொல்லிக் கொண்டு கனவு உலகத்தில் வாழும் இவர்களை நம்பிய விவசாயிகளும், மக்களும் தான் வாழ்கிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.




Comments